Wednesday, April 30, 2008

<>ந‌ன்றி!..ந‌ன்றி!...ந‌ன்றி!<>


அன்பினிய தமிழ் உலக நண்பர்களே!

வணக்கம்.

பாரதிதாசன் விழா தமிழ் உலகில்
கடந்த 21ம்தேதி துவங்கி இன்று
29ம்தேதிவரைநடைபெற்றது.
இவ்விணைய விழாவில்தமிழ் உலக நண்பர்களும்,
நம் வேண்டுகோளுக்கு இணங்க வெளியிலிருந்தும்
விழாவுக்கான உரைகளை குறைந்த கால அவகாசத்தில்
செய்து தந்தமைக்காக‌அவர்களுக்கு நன்றி சொல்லக்
கடமைப்பட்டுள்ளேன்.

இணைய இதழ் ஆசிரியர்களான திரு.அண்ணா
கண்ணன்(சிஃபி தமிழ்)பதிவுகள் இணைய இதழ்
ஆசிரியர் திரு.வ.ந.கிரிதரன், தென்றல் இணைய
இதழ்ஆசிரியர் திரு.மதுரபாரதி ஆகியோருக்கு
என் இனிய கைகூப்புகளும்,இதயமார்ந்த
நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒவ்வொருவ‌ரும் ப‌ல்வேறு ப‌ணிச்சூழ‌ல்க‌ளில்
ந‌ள்ளிர‌வுதாண்டிய‌ நேர‌த்தில் என்னைஅழைத்து
இதோ உங்களுக்கு க‌ட்டுரை என்று ம‌ற‌வாம‌ல்
தந்த‌நேய‌ம் என் க‌ண்க‌ளைப் ப‌னிக்க‌ச் செய்கிற‌து.

தமிழ் உலகில் இல்லையென்றாலும் நம் அன்பு வேண்டுகோளுக்குச்செவிமடுத்து குறுகிய காலத்தில்
அவர்களுக்கு பல்வேறுசூழல் சரிவராத நிலையிலும்
அன்பிற்குரிய நண்பர்களும்பேராசிரியர்களுமான முனைவர்.கோவி.இராசகோபால்(தில்லி பல்கலைக்
கழகம்) பேராசிரியர்.பெஞ்சமின் லெபோ(பிரான்சு)
(இவர் நம் தமிழ் உலக‌உறுப்பினராகிவிட்டார்கள்)
ஆகியோருக்கு என் அடிமனத்துநன்றிகள்!

இதே போல‌ க‌விஞ‌ர்.ம‌துமிதா அவ‌ர்க‌ள் உரை த‌ர‌
ஒப்புக்கொண்டுபின்ன‌ர் க‌ணினி அவ‌ர் காலை
வாரிவிட‌ எப்ப‌டியோ அடிச்சுப்பிடிச்சுமூச்சுவாங்க‌
ஓடிவ‌ந்து ஓட்ட‌ப்ப‌ந்த‌ய‌த்தில் வென்ற‌ திருப்தியோடு
அவ‌ர் விழா உரை ஈந்த‌ பாங்கு என்னால் எளிதில்
ம‌ற‌க்க‌ இய‌லாது.அவ‌ர்க‌ளுக்கும் என் சிர‌ம்தாழ்த்துக்க‌ள்.
ந‌ன்றிக‌ள்!

விழாவில் ப‌ங்கெடுத்துகொண்ட‌ திரு.அன்பு, அய்யா.சிங்கை.
திரு.கிருஷ்ண‌ன், அய்யா.இராமகி, திருவாட்டி.புதிய‌
ம‌தாவி, திரு.இண்டிராம், அன‌லை திரு.திரு., சிறீ.சிறீத‌ர‌ன்,
ரியாத் திரு.வெற்றிவேல், ம‌லேசியா.சுப‌.ந‌ற்குண‌ன்,
ஆகியோருக்கு என் க‌னிவான‌ ந‌ன்றியை ச‌ம‌ர்ப்பிக்கிறேன்.

அய்யா.இராம‌கி அவ‌ர்க‌ள் விடுதலை ஆசை பாட‌லை
விழாவில் இட்டுஅதை யாரேனும் பாடித்தர‌வேண்டும்
என்ற‌ வேண்டுகோளை வைத்தார்க‌ள்.ஒருசில‌ரை
தொட‌ர்பு கொண்டேன். ஒரு சில‌ர் இய‌லாமையைத்
தெரிவித்தாலும்என் இனிய‌ அன்புச் ச‌கோத‌ர‌ர் அழ‌கி
விச்வ‌நாத‌ன் ம‌றுநாளே பாடி... சும்மா அற்புத‌மாக‌
க‌ணீர் குர‌லில் பாடி அச‌த்தினார்.
அதை வ‌லையில் ப‌திக்க‌ வேண்டும்என்று வ‌ந்த‌போது
ந‌ண்ப‌ர் இல‌ங்கை எம் ரிசான் செரீப் உத‌வினார்.
ஆக‌ இந்த‌ தேனினுமினிய‌ பாட‌ல் உங்க‌ள் காதுக‌ளில்
ரீங்காரமிட‌ உத‌விய‌ இரு ந‌ல்லுள்ள‌ங்க‌ளுக்கும் இந்த‌
நேர‌த்தில் ந‌ன்றி சொல்வ‌தில் ம‌கிழ்கிறேன்.
கேளுங்க‌ள்

கேட்டு ம‌கிழ்ந்து பின்னூட்ட‌மிடுங்க‌ள். அதுதான் அவ‌ர்க‌ளுக்கு நாம் கொடுக்கும்உற்சாக‌ம்,ஊக்குவிப்பு!

விடுதலை ஆசை
(தனித்தமிழ் வண்ணம்)
தனதன தான தனதன தான
தனதன தான தன தானா
கருவிழி ஓடி உலகொடு பேசி
எனதிடம் மீளும் அழகோனே
கழைநிகர் காதல் உழவினில் ஆன
கதிர்மணி யே,
என் இளையோய் நீ பெரியவ னாகி
எளியவர் வாழ்வு பெருகிடு மாறு
புரியாயோ? பிறர்நலம் நாடி
ஒழுகிணை யாக இருசெவி வீழ
மகிழேனோ?
தெரிவன யாவும் உயர்தமி ழாக வருவது
கோரி உழையாயோ? செறிதமிழ் நாடு
திகழ்வது பாரீர் என
எனை நீயும் அழையாயோ?
ஒருதமி ழேநம் உயிரென யாரும்
உணவுறு மாறு புரியாயோ?
உயர்தமிழ் நாடு விடுதலை
வாழ்வு பெறஉன தாசை பெருகாதோ?

ந‌ண்.நாக‌ இளங்கோவ‌ன் ந‌ட்ச‌த்திர‌ வார‌த்தில்
சிக்கி ந‌ம் விழாவில்ப‌ங்க‌ளிப்பு குறைந்து போன‌து
ஒருவ‌கையில் துர‌திர்ட்ட‌ம்தான்!

இறுதியாக என் வழக்கமான பணியுடன்,
இவ்விழாச் சிறக்க‌ ஒருங்கிணைத்த‌ல்,
ஒவ்வொருநாளும் த‌மிழ் உல‌க விழா உரையை

வ‌லைப்ப‌திவில் இடுத‌ல் போன்ற ப‌ணிக‌ள்
என் ப‌ங்க‌ளிப்பைச் செய்ய‌ இய‌லாம‌ற் போன‌து
இன்னொரு துர‌திர்ட்ட‌ம்.
விழாவில் ப‌ங்கேற்க‌ எண்ணியும் இய‌லாம‌ற்
போனவ‌ர்கள் அடுத்த‌ ஆண்டில்இன்னும்
உற்சாக‌த்தோடு ப‌ங்கெடுக்க‌ கேட்டுக்கொள்கிறேன்.

எல்லோருக்குமான என்
இனிய‌ ந‌ன்றிகள் மீண்டும்!
ந‌ட்புட‌ன்,
ஆல்ப‌ர்ட்_..
**************************
நண்பர் ஆல்பர்ட்,

சிறப்பாக எழுச்சி தரும் வகையில் பாவேந்தர் விழாவை நடத்தியமைக்குப் பாராட்டுக்கள். பல்வேறு பணிகளுக்கு இடையேவலைப்பதிவிலும் சேர்த்து வைத்ததற்கு உங்களைஎவ்வளவு பாராட்டினாலும் போதாது.
இணைய உலகில் பல இடங்களிலும்பாவேந்தர் பற்றிய கட்டுரைகள் வந்திருந்தன. பார்ப்பதற்கு இதமாக இருந்தது.மென்மேலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
அன்புடன்,
நாக.இளங்கோவன்.
*****************************************************************
அன்புசால் நண்பர் ஆல்பர்ட் அவர்களுக்கு,

கனிவான கைகுவிப்பு!

மகத்தானதொரு பணியை ‍ ஒரு
வாரமாகச் சத்தமின்றி -ஆர
வாரமின்றிச் செய்து முடித்திருக்கறீர்கள்!
'இருதயம் மலரக்
கரமலர் மொட்டித்துக்
கண்துளி அரும்பச்
சாயா அன்பினை நாள்தொறும்' அளித்து
நன்றி கூறுகிறேன்.
வாழ்க தங்கள் தமிழுள்ளம்
வளர்க தங்கள் தமிழ்ப் பணி!
அப்பழுக்கில்லா அப்பணியில்
எப்போதும் பங்குகொள்ள அணியமாகவே உள்ளேன்.

நனி நன்றியன்
பெஞ்சமின்.
************************************************************
அன்பினிய ஆல்பர்ட் அண்ணன்,

பாவேந்தரின் விழாவை தனிமனிதராக நடத்திய
உங்களுக்கு நன்றிஅடுத்த ஆண்டு பண்புடன்
குழுமம் பாவேந்தர் வாரத்தை மிகச்சிரத்தையோடு
முன்னெடுத்துச் செல்லும். அந்தப் பொறுப்பை
இப்போதே நீங்கள் ஏற்றுக் கொள்ளஅன்புடன்
வேண்டுகிறேன்
பாவேந்தர் வாரத்தில் புதிய போட்டிகளும்
பாவேந்தர் குறித்த செய்திப்பரிமாற்றங்களும்
பாவேந்தர் பாடல்களில் தங்களுக்கு
விருப்பமானவற்றைப் பகிர்ந்து கொள்ள
ஏதுவானஇழைகளும் உருவாக்கப்படும்.
நண்பர்கள் ஒத்துழைப்பை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
அடுத்த தமிழ்ப்புத்தாண்டிலேயே இது குறித்த
அறிவிப்பை நாம் செய்யலாம்மீண்டும் உங்களுக்கு
நெஞ்சம் நிறைந்த நன்றிகள்!
நட்புடன்
உங்கள்
ஆசிப் மீரான்_..

அண்ணாகண்ணன்-ஆசிரியர்,சிஃபி.இணைய இதழ்






<>புரட்சியாளர் பாரதிதாசன்<>
-அண்ணாகண்ணன்,
ஆசிரியர்,சிஃபி.இணைய இதழ்.

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்

கழையிடை ஏறிய சாறும்

பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப்

பாகிடை ஏறிய சுவையும்,

நனிபசு பொழியும் பாலும் - தென்னை

நல்கிய குளிரிள நீரும்,

இனியன என்பேன் எனினும் - தமிழை

என்னுயிர் என்பேன் கண்டீர்!

என் பள்ளிப் பருவத்துப் பேச்சுப் போட்டி
களில் நான் இந்தப் பாடலை முதலில்
கூறிய பிறகு, என் பேச்சைத் தொடங்கி
இருக்கிறேன். நான் மட்டுமில்லை; ஏனைய
மாணவர்களும் பாவேந்தரின் ஏதேனும்
ஒரு பாடலைப் பாடித் தொடங்குவதை
வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

அது, பேச்சுக்கு அழகும் கம்பீரமும் சேர்க்கவும்
முதலில் நடுவர்களிடம் ஒரு நல்லெண்ணத்தை
ஏற்படுத்தவும் பெரிதும் பயன்பட்டது.

தொடர்ந்து அவரின் பாடல்களைப் படித்து
அதன் நயங்களில் மனம் சொக்கியது உண்டு.
பிறகு இதே தாக்கத்தில், ஆனால், அவருடைய
நடையிலிருந்து மாறி இருக்கவேண்டும்
என்ற எண்ணத்துடன் என் 18 வயதில் ஒரு
பாடல் இயற்றினேன்.

சீனிதனை, வெல்லத்தை,

தேங்காய் பர்ப்பிதீஞ்சுவையை,

அதிரசத்தை, மைசூர் பாகை,

தேனதனை, சாங்கிரியை, பஞ்சாமிர்தத்

தித்திப்பை, அல்வாவை, குஞ்சா லாடை,

பானகத்தை, பாதுசாவை, பால்

கோவாவை,பாற்சுவையை

இனிப்பென்று சொல்வேன். ஆனால்

வானவளை வளத்தமிழை

வண்ணப் பூவைவாழ்வென்பேன்

உயிரென்பேன் வையம் என்பேன்!
இப்படியாக என் தொடக்க காலக் கவிதை
முயற்சிகளில் அவரின் பாதிப்பு இருந்தது.
பிறகு வேறு திசையில் பயணிக்கத்
தொடங்கினேன்.
ஆயினும் என்பதின் பருவத்தில்
பாவேந்தரின் படைப்புகள் எனக்கு
உணர்வூட்டியது உண்மை.

பின்னர் என் 20களில், பாவேந்தருடன்
நெருங்கி இருந்த சுரதா, பொன்னடியான்,
ஈரோடு தமிழன்பன் போன்றோருடன்
பழகும் வாய்ப்பு கிட்டியது.

அவர்களின் பாராட்டுகளையும்
பெற்றுள்ளேன். என் இரண்டாம்
கவிதைத் தொகுப்புக்குப் பொன்னடியான்
அணிந்துரை வழங்கினார்.

சுரதாவையும் ஈரோடு தமிழன்பனையும்
பேட்டி கண்டதுண்டு. தமிழன்பன் கவிதையைப்
பெற்று, அமுதசுரபியில் நான் ஆசிரியராக இருந்தபோது வெளியிட்டதுண்டு.

பாவேந்தரின் பெயரன் புதுவை கோ.பாரதியுடன்
இணைந்து, சென்னை வானொலி நிலையத்தில் பணியாற்றியுள்ளேன்.'கனகசுப்புரததினம் எப்படி
தன் பெயரை பாரதிதாசன் என்று வைத்துக்
கொண்டதன் மூலம் பாரதிக்கு அடுத்தபடியாக
பாரதிதாசன் என்று கூறும்படி வைத்தாரோ,
அதே பாணியைப் பின்பற்றி நான் சுப்புரத்தின
தாசன் என்று வைத்துக்கொண்டேன்.

இனி வருபவன், பாரதி, பாரதிதாசன், சுரதா
என்றுதானே கூறுவான்' என வேடிக்கையாகச்
சுரதா என்னிடம் சொன்னதுண்டு.பாரதிதாசனின்
கவிதை வீச்சு, அபாரமானது.

அழகுமிகு சொற்செட்டு, கூரிய கருத்துகள்,
புதுமையான வெளிப்பாடு, சமூகவியல்
கண்ணோட்டம்... என அவரின் படைப்புகள்
பலவும் அனைவரையும் காந்தமாய்க் கவர்ந்தன.
தமிழ், தமிழர், தமிழ்நாடு என்ற மையத்தில் நின்று
உலகளாவிய விசாலப் பார்வையால் மக்களை
விழுங்கினார்.

கவிதைகளால் பலரையும் ஈர்த்தவர் என்ற
போதும் மேலும் பல சிறப்புகளும் அவருக்கு
உண்டு. அவர் பாண்டியன் பரிசு என்ற தன்
காப்பியத்தைத் திரைப்படமாக எடுக்கத்
தானே சொந்தமாகப் பட நிறுவனத்தைத்
தொடங்கினார். திரைப் பாடல்கள் புனைந்தார்.
புதுவையில் அவர் சட்டமன்ற உறுப்பினராக
இருந்தார். இலக்கியம், திரைப்படம், அரசியல்
ஆகிய துறைகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டார்.
பெரியாரின் கொள்கைகளைத் தன் பாடல்கள்
மூலம் பிரசாரம் செய்து, சமூக விழிப்புணர்வுக்குச்
சிறந்த பங்காற்றியவர் இவர்.

இன்றும் திராவிடம், தமிழ், பெரியாரியம்,
பொதுவுடைமை.... போன்ற பின்புலங்களைக்
கொண்டோரின் வீடுகளுக்குச் சென்றால்
அங்கே பாரதிதாசனின் புகைப்படம் வீற்றிருப்
பதைக் காணலாம். ஹிட்லர் போன்று குறுகிய
மீசையும் மூக்கு கண்ணாடியும் முறைப்பான
பார்வையும் கொண்ட இவரிடமிருந்து தமிழ்
பீரிட்டெழுந்தது!

காதலோ, வீரமோ, வன்மையோ, மென்மையோ,
மகிழ்ச்சியோ, சோகமோ எந்த உணர்வையும்
அவரின் சொற்கள் அற்புதமாக ஏந்தி வந்தன.
புரட்சிக் கருத்துகளைப் பாரெங்கும் பரப்பியதில்
அவரது பங்களிப்பு முக்கியமானது. பெண்
விடுதலை, சமூக விடுதலை, மண் விடுதலை....
என அவரின் ஒவ்வொரு கருவும் இந்தச்
சமுதாயத்தில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தி
உள்ளன. தொடர்ந்து ஏற்படுத்தியும் வருகின்றன.
ஒவ்வொரு தலைமுறைக்கும் புதிய கருத்துகளை
அவரின் பாடல்கள் தரும் என்ற நம்பிக்கை
எனக்கு உண்டு.
பாவேந்தர் பிறந்த நாளை முன்னிட்டு 29.4.1995
அன்று சென்னை கடற்கரையில் பாரதிதாசன்
சிலைக் கவியரங்கம் நடந்தது. சிலையருகே
கவிஞர்கள் கூடி, பாவேந்தரை வாழ்த்திப்
பாடுவதாக நிகழ்ச்சி. அதில் நானும் பங்கு
பற்றிக் கவிதை பாடினேன்.
அதிலிருந்து சில வரிகள் இங்கே:

பகுத்தறிவற்ற சமுதாயம் அன்று

இருளில் மட்கியது - நீ

வெகுண்டெழுந்து சீறிய சீறலில் வீரம்

வெட்கியது!

பூவுக்குள் எப்படி

புயல் வந்ததென்றுபார்த்தோர்

வியந்தார்கள் - உன்

பாவுக்குள் அடிக்கடி எரிமலை

வெடிப்பதால்

தீயோர் பயந்தார்கள்!

பாரதிதாசன் உண்மையில் புரட்சியாளரே.
அவரைப் புரட்சிக் கவிஞர் என்று அழைப்பது
சாலப் பொருந்தும்.
இப்படிப்பட்ட புரட்சியாளருக்கு இணைய உலகில்..
தமிழ் உலகம்ம‌டலாடற்குழுவில் தொடர்ந்துவிழா
எடுத்து வருவதை பாராட்டி மகிழ்கிறேன்.

-அண்ணா கண்ணன்_..
==================================================
- Annakannan
Tamil Editor
http://tamil.sify.com/

Tuesday, April 29, 2008

பாரதிதாசன்வாரம்-சுப.நற்குணன்,மலேசியா


29-4-2008ஆம் நாள் பாவேந்தர்
பாரதிதாசனார் தமிழரிடையே

தமிழ் மண்ணில்பிறந்த நினைவு நாள்.
அவருடைய நினைவேந்தலாக

இக்கட்டுரைவெளியிடப்பெறுகிறது)


சுப.நற்குணன்,
மலேசியா.
<>பாரதிதாசன்....!<>
உண்மைத் தமிழ் உணர்வாளர்களுக்கு நன்கு பழகிய பெயர்.தமிழர் உள்ளங்களிலும் நாவிலும் என்றென்றும் நிலவிவரும் தமிழ் உரு ஒன்றின்சொல்லுருவம் அது!
எனக்குக் குயிலின் பாடலும்; மயிலின் ஆடலும்; வண்டின் யாழும்; அருவியின்முழவும் −னிக்கும்; பாரதிதாசன் பாட்டும் −னிக்கும்' என மொழிகின்றார்தமிழ்த்தென்றல் திரு.வி.க.
''பழமை - மதவாதம் - ஆசாரம் ஆகியவற்றில் ஊறிக் கிடந்த தமிழ்மக்களிடையேஅவருடைய பாடல்கள் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. ஆதலால் −வரைப்புரட்சிக்கவி எனலாம். அமெரிக்கா கண்ட புரட்சிக்கவி வால்ட் விட்மன் போல்தமிழ்நாடு கண்ட புரட்சிக்கவி பாரதிதாசன்'' எனக் கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை குறிப்பிடுகிறார்.
''மாபாவலன் பாரதியார் −ன்று நமக்கு வைத்து விட்டுப் போன சொத்துக்கள் பல.அவற்றுள் முகாமையாவை ஞானரதம், குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியனவும்கனகசுப்புரத்தினம் என்ற பாரதிதாசனும்'' எனக் குறிப்பிடுகிறார்புதுமைப்பித்தன்.
''நிமிர்ந்த பார்வை, அச்சமில்லை என்று பறைசாற்றும் முறுக்கான மீசை, வயதைவிழுங்கிய வாலிப வீறு, உணர்ச்சி பொங்கும் பேச்சு, புதுமை வேட்கை கொண்டஉள்ளம் ஆகியவற்றின் கலவையே பாரதிதாசனார்'' என முழங்குகிறார் சுத்தானந்தபாரதியார்.
பாரதிதாசனின் உள்ளத்தில் பொங்கி எழுந்த பாவுணர்வு தமிழர் விடுதலைநோக்கிப் புதுவழியில் நடையிடல் ஆயிற்று! அது புரட்சி மனப்பாங்குவாய்ந்தது! எனவேதான், பாரதிக்கு வாய்க்காத புரட்சிப் பாவலர் என்ற பட்டம்பாரதிதாசனுக்கு மக்களால் கொடுக்கப்பெற்றது என்று எழுதுகிறார் பாவலரேறுபெருஞ்சித்திரனார்.
''புரட்சிகரமான கருத்துக்களைத் துணிவோடு வெளிப்படுத்திய முதல் கவியும்கடைசிக் கவிஞரும் பாரதிதாசனார் ஒருவரே. அவருக்குப் பிறகு அவருக்கு ஈடாகவேறு எந்தக் கவிஞரும் இதுவரை தோன்றவேயில்லை. அவ்வாறு தோன்றியவர்களும்பழமைக் கருத்துக்களைக் கொண்டவர்களாகவே உள்ளனர். பாரதிதாசன் போல புரட்சிக்கவிஞர்கள் தோன்றியிருந்தால், கடந்த இரண்டு மூன்றாயிரம் ஆண்டுக்காலமாகதமிழரிடையே இழிவுகளும் இன்னல்களும் −ருந்திருக்குமா?'' எனக் கேள்விகேட்கின்றார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.
இப்படியாக, தமிழகத்தின் மிகச் சிறந்த அறிஞர்களாகவும்,சிந்தனையாளர்களாகவும், தலைவர்களாகவும் விளங்கிய பலரும் பாரதிதாசனின்வரலாற்றுச் சிறப்பு எத்தகையது என்பதைக் கூறிச் சென்றுள்ளனர்.
ஏறத்தாழ எழுபத்து நான்காண்டுகள் வாழ்ந்து, செந்தமிழ்க்கும் தமிழர்க்கும்தமிழ்நாட்டிற்கும் நல்லரிய தொண்டுசெய்து, எண்ணற்ற பாமணிகளை வாரி வழங்கி,தமிழே மூச்சாய், வாழ்வாய், இன்பமாய் இருந்தவர் பாரதிதாசன் என்னும்புனைப்பெயர் கொண்ட திரு.கனக.சுப்புரத்தினம்.
'நல்லுயிர், உடம்பு, செந்தமிழ் மூன்றும் நான் நான் நான்' என்று தம்தோற்றத்தை விளக்கும் அவ்வரிய தமிழ்ப்பாவேந்தர், வெறும் பாரதிதாசனாகஇல்லாமல், தமிழ்ப்புரட்சி செய்த முதல் புரட்சிப் பாவலராய் தமிழகத்திடையேவாழ்ந்து வந்தார். அவர் வரலாறு தமிழரின் மறுமலர்ச்சி வரலாறாகும்;தமிழ்நாட்டின் உணர்வெழுச்சிக் கதையாகும்; தமிழர்தம் மான உணர்வுக்குக்கலங்கரை விளக்காகும்.
பாரதியாரின் உள்ளம் இந்திய நாட்டு விடுதலையை எதிர்நோக்கிப் பாடியபொழுது,பாரதிதாசன் தமிழ்நாட்டு விடுதலைக்கெனக் குரல்கொடுத்தார். தமிழ்மக்களின்ஆறாத் துயரும் அவல நிலையும் பாரதிதாசனின் உள்ளத்தில் ஒரு புத்தெழுச்சியைஉண்டாக்கின. இதன் பயனாக, தமிழுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் உழைப்பதுஒன்றே தம் வாழ்வென வரையறுத்துக் கொண்டார்.
"எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்தனையீன்ற தமிழ்நாட்டு தனக்கும் என்னால்தினையளவு நலமேனும் கிடைக்கு மென்றால்,செத்தொழியும் நாள்எனக்குத் திருநாளாகும்" என்பது அவர் கூற்று. இப்புரட்சிமனப்பான்மையால் இவர் பெற்ற துயரங்கள் பலப்பல. இவர் பெறாத நன்மைகள் கோடி.இருப்பினும் 'தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை' என்று தம்மைத் தாமேதேற்றிக் கொள்கிறார்.
தமிழன் உய்வுக்கும் வாழ்வுக்கும் அடிப்படையாக நிற்பது தமிழே என்றுகூறித்தமிழ் இளைஞர் தமக்கு இவர் ஊக்கம் கொடுப்பதைப்போல் வேறு எந்தப் புலவரும்செய்ததில்லை.
"உரம்பெய்த செந்தமிழுக் கொன்றிங்குநேர்ந்ததென உரைக்கக் கேட்டால்,நரம்பெல்லாம் இரும்பாகிநனவெல்லாம் உணர்வாகிநண்ணி டாரோ" என்றும், "வண்டமிழ் நைந்திடில் எது நம்மைக் காக்கும்?"என்றும் தமிழ் உணர்வை ஊட்டினார். "சான்றாண்மை இவ்வுலகில் தோன்றத்துளிர்த்த தமிழை" அவர் காதலித்தது போல் கம்பனும் காதலிக்கவில்லை. தமிழேஅவர் உயிர்! மூச்சு! அவர் தமிழின் உருவம்!
"தமிழ், தமிழினம், தமிழிலக்கியம் இவற்றில் ஒன்றுபோம் எனில் மற்றவும்ஒழியும்." என்று தமிழர்க்கும் தமிழ்ப்புலவர்க்கும் இருக்கவேண்டிய மொழி,இன நலனையும் கடமையையும் எடுத்துக்கூறினார்.
"பங்கம் விளைத்திடில் தாய்மொழிக்கே - உடல் பச்சை ரத்தம் பரிமா றிடுவோம்"என்று தீப்பொறி பறக்கும் தமிழ் உணர்ச்சியைத் தமிழரிடையே விதைத்து தமிழ்;தமிழர் விடுதலைக்கு வித்திட்ட விடுதலைப் பாவலர் தமிழக வரலாற்றில்பாவேந்தர் ஒருவரே. இவ்வுலகிடை தமிழும் தமிழரும் நிலைத்திருக்கும் காலம்முழுமைக்கும் பாவேந்தர் பாரதிதாசனாரின் புகழ் மறையாதிருக்கும்; உண்மைத்தமிழர் அவரை மறவாதிருப்பர்.
தனித்தமிழ் போற்றும் என்ற மலேசிய நண்பர் திரு.சுப.நற்குணன் அவர்களின்பாவேந்தரின் நினைவேந்தல் கீழே இணைத்துள்ளேன்.சிறந்த தமிழ்பணி செய்யும் அவரின் வலைப்பதிவு


காணத்தக்கது.
அன்புடன்,
நாக.இளங்கோவன்

<>பார‌திதாச‌ன் வார‌ம் - கவிஞர்.ம‌துமிதா<>


<>புரட்சிக்கவி என

அழைப்பது ஏன்?<>


==கவிஞர்.ம‌துமிதா==

'ஆணுக்குப் பெண் இளைப்பில்லை
காணென்று கும்மியடி' என்றார் பாரதி. '
ஆணுக்கு பெண் நிகர்' என்றவர் பாரதியின்
தாசனான பாரதிதாசன்.

நூற்றாண்டு கண்ட பாரதிதாசன் 20 ஆம் நூற்றாண்டின்
தமிழ் இலக்கிய வரலாற்றில் நீங்கா இடம் ஏற்படுத்திக்
கொண்டவர். 'பாரதிதாசன் மாத்திரம்தான் தாம் கண்டதை
எழுதுகிறார்; பார்த்ததை எழுதுகிறார்; புரியாத விஷயங்கள்
தெரியாத விஷயங்கள் பற்றியேனவர் எழுத மாட்டார்'
ஏனென்றால் அப்படி எழுதினால் இன்று இல்லாவிட்டால்
நாளை பரிகாசத்துக்கு இடமாகும் என்பதை அறிந்திருந்தவர்
என்கிறார் டாக்டர் சகத்ரட்சகன்.

கனகசபை முதலியாருக்கும் இலட்சுமி அம்மையாருக்கும்
புதுச்சேரியில் 29.4.1891 புதன்கிழமை இரவு 10.15க்குப் பிறந்தார்.
தமிழாசிரியராய் 1909 - 1946 (32 ஆண்டுகள்) பனிபுரிந்தார்.
தமிழ், பிரெஞ்சு ஆகிய மொழி அறிந்திருந்தார்.
பழனியம்மாளை 1920ல் தனது 36 ஆவது வயதில் திருமணம்
புரிந்தார். குழந்தைகள் சரசுவஹி, கோபதி (மன்னர் மன்னன்), வசந்தா
(வேனில்) ரமணி ஆகியோர்.

அரசர்கள், செல்வச் செழிப்புமிக்க அவரின் அரண்மனை வாழ்க்கை,
கடவுள்கள், அவர்தம் பெருமைகள் பழைய கவிஞர்களிடையே
திருப்புமுனையாக வந்தவர் பாரதிதாசன் சமுதாயத்தின்பால்
திரும்பியது அவர் பார்வை. ஏழை - செல்வந்தன், உயர்ந்தவர் - தாழ்ந்தவர்,
முதலிய வேறுபாடுகளையும் மூடநம்பிக்கை, சமயம், கடவுள், பெண்ணடிமை
ஆகியவற்றை சுட்டெரித்த சிவப்பு சூரியன் அவர். தமிழ்க்கவிதையில்
பாரதிதாசன் என்பது வெறும் பெயரன்று. ஒரு புரட்சியின் குறியீடு.
பெரியாரின் வழித்தோன்றலான பாரதிதாசன் சமூக நீதியை
வரவேற்றும் பொருளியல் அநீதியை எதிர்த்தும் பாடினார்.

அறிஞர் அண்ணா....

புரட்சிக்கவி என அவரை அழைப்பது ஏன்?
இந்த வினாவுக்கான பதில் அறிஞர் அண்ணாவின்
வாயிலாக வருவதைப் பாருங்கள்.
வைதிகம் என்னும் குறுக்குச் சங்கிலியுடன் அக்காலக் கவிதைகள்
பிணைக்கப்பட்டிருந்தன. கவிதாரசத்துடனே அவை கல்லூரி
மாணவர்களின் நெஞ்சிலே நஞ்சைப் பாய்ச்சுகின்றன.
அதனால்தான் நம்முடைய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்,
'அந்தக் குறுக்குச் சங்கிலியை வெட்டு' எனக் கூறுகிறர்.
'கூர் இல்லாத வாளைக் கூர் ஆக்கு' என்கிறார்'குள்ள உள்ளத்தைக் கொலை செய்''கூனாதே நிமிர்ந்து நட''மேகத்திரளிலிருந்து நிலவொளி வெளியே வரட்டும்''அந்த உலகத்தைப் பற்றிப்பாடாதே!
இந்த உலகத்தைப் பற்றிப் பாடு!'
'காலத்துக்கு அடிமை ஆகாதே''இலக்கணக் கட்டுப்
பாட்டுக்குப் பயப்படாமல் பாடு' என்கிறார்.

இதனாலேயே இவரை புரட்சிக்கவி என அழைக்கிறோம்.
உயிர்க்கவி உண்மைக்கவி என அழைக்கிறோம் என
அண்ணா குறிப்பிடுகிறார்.

தமிச் சமுதாய மறுமலர்ச்சிக்கும் சர்வதேசிய
வாழ்வொருமைக்கும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
ஆற்றியுள்ள பணி அளப்பரியதாகும். கவிஞர்கள் உணர்ச்சியில்
குமுறிக்கொட்டும் சொற்கள் காலமாற்றங்களில் சமூக வட்டங்கள்
ஆகின்றன. சாதிமத சார்பின்மை, பெண்கள் முன்னேற்றம்,
மூடப்பழக்கங்கள் ஒழிப்பு, சமூக உடைமைச் சமூக அமைப்பு
ஆகியவை பாவேந்தரின் சமூகம் குறித்த கனவுகள்.

இன்று இவை அரசாலும் சான்றோராலும், பொதுமக்களாலும்
இன்றியமையா வாழ்க்கைக் குறிக்கோளாக உணரப்படுகின்றன.
அவ்வகையில் தீர்க்கதரிசியாகவும் அறியப்படுகிறார்.
புரட்சிக் கவிஞரின் உவமைச்சிறப்பு, பொதுவுடமைச்
சிந்தனை, இல்லறம், பிள்ளைப்பேறு, வாழ்க்கைப் பண்பாடு
ஆகியவை குறித்த அவரின் எண்ணம், சமயம் கடவுள் குறித்த
கருத்துகுழந்தைகள் இளைஞர், பெண்கள் என அனைவருக்கும்
தனித்தனியே கவிதை எழுதியமை, அரசியல் சார்புகள் தத்துவநிலை
இவை அனைத்தைக் குறித்தும் சிந்திக்கவைப்பவை அவரின் படைப்புகள்.

'சாதி உயர்வென்றும் செல்வத்தால் உயர்வென்றும்
போதாக்குறைக்குப் பொதுத்தொழிலாளர் சமூகம் மெத்த
இழிவென்றும் மிகப் பெரும்பாலானோரை கத்திமுனை
காட்டிக் காலமெல்லாம் ஏய்த்துவரும் பாவிகளைத்'
திருத்த வேண்டும் என்று ஏற்றதே பாவேந்தர்
கொண்ட இலக்கியப்பணி.

வெந்ததைத் தின்று விதிவந்தால் சாவோமென்று
வாழ்க்கைப் பயணம் உயர வழிகாணாது விதியின்
மேல் காரணம் சுமத்துவோருக்கு, 'மிதிபட்டுச்
சாவதற்கும், மேம்பட்டு வாழ்வதற்கும் காரணம்
மதியல்ல. தலை எழுத்தே; என்பவனை ஒரு தமிழன்
மதிக்கலாமா' என எழுதிமுழங்கியவர். 'எல்லாம் அவன்
செயலே' என்று சொல்லி பிறர்பொருளை வெல்லம்போல்
அள்ளி விழுங்கியவரைக் கண்டு வெறுத்து கடவுள் மறுப்பு
கோட்பாட்டை பாடி நிறுவினார் கவியரசர்.
வேத வேதாந்தம் பேசியவர் சிந்தையும் மொழியும் செல்லாத
உலகம் என்று இல்லாத நிலையைச் சொல்லிக் குழம்பிய
நிலையில்

"எதிர்த்திடும் துன்பம் ஏதும்இல்லாமல் மக்கள் பேரர்வதிந்திடல் கண்டு நெஞ்சுமகிழ்வதே வாழ்வின் வீடு" என்று
வீடுபேற்றிற்கு புதுவிளக்கம் தந்தவர்.

மாகவிஞன்....

19 ஆம் நூற்றாண்டில்
தோன்றிய பிரெஞ்சு புரட்சியின் கொள்கைகளாகிய சுதந்திரம்,
சமத்துவம், சகோதரத்துவம் இவரின் படைப்புகளில்
இடம்பெற்றுள்ளன.மக்களுக்காக மக்கள் மொழியில் மக்களைப்
பாடிய மாகவிஞன்.

சாதி இருட்டு தீண்டாமைக்கொடுமை, வர்ண
பேதம், மூடத்தனம், மதம், பெண்ணடிமை,
கைம்மை, தொழிலாளர் துயர், சிந்தனை
முடக்கம், மொழிப்பற்றின்மை, விதியின்
பேரில் மதிமயக்கம், எல்லாம் கடவுள்
செயல் எனும் சங்கிலிகளை உடைத்தெறிந்தார்.
இரண்டு செய்திகளில் பாரதிதாசன் குறித்த
கருத்துவேறுபாடு இல்லை.

1. பாரதியாரை அடுத்த சிறந்த தமிழ்க் கவிஞர்.
2. எங்கெல்லாம் தாம் அநீதி எனக் கருதிய ஒன்று
தோன்றியதோ இடம் பெற்றிருந்ததோ அதனை
ஒழிப்பதற்கும் நீதிக்குத் துணை போவதற்கும்
அவர் காட்டிய தீரமும், துணிச்சலும் என
நீதிபதி மு.மு.இஸ்மாயில் குறிப்பிடுகிறார்.

முதல் கவிதை இதழ்

இதழியல் துறையில் முதல் கவிதை இதழ்
நடத்தியவர் பாரதிதாசன்.

குயிலின் மீதும் பாரதியின் குயில்பாட்டின்
மீதும் அவர் கொண்டிருந்த பற்றே
'குயில்' இதழ் தொடங்க காரணமாகும்.

1958 - 1959 வந்த குயில் இதழின் உத்தியைப்
பார்த்தால் அதிலும் தனித்தன்மை விளங்கும்.
இதழில் தலையங்கம், கவிதை, கட்டுரை
மற்றும் பிற செய்திகளை வெளியிடும்போது
அவ்விதழின் உட்புறத்தில் இவ்வாறு
அமையப் பெற்றுள்ளமை அனைத்தும்
ஆசிரியரால் எழுதப்படுபவை என
'நினைவுறுத்துகிறோம்' என்ற பகுதியில்
சுட்டிச் செல்வதை இதழ் அனைத்திலும்
ஒரு உத்தியாகப் பின்பற்றியுள்ளார்.
'குயிலில் பிறரால் எழுதப்படும் பாட்டு
உரைநடைக்கு அவரின் இயற்பெயர் அல்லது
புனைபெயர் இருக்கும். ஆசிரியரால்
எழுதப்படுபனவற்றிற்ர்குப் புனைபெயரோ
இயற்பெயரோ இராது' எனவரும் பகுதி
பாரதிதாசனிடம், பெயர் குறிக்காமல்
செய்தியினை நினைவுபடுத்தும்
உத்தியைப் புலப்படுத்துவதாய் உள்ளது.

முன்னிலைப் படுத்திக்காட்டும் உத்தி,
வருவதை உரைக்கும் உத்தி, உவமையினைக்
கையாளும் உத்து, கதை வழிச் செய்தியை
விளக்கல், தொகுத்துரைத்தல்,
விரித்துரைத்தல்... ஆகியவற்றையும்
குயில் இதழில் கடைப்பிடித்திருக்கிறார்.

கனகசுப்புரத்தினம் என்னும் பெயரில் எழுதாது
புதுவை கே.எஸ். பாரதிதாசன், கே.எஸ்.ஆர்,
கண்டெழுதுவோன், கிண்டல்காரன், கிறுக்கன்
என்னும் புனைபெயர்களில் எழுதியிருக்கிறார்.

தேச சேவகன், ஆத்மசக்தி, தாய்நாடு, துய்ப்ளேக்சு,
புதுவை முரசு, சு.பா. கவிதா மண்டலம், முல்லை,
குயில் ஆகிய இதழ்களுக்கு இதழாசிரியராக
இருந்திருக்கிறார். இசையோடு பாடுவார்;
நாடகங்களில் நடிப்பார்.
இராமானுஜர், பாலாமணி அல்லது பக்காத் திருடன்,
கவிகாளமேகம், சதி சுலோசனா, ஆயிரம் தலை வாங்கிய
அபூர்வ சிந்தாமணி, வளையாபதி, பொன்முடி ஆகிய
ஏழு திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவர்.

20 படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார். மேலும்
சிலம்பம், குத்துவரிசை போன்ற உடல்பயிற்சிகளில்
தேர்ச்சி பெற்றவர்.

பாரதிதாசன் நோக்கில் பெண்கள் உயர்வாய்
சித்தரிக்கப்பட்டனர்.

"பெண் ஆணுக்கு நிகர்" என்று பாரதியைத்
தொடர்ந்து முதலில் முழங்கியவர்.அனைத்து
தொழிற்துறை செயல்களும்
ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவே
என்பதை எழுதுகிறார்.

" வானூர்தி செலுத்தல் வையமாக்கடல்
முழுத வித்தல்ஆன எச் செயலும்
ஆண் பெண்அனைவர்க்கும் பொதுவே'
பெண்ணுக்கான மன வலிமைக்கு
உபாயம் சொல்கிறார்.
எவ்விதம் தறுதலை ஆண்களை எதிர்த்து
நிற்கவேண்டும்?
என்பதையும் எடுத்துரைக்கிறார்.

"தனித்து வரும்போது - கெட்டதறுதலை கண் வைத்தால்இனிக்க நலம்கூறு - பெண்ணேஇல்லாவிடில் தாக்குஉமியல்ல மாதர் வலக்கை - தீயர்உயிரை இழக்கும் உலக்கை'இப்பாடல் இருமையை அருமையாகக் காட்டுகிறது.

உயர்வு தாழ்வு வேண்டாமென்பதை ஆணித்தரமாக
அழகுணர்ச்சியுடன் காட்டுகிறது.
'எத்தனை பெரிய வானம்எண்ணிப்பார் உனையும் நீயே;இத்தரை கொய்யாப் பிஞ்சுநீ அதில் சிற்றெறும்பேஅத்தனை பேரும் மெய்யாய்அப்படித்தானே மானேபித்தேறி மேல்கீழ் என்றுமக்கள் தாம் பேசல் என்னே'சோம்பலை விட்டு செயல்
செய்வதற்கான வலிமையைச் சொல்லும் பாடல்:
சோம்பிக்கிடப்பது தீமை நல்லதொண்டு செயாது கிடப்பவன் ஆமை*தேம்பி அழும் பிள்ளை போல - பிறர்தீமையை அஞ்சி நடப்பவன் ஊமை.
நம்நாட்டில் அறம் தழைத்து பொதுவுடமை
நிலைத்து வறுமை அறவே ஒழிய மக்கள்
வீர உணர்வோடு உழைக்க வேண்டும் என்பதை,
"தயையாகிய அறமே புரிசரி நீதியுதவுவாய்!சமமே பொருள் ஜனநாயகம்எனவே முர சறைவாய்! இலையே உணவிலை யேகதிஇலையே எனும் எளிமைஇனிமே யிலை எனவே முரசறைவாய் முரசறைவாய்! - ( வாளினை எடடா )
காதல் குறித்து எழுதாத கவியுண்டோ!

இதோ நம் பாவேந்தரும் காதலைப் படைக்கிறார்.
"காதல் அடைதல் உயிரியற்கை! அதுகட்டில் அகப்படும் தன்மையதோ? அடிசாதல் அடைவதும் காதலிலே - ஒருதடங்கல் அடைவதும் ஒன்று கண்டாய்."
காதல் கடிதம் எழுதிக் கொள்கின்றனர் காதலனும் காதலியும்.
காதலி எழுதுகிறார்:
அனைவரும் நலமாக இருப்பதாக.
தன்னைப் பற்றி மட்டும் குறிப்பாகக் கடைசியில்
சொல்கிறார் கடிதத்தில். நெல், அணிகலன், பழங்கள்,
சோலைகள் அனைத்தும் உண்டு.

இங்குள்ளோர், தோழியர், வேலைக்காரர்,
மான், மயில்,
பசுக்கள் க்ஷேமம்..."என்றன் நிலையோ என்றால்இருக்கின்றேன் சாகவில்லை என்றறிக"
காதலி கடிதம் எழுதி முடிக்கையில் கையொப்பமிடுகிறார்.
" இங்ஙனம் உன் எட்டிக்காயே " என எழுத
காதலன் பதில் எழுதுகிறான்:

இவ்வுலக இன்பமெலாம் கூட்டி எடுத்து
தெளிவித் திறுத்திக் காய்ச்சிஎங்கும் போல் எடுத்துருட்டும் உருட்சியினைஎட்டிக்காய் என்பாயாயின்எனக்கு நீ எட்டிக்காய் என்றுதான்சொல்லிடுவேன்என மாற்றுச் சிறப்பாய் எழுதியதை அறிகிறோம்.
பொதுவுடைமைச்சித்தாந்தம் மனதில் உறைந்து பொதுவுடமைப்
பாடல்கள் விரல்வழி பொழிகின்றன. உழைத்தும் பலர்
உணவின்றித்தவிக்க உழைக்காமலே சிலர் சுரண்டிக்
கொழுக்கின்ற ஊழல் பாரதிதாசரின் உள்ளத்தை வருத்துகிறது.கூழுக்குப் பற்பலர் வாடவும் சிற்சிலர்கொள்ளையடிப்பதும் நீதியோ - புவிவாழ்வதுதான் எந்தத் தேதியோ
பொருளாதார சமப்பகிர்வுக்கு அஹிம்ஸை
பயனளிக்கிறது.
அதை அடுத்து இம்சையைக் கையில்
எடுக்கவும் கூறுகிறார்.அடி உதவுவது போல் அண்ணன் தம்பி
உதவமாட்டான் என்பது வலியுறுத்துவது
போலவும் நகைச்சுவைக்குப் பின்னே உயர்
கருத்து ஒளிந்திருந்து ஒளிர்வது போலவும்
உதையப்பர் எனும் சொல் உபயோகிக்கிறார்.
ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர்உதையப்பராகி விட்டால் ஓர் நொடிக்குள்ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆய்விடுவார் உரையப்பா நீ!

அனைத்தும் பொதுவுடமையாக்கப்பட
வேண்டும் என்பதை மொழிகிறார்.
"உடமை மக்களுக்குப் பொதுபுவியை நடத்து பொதுவில் நடத்து"
"பனையளவு நலமேனும் தன்னலத்தைப்பார்ப்பானோர் மக்களிலே பதடியாவான்"
தமிழ்ச் சமுதாயம் சீரழிந்து போவதற்கு சாதி
சமய காரணம் என்பதையும் உயர்வு தாழ்வு
பார்க்கக்கூடாது என்பதையும் இதில் வலியுறுத்துகிறார்.
"பிறவியில் உயர்வும் தாழ்வும் சொல்லல் மடமை இந்தப்பிழை நீங்குவதே உயிருள்ளாரின் கடமை"

பெண்களுக்கான பாடல்களில் பெண்ணின் உயர்வு
கல்வியினால் வரும் என்பதை வலியுறுத்துகிறார்.
கல்வியிலாப் பெண்கள் களர் நிலம் என்றும் கல்வி
கற்ற பெண்கள் திருந்திய கழனி என்றும் கூறுகிறார்.

இதை பெண்ணடிமைத்தனமாகப் பார்க்கக் கூடாது;
பெண்ணின் மீதான கரிசனமாகப் பார்க்க வேண்டும்.
"படியாத பெண்ணினால் தீமை- என்னபயன் விளைப்பாளந்த ஊமை"
இவரின் குழந்தைப் பாடல்களும் சிறப்பு மிக்கவை.
வருங்காலத்தில் நாட்டை ஆளப்பிறந்தவர்கள்
நீங்கள் என குழந்தைகளைக் கூறுகிறார்.
'இன்று குழந்தைகள் நீங்கள் எனினும்இனி இந்த நாட்டினை ஆளப்பிறந்தீர்'
குழந்தைகள் என்ன செய்யவேண்டும் என்பதையும் கூறுகிறார்.
'போகா இடங்கள்
போனால் பொல்லாங்கெல்லாம் நேரும்பொல்லாரோடு சேர்ந்தால்
பொய்யும் புரட்டும் சேரும்பெரியோர் பேசும்போது -
குறுக்கில் பேசல் தொல்லை'
திருடாமை, எதெல்லாம் கூட
தீங்காகும் என்பதைச் சொல்கிறார்.
"பசித்த போதும் பொறுப்பது பாங்குபருக்கை ஒன்றைத் திருடலும் தீங்கு"

எதைப் படிப்பது எப்போது எப்படிப் படிப்பது?
என குழந்தைகளுக்குச் சொன்னாலும்
பெரியோருக்கும் ஏற்புடைத்ததாகவே இருக்கிறது இவரின் பாடல்கள்.
"ஏட்டில் உள்ள பாட்டைஇசைத்துப்பாடி புரியும்காட்டும் உரைநடையைக்
கலந்து படி புரியும்"கலைஞர் கருணாநிதி....
"காலையில் படி கடும்பகல் படிமாலை இரவு பொருள் படும்படி
நூலைப்படிசாதி என்னும்
தாழ்ந்தபடி நமக்கெல்லாம் தள்ளுபடிசேதி அப்படி தெரிந்து படி" என்கிறார்.
சிங்கத்தின் முழக்கம், சிறுத்தையின் பாய்ச்சல்,
வேங்கையின் கம்பீரம், புயலின் வேகம், இடியின்
முழக்கம், மின்னலின் வீச்சு, அருவியின் ஓட்டம்,
தென்றலின் தெம்மாங்கு, நிலவின் குளிர்ச்சி இத்தனையும்
சேர்ந்தால் பாரதிதாசனின் கவிதை என்கிறார்
கலைஞர் கருணாநிதி.
'ஆவேசத்தையும் உணர்ச்சியையும், வெள்ளமாகக் கொட்டும்
உயிர்க்கவி பாரதிதாசன்' -என்றவர் அறிஞர் வ.ரா'பாரதியார் இன்று நமக்கு வைத்துவிட்டுப்போன
சொத்துகள் பல. அவற்றில் முக்கியமானவற்றைக்
குறிப்பிட்டால் ஞானரதம், குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம்,
கனக சுப்புரத்தினம் என்ற பாரதிதாசன் என்று சொல்லப்போகும்'
என்றவர் புதுமைப்பித்தன்.
கலையின் வகைகளைச் சொல்லும்போது நாடகத்தில் பெரிதும்
கவனம் கொண்டவர் பாரதிதாசன்.
" சீரிய நற் கொள்கையினை எடுத்துக் காட்டல்சினிமாக்கள் நாடகங்கள் நடத்த வேண்டும்" என்றவர் பாரதிதாசன்.
ஒரு செய்தியை நன்றாக விளக்க வேண்டுமென்றால் அதற்கு
நாடகமே ஏற்ற வடிவம் என்பார் பாரதிதாசன் (படித்த பெண்- முன்னுரை)
அவரது கவிதைகூட நாடகப் பண்பைப் பெற்றிருப்பது
அறியப்படத்தக்கது.

தனிபாடல்கள் கதைப் பாடல்கள் நாவல்கள் சிறுகதைகள்
இலக்கியம் இலக்கணம் சொல்லாய்வு நாடகம் திரைப்படம்
எனப் பல்வேறு துறைகளில் தம் தடம் பதித்திருந்தாலும்
பாட்டால் அறிமுகமானதால் பாவேந்தர் எனவும்
புரட்சிக்கவி எனவும் புகழப்படுகிறார்.
இவரின் முதல் கவிதைத்தொகுப்பில் வெளிவந்த
'புரட்சிக்கவி, வீரத்தாய்' என்னும் இரு கவிதை நாடகங்கள்
இவரின் நாடக ஆர்வத்தை முதலில் எடுத்துக் காட்டியவை..

தாமே குயில் இதழ் நடத்திய போதும் பிற இதழ்களுக்கும்
படைப்புகள் அளித்தபோதும் பல நாடகங்களையும்
அளித்துள்ளார்.

இவரின் 'பிசிராந்தையார்' நாடகத்துக்கு சாகித்ய அகாடமி
விருது வழங்கப்பட்டது.
கவிதை, கதை, கட்டுரை, நாடகம், இலக்கணம் என 72 நூல்கள் படைத்துள்ளார்.
கவிதை நூல்கள்- 33கதைப்பாடல் - 17நாடகங்கள் - 12சிறுகதை - 2இலக்கணம்- 2இலக்கியம் - 2சொற்பொழிவு - 1கேள்வி பதில் - 1துணுக்குகள் - 1கட்டுரை - 1
இவரின் 'எதிர்பாராத முத்தம்' 'பொன்முடி' என்ற திரைப்படமாகியது.
கருத்தொருமித்த காதலர்கள் 'எதிர்பாராத முத்தத்' தில் முடிவில்
இறந்து விடுகின்றனர்.
ஆனால் 'பொன்முடி' திரைப்படத்தில் மணம் புரிந்துகொள்வதாக
முடிவினை மாற்றி படமாக்கியுள்ளனர்.
உலகெங்கிலும் சோக முடிவுகள் தாங்கிய காவியங்களே
அழியாப்புகழ் பெற்று இன்றளவும் வாழ்கின்றன.
1950களில் லைலா மஜ்னு, அனார்கலி போன்ற திரைப்படங்கள்
சோக முடிவுடன் வந்து வெற்றிபெற்ற திரைப்படங்கள்.

எதிர்பாராத முத்தமோ சோகமுடிவைக் கொண்டது. ஆனால் பொன்முடி
எனும் பெயரில் இதே காலக்கட்டத்தில் வெளிவந்தாலும் முடிவு
மாற்றியமைக்கப்பட்டது. இந்த மாற்றத்துக்கு திரைப்படத்துக்கு
பொருளுதவி செய்தவர் இட்ட நிபந்தனையே காரணம் எனக் கருதவும்
வாய்ப்பு உண்டு. ஆனால் இக்கூற்று பொய்யெனப்படும் விதமாக

"ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி" படத்தில் ஒரு சிறிய
வசனம் மாற்ற வேண்டும் என தயாரிப்பாளர் சொல்ல அதை மாற்ற
மறுத்து பாரதிதாசன் தான் பணமாகப் பெற்ற நாற்பதாயிரத்தை திருப்பிக்
கொடுத்துவிட்டார் என மு.சாயபு மரைக்காயர் குறிப்பிடுகிறார்.
புதுவை சட்டமன்ற தலைவராய் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பாரதிதாசன்.
72 ஆண்டு 11 மாதம் 23 நாட்கள் வாழ்ந்த அவர் 21.4.1964 செவ்வாய்கிழமை
புகழுடம்பை மட்டும் பெறுகிறார்.

காலம் கடந்தும் இன்னும் வாழ்கிறார்.

பாரதியை பார்ப்பனர் என்ற காரணத்தால் விலக்குபவரும்கூட பாரதியை
நேசித்த, பாரதியின் நட்பைப் போற்றிய பாரதியின் தாசனை பாவேந்தர்
எனக் கொண்டாடுகின்றனர்.

ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நூல்கள்:1. பாரதிதாசன் ஆய்வுக்கோவை- மு.சாயபு மரைக்காயர்2. பாரதிதாசன் வாழ்வினிலே - மு.சாயபு மரைக்காயர்3. நாவேந்தர் கண்ட பாவேந்தர் - டாக்டர் சகத்ரட்சகன்4. பாரதிதாசனின் புதிய நாடகங்கள்- டாக்டர் ச.சு. இளங்கோ 5. பாரதிதாசன் கவிதைகள்
அன்புடன்,
மதுமிதா.

Monday, April 28, 2008

பாரதிதாசன் வாரம்-வ.ந.கிரிதரன்,ஆசிரிய‌ர், ப‌திவுக‌ள்.





பாரதிதாசன் பற்றிச்
சில குறிப்புகள்...
- வ.ந.கிரிதரன் -

பாரதிதாசன் சமுதாயத்தைச் சுட்டெரித்துக் கொண்டிருக்கும்
மூடநம்பிக்கைகளை, தீண்டாமைக்
கொடுமைகளை, பெண் சுதந்திரம்,
கைம்மைத் துயர், குழந்தை மணம்,
மதப்பிரிவுகளால் இரத்தவெறி
பிடித்தலையும் உலகம், போலிச் சாமியார்கள்.. எனச்
சமுதாயச் சீர்கேடுகளைப் பற்றிக் கொதித்தெழுந்து
பாடிய கவிஞன்.

அவனது கவிதைகளில் தமிழ்ப் பற்றும், திராவிடப்
பற்றும் மிகுந்திருக்கும். தொழிலாளர்களின்
உரிமைகளுக்காகப் பொதுவுடமை பற்றி விரிவாகப்
பாடிய கவிஞன். மதப்பிரிவுகளை, அவற்றாலுருவான
மூடநம்பிக்கைகளைப் பாரதியாரைப் போல மிகவும்
அதிகமாக எதிர்த்ததொரு கவிஞன்.
ஆனால் அவரும்
தனது முப்பது வயது வரையில் 'கடவுள் இதோ'வென்று
மக்களுக்குக் காட்டிக் கவிதை படைத்ததொரு கவிஞனே
என்பதை 'நானோர் பாவேந்தன்' என்னும் தன்னைப்
பற்றிய கவிதையில் "...முப்பதாண்டு முடியும்
வரைக்கும் நான் எழுதிய அனைத்தும் என்ன
சொல்லும்? கடவுள் இதோஎன்று மக்கட்குக் காட்டிச்
'சுடச்சுட அவன்அருள் துய்ப்பீர்' என்னும் ஆயினும்,
கடவுளுருவும் அனைத்தையும் தடவிக் கொண்டுதான்
இருந்ததென் நெஞ்சம்" என்று விபரித்திருக்கின்றார்.
இவ்விதமிருந்தவர் 'பாடலிற் பழமுறை பழநடை
என்பதோர் காடு முழுதும் கண்டபின் கடைசியாய்ச்
சுப்பிரமணிய பாரதி தோன்றியென் பாட்டுக்குப்
புதுமுறை, புதுநடை காட்டினார்' என்கின்றார்.
(ஆனால் அதே சமயம் மதங்களின் பெயரால்
நிலவும் அக்கிரமங்களை, தீண்டாமைக்
கொடுமைகளையெல்லாம் எதிர்த்தபோதிலும்
பாரதிதாசன் எல்லா மதங்களும் அடிப்படையில்
ஒன்றே; இன்புற்று வாழ்ந்திடப் போதிப்பவையே
என்றும் கருதியவர். அதனால்தான் 'ஒற்றுமைப்
பாட்டு' என்னும் கவிதையில் 'எல்லா மதங்களும்
ஒன்றே - அவை, எல்லாரும் இன்புற்று வாழ்வீர்கள்
என்றே, சொல்லால் முழங்குவது கண்டீர் - அவை,
துன்புற்று வாழ்ந்திடச் சொல்லியதும் உண்டோ?'
என்று அவரால் பாட முடிகிறது.
ஆனால் அதே சமயம்
'திக்கெட்டும் உள்ளவர் யாரும் - ஒன்று,
சேராது செய்வதே மதமாகு மானால்,
பொய்க்கட்டு நீக்குதல் வேண்டும் - அப்,
பொல்லாங்கில் எல்லாரும் நீங்குதல் வேண்டும்,
எக்கட்சி எம்மதத்தாரும் - இங், கெல்லாரும் உறவினர்
என்றெண்ண வேண்டும்' என்றும்
அதே கவிதையின் ஆரம்பத்தில் அவரால் மதங்களுக்
கெதிராகவும் குரல் கொடுக்கவும் முடிகிறது).

பாரதிதாசன் தனது கவிதைகள் பலவற்றில்
மதத்தினை, கடவுளினை, மதத்தின் பெயரால்
ஏற்பட்ட அனர்த்தங்களைப் பற்றியெல்லாம்
மிகவும் கடுமையாகச் சாடியவர்.

'சாதிமத பேதங்கள் மூட வழக்கங்கள், தாங்கி
நடைபெற்றுவரும் சண்டை உலகிதனை,
ஊதையினில் துரும்புபோல் அலைக்கழிப்போம்;பின்னர், ஒழித்திடுவோம்;புதியதோர் உலகம் செய்வோம்!
பேதமிலா அறிவுடைய அவ்வுலகத்திற்குப்
பேசு சுயமரியாதை உலகு எனப்
பேர்வைப்போம்! ஈதேகாண்! சமூகமே,
யாம் சொன்னவழியில் ஏறுநீ! ஏறுநீ! ஏறுநீ! ஏறே. ........
'அண்டுபவர் அண்டாத வகை செய்கின்ற
அநியாயம் செய்வதேது?- மதங்கள் அன்றோ?' என்றும்
('முன்னேறு' என்னும் கவிதையில்),
'மக்கள் பசிக்க மடத்தலைவர்க்கெனில் வாழை யிலை
முற்றும் நறுநெய்யாம்- இது மிக்குயிர் மேல்வைத்த
கருணையாம். ........ கோயிலிலே பொருள் கூட்டும்
குருக்களும் கோதையர் தோளினிற் சாய்கின்றார்-இங்கு
நோயினிலே மக்கள் மாய்கின்றார்' என்றும்
('சாய்ந்த தராசு' என்னும் கவிதையில்),

'சேசு முகம்மது என்றும்!-மற்றும்
சிவனென்றும் அரியென்றும்
சித்தார்த்தனென்றும் பேசி வளர்க்கின்ற போரில்- உன்
பெயரையும் கூட்டுவர் நீ ஒப்ப வேண்டாம்' என்றும்
('வாழ்வில் உயர்வுகொள்' என்னும் கவிதையில்)
இது
போல் இன்னும் பல கவிதைகளில் மதத்தையும்,
அதன் பெயரால் நடக்கும் அக்கிரமங்களையும்
சாடுமொரு கவிஞன். இருந்தாலும் மதங்களை
இவ்வளவுதூரம் சாடும் பாரதிதாசன்
'எங்கெங்கு காணிணும் சக்தியடா!
ஏழுகடல் அவள் வண்ணமடா!' என்று
சக்தியைப் பற்றிப் பாடுவதைப் பார்க்கையில்
மூடநம்பிக்கைகளை எதிர்த்தாலும் அவரும்
பாரதியாரைப் போல் , இப்பிரபஞ்சம் சக்தியொன்றின்
விளைவேயென்று , சக்தியொன்றில் நம்பிக்கை
வைத்துள்ளாரென்றுதான் கருத வேண்டியிருக்கின்றது.

'தித்திக்கும் பழம் தின்னக் கொடுப்பார்;
மதுரப் பருப்பு வழங்குவார் உனக்கு;
பொன்னே, மணியே, என்றுனைப் புகழ்வார்;
ஆயினும் பச்சைக்கிளியே அதோபார்!
உன்னுடன் பிறந்த சின்ன அக்கா,
வான வீதியிலே வந்து திரிந்து
தென்னங் கீற்றுப் பொன்னூசல்
ஆடிச் சோலை பயின்று சாலையில்
மேய்ந்து வானும் மண்ணுந்தன்
வசத்திற் கொண்டாள்! தச்சன்
கூடுதான் உனக்குச் சதமோ?
அக்கா அக்கா என்று நீ அழைத்தாய்.
அக்கா வந்து கொடுக்கச் சுக்கா
மிளகா சுதந்திரம் கிளியே?'

மேற்படி கவிதையில் கூண்டுக்குள் அடைபட்டு
பழம், பருப்புண்டு, அக்காவென்று அழைக்கும்
கூண்டுக் கிளிப்பெண்ணைப் பார்த்து, அவளின்
உடன்பிறப்பான சின்ன அக்கா எவ்விதம்
சுதந்திரமாக வானும் மண்ணுந்தன் வசத்தில்
வைத்து வாழ்கின்றாளென்று விபரிக்கும்
கவிஞர் அச்சுதந்திரத்தைக் கூண்டுக்கிளி
மனோபாவத்தை நீக்குவதால் மட்டுமே
பெறமுடியுமென்பதைக் குறிப்பாக அக்கூண்டுக்
கிளிக்கு உணர்த்துவதாக அமைந்துள்ளது மேற்படி
கவிதை 'சுதந்திர'த்திற்காகக் கொடுக்கவேண்டிய
விலையினையும் வேண்டி நிற்கின்றது.
விடுதலையில் நாட்டமற்று வாழும் கூண்டுக்
கிளிக்கு விடுதலையில் நம்பிக்கையூட்டுவதாக
அமைந்துள்ளது பாரதிதாசனின் மேற்படி 'சுந்ததிரம்'
என்னும் கவிதை.

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தனும் பாரதியாரையும்,
பாரதிதாசனையும் ஒப்பிட்டு நல்லதொரு நூலொன்றினை,
'பாரதியும் பாரதிதாசனும்', எழுதியுள்ளார். அதில் அவர்
பாரதிதாசன் பற்றிய தனது கருத்துகளில் பாரதிதாசன்
தன்னை நாத்திகரென அறிவித்துக் கொண்டாலும்,
அவர் உண்மையில் கடவுள் நம்பிக்கை
மிக்கவர்தானென்பதை பாரதிதாசனின் கவிதைகள்
சிலவற்றினூடு எடுத்துக் காட்டுகின்றார்.
நாத்திகரென்றால் கடவுள் என்னும்
கோட்பாட்டினையே முற்றாக மறுதலிப்பவராக
இருக்க வேண்டும்.
அனைவருக்கும் ஒரு கடவுள்
என்பதை நம்பும் ஒருவரை நாத்திகரென்று கூற முடியாது.

'சீருடைய நாடு - தம்பி திராவிட நன்னாடு.
பேருடைய நாடு - தம்பி
பெருந் திராவிடந்தான். ஓர் கடவுள் உண்டு -
தம்பி உண்மை கண்ட நாட்டில் பேரும்
அதற் கில்லை - தம்பி பெண்டும்
அதற் கில்லை தேரும் அதற் கில்லை - தம்பி'
சேயும் அதற் கில்லை ஆரும் அதன் மக்கள் -
அது அத்தனைக்கும் வித்து உள்ளதொரு தெய்வம் -
அதற் குருவ மில்லை தம்பி'
(கவிதைத் தொகுதி-3 ஏற்றப்பாட்டு-55)

என்னும் மேற்படி கவிதையினை உதாரணமாகக்
காட்டுவார் பேராசிரியர் அ.ச.ஞா. அவர்கள்
தனது நூலில். பேராசிரியர் அ.ச.ஞா.வும்
மேற்படி தனது நூலின் இன்னுமொரு
பகுதியில் பாரதிதாசனைப் பற்றி
'...உண்மையிலவர் கடவுள் நம்பிக்கை உடையவரே;
கடவுள் நம்பிக்கை உடையவரென்று சொன்னவுடன்
ஊரிலுள்ள காளி, மூளி, காட்டேரி, சங்கிலிக் கருப்பன்
ஆகிய அனைத்தையும் நம்பி, ஆடு, அறுத்து பூசை
போடுகிறவர்களோ அல்லது கோயிலுக்கு சென்று
பால் அபிஷேகம் செய்து சகஸ்ரநாம அர்ச்சனை
செய்கின்றவர்களோதாம் கடவுள் பக்தி
உடையவர்கள் என்று தயவு கூர்ந்து யாரும்
நினைத்து விட வேண்டா. ..............
பாரதிதாசன் கண்ட கடவுள் நம்முடைய
முன்னோர்கள் சொல்லிய அதே கடவுள்தான்.
கடவுள் என்ற பெயரிலேயெ பாரதிதாசன் கண்ட
பொருளும் அடங்கியிருகிறது. வாக்கு, மனம்,
கற்பனை ஆகிய அனைத்தையும் கடந்து
நிற்கின்ற காரணத்தினால்தானே அப்பொருளுக்குக்
கடவுள் என்று நம் பழந்தமிழர் பெயரிட்டார்கள்...'.
இவ்விதம் பேராசிரியர் அவர்கள் தனது வாதத்திற்கு
வலுச்சேர்ப்பார். இந்த அடிப்படையில் பாரதிதாசனை
முற்று முழுதாக நாத்திகவாதியென்று கூடக்
கூறிவிட முடியாது அவரே அவ்விதம் தம்மைப்
பற்றிக் கூறிக்கொண்டால் கூட.

பாவேந்தர் 1920இல் இந்திய விடுதலை அறப்
போராட்டத்தில் பங்கேற்றதாக அவரது வாழ்க்கைக்
குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாரதியார் 1921இல் இறந்த பின்னர்,
1929இல் 'குடியரசு, 'பகுத்தறிவு' ஏடுகளில்
எழுதத்தொடங்கிய பின்னரும் கூட 1930இல்,
அதாவது பாரதியார் இறந்து 9 ஆண்டுகள்
கழிந்த நிலையிலும் கூடப் பாவேந்தர் தனது
'சிறுவர் சிறுமியர் தேசிய கீதம்', 'தொண்டர்
நடைபாட்டு', 'கதர் இராட்டினப் பாட்டு' போன்ற
கவிதைகளையெல்லாம் (இவையெல்லாம்
பாரதியாரின் காலகட்டத்தில் இயற்றப்பட்டவை
யாயிருந்த போதிலும்) தொகுத்து நூலாக
வெளியிடுகின்றார். பாரதம் சுதந்திரம்
அடைவதற்கே இன்னும் பல ஆண்டுகள்
இருந்த நிலையில் இக்கவிதைகளைத்
தொகுத்து பாவேந்தர் வெளியிட வேண்டிய
தேவையென்ன?
பாரதியார் மறைந்த பின்னரும் கூடப் பாவேந்தர்
இந்திய தேசிய விடுதலைப் போரில் நாட்டம் மிக்கவராக இருந்தவரென்பதைத்தானே? மேலும் புதுவையில்
பாரதியார், அரவிந்தருட்படப் பல பாரத விடுதலைப்
போராட்ட வீரர்களுக்கு உதவுயதற்காகச் சிறை சென்றவர் பாரதிதாசனென்பதையும் இங்கு நினைவு கூர்தல்
பொருத்தமானதே.
பாரதியார் வாழ்ந்தது ஆங்கிலேயர்களின் ஆட்சியின்
கீழ் அமைந்திருந்ததொரு பிரதேசத்தில். ஆனால்
பாரதிதாசன் வாழ்ந்திருந்ததோ ஆங்கிலேய ஆட்சிக்
குட்படாத பிரெஞ்சு ஆட்சியின் கீழ் அமைந்திருந்ததொரு
பிரதேசத்தில். இவையெல்லாம் பாரதிதாசன் பாரதியாரைப்
போல் அதிகமான எண்ணிக்கையில் தேசிய விடுதலைப்
பாடல்களைப் பாடாமலிருந்ததற்குக் காரணாமாக
விருக்கலாம்.
பேராசிரியர் அ.ச.ஞா.போன்றவர்களின்
கருத்துகள் இவ்விதம்தானிருந்தன. அதற்காக
பாரதிதாசனின் விடுதலை உணர்வுகளை,
அவனது பங்களிப்பினைக் குறைத்து
மதிப்பிடுவதற்கில்லை.

உண்மையில் பாரதியின் தாசனாகக் கவிஞர்
இருந்ததைத்தான் அவரது கவிதைகளும்,
அக்கவிதைகள் பாடு பொருளும் கூறிநிற்கின்றன.
தான் வாழ்ந்த உடனடிச் சமூகத்தில் நிலவிய
கொடுமைகளைக் கண்டு மனம் வெதும்பி,
ஆக்ரோசத்துடன் குரல் கொடுத்த கவிஞனான
பாரதிதாசன், தமிழ்ப் பற்று மிக்க கவிஞனாக,
திராவிடக் கவிஞனாக, மார்க்சியக் கண்ணோட்டம்
மிக்கதொரு கவிஞனாக, பகுத்தறிவுக்கவிஞனாக,
சுயமரியாதை பற்றிப் பாடுமொரு கவிஞனாக,
பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுக்குமொரு
கவிஞனாகவெல்லாம் தன்னைத் தன்
கவிதைகளின் மூலம் வெளிப்படுத்தினார்.
பாவேந்தர் தன் குருவாகிய பாரதியாரைப்
போலவே, தன் நாட்டைப் பற்றியும், தன்
நாட்டு விடுதலைப் பற்றியும் தன்னையொரு
இந்தியக் கவிஞனாகவும் இனங்காட்டியவர்தான்.
பிரபஞ்சத்தின் மத்தியில் மனிதரை வைத்துத்
தெளிவுடன், அன்புடன் கருத்துகளை முன் வைத்த
கவிஞர்தான்.
மகாகவி பாரதியின் கவிதைகளில் காணப்படும்
முரண்பாடுகளெவ்விதம் அவனின் அறிவுத்தாக
மெடுத்தலையும் மனத்தினை வெளிப்படுத்தி
நிற்கின்றனவோ அவ்விதமே அவனது தாசனாகிய
பாவேந்தர் புதுவை சுப்புரத்தினத்தின் கவிதைளும்
வெளிப்படுத்தி நிற்பதிலென்ன ஆச்சரியம்!
<0>

பாரதிதாசன் வாரம்-பேரா.கோவி.இராசகோபால்




"நெஞ்சில் நின்ற பாவேந்தர்"


இனிய தமிழ் நெஞ்சங்களே!



நம் தமிழ்த்தாய் சென்ற நூற்றாண்டில் முன்

எப்போதும் இல்லாத எண்ணிக்கையில்
எண்ணற்ற கவிக்குழந்தைகளை
ஈன்றெடுத்தாள்.
அவர்களுள், 'ஈன்ற பொழுதினும்
பெரிதுவக்கும்படி', உச்சி மீது வைத்துத்
தமிழ் உலகோர் யாவரும்
மெச்சிப் புகழும்படி, வரலாற்றில்
இடம்பிடித்தோர் இருவர். ஒருவர்,
சுப்பிரமணிய பாரதியார்.
மற்றொருவர், கனக. சுப்புரத்தினம்.
மூத்தவர் பாரதியார், பின் ஒரு காலத்தில்,
இளையவரின் கவிதை
வாழ்க்கைக்கு 'ஆசான்' ஆனார்.
இளையவர் அவருக்குத் 'தாசன்' ஆனார்.
இயற்பெயர் காற்றில் கரைந்த கற்பூரம் ஆனது.
புனைபெயர் 'பாரதிதாசன்' பட்டாபிஷேகம் கண்டது.
"எனக்குக் குயிலின் பாடலும், மயிலின் ஆடலும்,
வண்டின் யாழும், அருவியின் முழவும் இனிக்கும்;
பாரதிதாசன் பாட்டும் இனிக்கும்" என்று திரு.வி.க. அகம்
மகிழ்ந்து உரைத்தது இங்கு நினைவுகூரத் தக்கது.
சாமிகள் பெயரால், சாதிகள் பெயரால் 'ஆசாமிகள்'
டத்தி வந்த அட்டூழியங்களை எல்லாம் அறவே
வேரறுத்ததால், தமிழ்மொழி‍, இன, நாட்டு வளர்ச்சிக்கு
எதிரான தடைகளை எல்லாம் முற்றும் முழுவதுமாக
உடைத்தெறியக் கவிதைகள் பாடியதால், காட்டாற்று
வெள்ளத்தின் வேகம், இவர்தம் எழுத்துகளில் வீரியமாகப்
பயணித்ததால், இவரைப் 'புரட்சிக்கவிஞர்' என்றார்
பெரியார் ஈ.வெ.ரா. 'சுயமரியாதை இயக்கத்தின்
ஒப்பற்ற கவி'யைப் 'பாவேந்தர்' என்று போற்றிப்
பூபாளம் பாடுகிறது தமிழுலகம்.
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தனர்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே"
என 'நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா'
இது முளைத்தது புதுச்சேரியில். என்னே
ஆச்சரியம்!
ஈடுஇணையில்லா ஓர் இந்தியச் சமூகப் போராளி,
'பாரத ரத்னா' பாபா சாஹெப் அம்பேட்கர் பிறந்த
அதே 1981 ஆம் ஆண்டில், அதே ஏப்ரல் மாதத்தில்
'நெருப்புக் குரல் கொண்ட இந்தக் கறுப்புக்குயில்'
கண் விழித்தது.
5 நாள்கள் பிந்தி அதாவது ஏப்ரல் 29 இல்
இது பிறந்தது தான் ஒரே வித்தியாசம்.
'வாழும் தன் சகமனிதனின் அன்றாடப்
பிரச்சினைகள் மீது கவனம் செலுத்தாமல்,
எங்கோ கற்பனை உலகில் ச‌ஞ்ச‌ரித்துக்
கொண்டு, ச‌முதாய‌த்தோடு அவ்வ‌ளவாக‌த்
தொட‌ர்பு இல்லாம‌ல் 'திரிச‌ங்கு சொர்க்க‌த்தில்'
திளைத்து இருப்ப‌வ‌ன் தான் க‌விஞ‌ன்' என்ற
ப‌த்தாம்ப‌ச‌லித் த‌ன‌த்தை ம‌றுத‌லித்த‌ சீரிய‌
இல‌க்கிய‌வாதிக‌ள் ப‌ரம்ப‌ரையில் உதித்த‌ ஓர்
உதய‌சூரிய‌ன் தான் பாவேந்த‌ர் பார‌திதாச‌ன்.
ஆர‌ம்ப‌ கால‌த்தில், ஓர் இந்திய‌த் தேசிய‌க்
க‌விஞ‌ராக‌வே இவ‌ர் த‌ம் எழுத்துப் ப‌ய‌ண‌த்தைத்
தொட‌ங்கினார். ஆனால், மிகு விரைவிலேயே 1928
இல் பெரியாரின் தொட‌ர்பு ஏற்ப‌ட்ட‌த‌ன் பிற‌கு, 'ஓர்
ஒப்புய‌ர்வு இல்லாத் த‌மிழ்த்தேசிய‌க் க‌விஞ‌ராக‌'
இவ‌ர் ப‌ய‌ணித்தார்; ப‌ரிண‌மித்தார்.
இவ‌ர‌து பார்வை ப‌ட்டு, த‌மிழ்மொழி, த‌மிழினம்,
ச‌ம‌ய‌ ம‌றுப்பு, கைம்பெண் ம‌றும‌ண‌ம், தொழிலாள‌ர்
உல‌க‌ம் என்பன‌ ப‌ளிச்சென வெளிச்ச‌ம் பெற்ற‌ன‌.
'வெறும் ஆட்சி விடுத‌லை என்ப‌து அர்த்த‌ம‌ற்ற‌து;
எல்லோரும் ஓர் நிறை'
என்ற‌ ச‌மூக‌ விடுத‌லையே அடிப்ப‌டையில்
தேவைப்ப‌டுவ‌து என்ப‌தைத் தீர்க்க‌மாக‌ உண‌ர்ந்தார்;
உரைத்தார். என‌வே, பெரும்பாலான‌ ம‌க்க‌ள் கூட்ட‌த்தை
ஏய்த்துக் கொண்டிருந்த‌ புராண‌ங்க‌ளை, க‌ட‌வுள்
நம்பிக்கையை, 'வ‌ர்ணாசிர‌ம‌க் கோட்பாட்டை'ப்
'பொய் பித்தலாட்ட‌ங்க‌ள்' என்றார்; 'குப்பைக்
கூள‌ங்க‌ள்' என்றார்.
இந்த‌ப் 'புளுகு மூட்டைக‌ளை' எல்லாம் அவிழ்த்து
அள்ளித் தெளித்துக் கொண்டிருந்த‌ 'ஆரிய‌
மேட்டிமைத் த‌ன‌த்தை'க் குற்ற‌வாளிக் கூண்டிலே
ஏற்றினார்; எள்ளி ந‌கையாடினார்; உறுதியாக‌க்
கண்டித்தார். 'த‌மிழை இவ‌ர் அள‌விற்கு நேசித்த‌வ‌ர்க‌ள்,
இல்லை...இல்லை சுவாசித்தவ‌ர்க‌ள்' இவ‌ருக்கு
முன்னேயும் பின்னேயும் ஒருவரும் இல்லை
என்றே சொல்லலாம்.
"செந்த‌மிழே! உயிரே! ந‌றுந் தேனே! செய‌லினை
மூச்சினை உன‌க்க‌ளித் தேனே! நைந்தாயெனில்
நைந்து போகுமென் வாழ்வு! ந‌ன்னிலை
உன‌க்கெனில் எனக்குந் தானே!"என்ற‌ப‌டி
த‌ம் உட‌ல், பொருள், ஆவி மொத்த‌த்தையும்
த‌மிழின், த‌மிழ‌ரின் வ‌ள‌ர்ச்சிக்கும் வாழ்வுக்கும்
ஒப்புக் கொடுத்த‌வர் பார‌திதாச‌ன். இந்திமொழி
ஆதிக்கத்தை எதிர்த்துத் தமிழ்நாட்டில் திராவிடக்
கழகங்கள் போராட்டங்கள் நடத்திய கால கட்டத்தில்,
இவருடைய கவிதைகள் தாம் போர் முரசுகளாக,
போர் வாள்களாகச் செயலாற்றி இருக்கின்றன.
"அவர்தம் பாடல்களைப் படிக்கின்ற அந்நியனும்
தமிழனாகி விடுவான்" என்று அறிஞர் சிதம்பரநாதன்
செட்டியார் ஒருமுறை சொன்னது வெறும் புகழுரை
இல்லை. "த‌மிழுக்கும் அமுதென்று பேர்! அந்தத்
த‌மிழ்இன்ப‌த் த‌மிழெங்க‌ள் உயிருக்கு நேர்!
"க‌னியிடை ஏறிய சுளையும் முற்ற‌ல் க‌ழையிடை
ஏறிய‌ சாறும் ப‌னிம‌ல‌ர் ஏறிய‌ தேனும் காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும் ந‌னிப‌சு பொழியும்
பாலும் தென்னை ந‌ல்கிய‌ குளிரிள நீரும் இனியன‌
என்பேன் எனினும் த‌மிழை என்னுயிர் என்பேன்
கண்டேன்" "விழுந்த‌ தமிழ்நாடு த‌லைதூக்க என்ற‌ன்
உயிர்த‌னையே வேண்டினும் த‌ருவேன்"என்ற‌ப‌டி த‌ம்
உள்ள‌த்தை, உண‌ர்வை, உயிரைத் த‌மிழோடு அர்ப்ப‌ணித்துக்
கொண்டவ‌ர் தான் பார‌திதாச‌ன். 'எங்கும் த‌மிழ் எதிலும்
த‌மிழ்' என்ப‌தே இவ‌ரின் கொள்கையாகும்.
"ச‌லுகை போனால் போக‌ட்டும், என் அலுவ‌ல்
போனால் போக‌ட்டும். த‌லைமுறை ஒரு கோடி
க‌ண்ட‌ என் த‌மிழ் விடுத‌லை ஆகட்டும்' எனத்
தீவிர‌த் த‌மிழிய‌க்க‌ப் போராளியாக‌ச் செய‌ல்ப‌ட்ட‌வ‌ர்
தான் பாவேந்த‌ர்.
ஒல்லும் வ‌ழி எல்லாம் த‌மிழ்மொழி வ‌ள‌ர்ச்சிக்கும்
வாழ்வுக்கும் தொண்டாற்றிய‌ பாவேந்த‌ர்,
சாதி-ச‌ம‌ய‌ம் க‌ட‌ந்த‌ ச‌முதாய‌ வாழ்வுக்கும்
போராடினார்.
"இருட்ட‌றையில் உள்ள‌தடா உல‌க‌ம் சாதி
இருக்கின்ற‌ தென்பானும் இருக்கின்றானே"என்று
நெஞ்சு குமுறிச் சாதிக் கொடுமையைச் சாடினார்.
மிக்குய‌ர்ந்த‌ சாதி கீழ்ச்சாதி என்னும் வேற்றுமைக‌ள்
த‌மிழ்க்கில்லை! த‌மிழ‌ர்க்கில்லை!
பொய்க்கூற்றே சாதி என‌ல்"
"பேடி வ‌ழ‌க்க‌ங்க‌ள் மூட‌த்த‌ன‌ம் இந்த‌ப் பீடைக‌ளே
இங்குச் சாத்திர‌ங்க‌ள்" என்று பட்டவர்த்தனமாகத்
ம் எண்ணங்களை எழுத்துகளில் பரப்பினார்
பாவேந்தர் பாரதிதாசன்.
'சாணிக்குப் பொட்டிடுச் சாமிஎன்போர் செய்கைக்கு
நாணி நகைத்த' நம் புரட்சிக்கவிஞர், 'வேண்டாத சாதி
இருட்டு வெளுப்பதற்குத் தூண்டா மணிவிளக்காய்த்
துலங்கிய' ஒரு சீரிய சமூகச் சிந்தனையாளரான
இவர்தான், முதன்முதல் முன் எவரினும் காட்டமாகப்
பெண் அடிமையை எதிர்த்தார்; பரிபூரண விடுதலைக்காகப்
பெண்களைச் சுயமாகப் போராடக் களம் அமைத்துக்
கொடுத்தார்.
"மாதர் தம்மை இழிவு செய்யும் மடமை யைக்
கொளுத்துவோம்" எனப் பாரதியார் இவருக்கு முன்னே
கொள்கைப் பிரகடனம் செய்தார் என்பது உண்மையே.
எனினும், 'ஆணுக்கொரு நீதி - பெண்ணுக்கொரு நீதி' எனத்
'தாந்தோன்றித் தனமாக'ச் சமூகம் செயல்பட்டு வந்த
காலகட்டத்தில், கல்வி, காதல், திருமணம், விதவை
மறுமணம், சமூக மதிப்பு என்ற எல்லா விஷயத்திலும்
ஆணுக்கு நிகராகப் பெண்ணை வளர்த்தெடுக்க வேண்டும்
என்ற தீர்க்கமான சிந்தனை முதன்முதல் புரட்சிக்கவிஞரிடமே
துளிர்விட்டது; ஆழமாக வேர்விட்டது எனலாம்.
பெண்களுக்குக் கல்வி வேண்டும்; அவர்கள் தம்மைத்
தாமே பேணுவதற்காக மட்டுமன்று; குடித்தனம் பேண,
குடித்தனத்தில் தோன்றும் மக்களைப் பேண, உலகைப்
பேண, ஏன், கல்வியைப் பேணவே பெண்களுக்குக் கல்வி
அவசியம் வழங்கப்பட வேண்டும் என்றார் பாரதிதாசன்.
கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம். அந் நிலத்தில் புல்
விளைந்திடலாம்; நல்ல புதல்வர்கள் விளைவதில்லை"
என்பது பாவேந்தரின் முடிவான கருத்து.
'கோரிக்கை அற்றுக் கிட‌க்கும் வேரில் ப‌ழுத்த‌
ப‌லாக்க‌ள்; குளிர் வ‌டிகின்ற‌ வ‌ட்ட‌ நிலாக்க‌ள்;
தென்ற‌ல் சிற‌ந்திடும் பூஞ்சோலைகள்; ந‌றுஞ்சீத‌ள‌ப்
பூமாலைக‌ள்; ந‌ல‌ஞ்செய் ந‌றுங்க‌னிக‌ள்; சூட‌த்த‌கும்
கிரீட‌ங்க‌ள் ந‌ம் பெண்ம‌க்க‌ள்' சீ! என்று இக‌ழ‌ப்ப‌ட்டு
ம‌ண்ணுக்கும் கேடாய் அவ‌ம‌திக்க‌ப்ப‌ட்ட‌
அவ‌ல‌ங்க‌ளை எல்லாம் துடைத்தெறிய‌ச்
ச‌ரியான‌ திராணியுட‌ன் போர்க்குர‌ல் எழுப்பியவ‌ர்
தான் பார‌திதாச‌ன்.
"வாடாத‌ பூப்போன்ற‌ ம‌ங்கை ந‌ல்லாள் ம‌ணவாள‌ன்
இற‌ந்தால்பின் ம‌ண‌த்தல் தீதோ? பாடாத‌ தேனீக்க‌ள்
உல‌வாத் தென்ற‌ல் ப‌சியாத‌ ந‌ல்வயிறு பார்த்த‌
துண்டோ?" "துணைவி இற‌ந்த‌பின் வேறு
துணைவியைத் தேடுமோர் ஆட‌வ‌ன் போல்
பெண்ணும் துணைவ‌ன் இற‌ந்த‌பின் வேறு
துணைதேட‌ச் சொல்லிடு வோம்புவி மேல்"
இப்ப‌டி வித‌வைத் திரும‌ண‌த்தை வ‌ர‌வேற்றுப்
பாடிய‌ பாவேந்த‌ர், 'எழிற்க‌ருங் க‌ண்ம‌ல‌ர்க‌ள்;
தாம‌ரை முக‌ங்க‌ள்; கூவ‌த் தெரியாக் குயிலின்
குஞ்சுக‌ள்; தாவாச் சிறுமான்க‌ள்; மோவே
அரும்புக‌ள்' தாலி அறுக்க‌ப்ப‌ட்டு, வித‌வைக‌ள்
ஆகிக் கால‌ம் எல்லாம் த‌ம் தந்தைய‌ர் வீட்டில்
டைப்பிண‌ங்க‌ளாக‌க் கெட்ட‌ழிய‌ வேண்டுமா?
கூடாது...கூடாது! குழ‌ந்தைத் திரும‌ண‌த்தை
உட‌னே த‌டைசெய்ய‌ வேண்டும்' என்று எக்காள‌ம்
ஊதினார்.
"க‌ல்யாண‌ம் ஆகாத‌ பெண்ணே! உன் க‌தித‌ன்னை
நீநிச்ச‌ ய‌ம்செய்க‌ க‌ண்ணே!" என‌ முதன்முத‌ல்
பெண்க‌ளைத் த‌ட்டி எழுப்பிய‌வ‌ரும் ந‌ம் புர‌ட்சிக்க‌விஞ‌ர்
தான். இவ‌ர் காண‌ விரும்பிய உல‌க‌ம் வித்தியாச‌மானது.
"சாதிம‌த‌ பேத‌ங்க‌ள் மூட‌ வ‌ழ‌க்க‌ங்க‌ள் தாங்கி
நடைபெற்றுவ‌ரும் ச‌ண்டையுலகித‌னை ... ஒழித்திடுவோம்!;
ஏழை முத‌லாளி என்ப‌தில்லாப் 'புதிய‌தோர் உல‌க‌ம் செய்வோம்;
கெட்ட‌ போரிடும் உல‌க‌த்தை வேரொடு சாய்ப்போம்;
பொதுவுடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்;
புனித‌மோடு அதை எங்க‌ள் உயிரென்று காப்போம்" என‌ப்
புர‌ட்சிக்கீத‌ம் இசைத்த‌வ‌ர் தான் பாரதிதாசன். 'தொல்லுல‌க‌
ம‌க்க‌ளெலாம் ஒன்றே' என்னும் தாயுள்ள‌ம்;
தூய உள்ளம்; பெரிய உள்ள‌ம் கொண்ட‌ ம‌க்க‌ளையே
நேசித்த‌து இவ‌ரின் உள்ள‌ம். 'எவனும் யாரையும் எக்
காரண‌ம் கொண்டும் ஏய்க்க‌க் கூடாது' என்ப‌து தான்
இவர் சித்தாந்தம். 'ஏய்க்கப் பட்டோர் இனியும்
ஏமாளிக‌ளாக‌ இருக்க‌க் கூடாது;
இவ‌ர்க‌ள் க‌ண்விழிக்க‌ வேண்டும்; ம‌ண்
சிவ‌க்க‌ வேண்டும்'. இதுவே புர‌ட்சிக்க‌விஞ‌ரின்
உண‌ர்ச்சிக் கொந்த‌ளிப்பு; எதிர்பார்ப்பு.
"வ‌லியோர்சில‌ர் எளியோர்த‌மை வ‌தையே புரிகுவ‌தா?
ம‌க‌ராச‌ர்க‌ள் உல‌காளுத‌ல் நிலையாம்எனும் நினைவா?
கொலைவாளினை எடடாமிகு கொடியோர்செய‌ல்
அற‌வே! குகைவாழ்ஒரு புலியே!உய‌ர் குண‌மேவிய
த‌மிழா!" "ஓட‌ப்ப‌ ராயிருக்கும் ஏழைய‌ப்ப‌ர் உதைய‌ப்ப‌
ராகிவிட்டால் ஓர்நொ டிக்குள் ஓட‌ப்ப‌ர் உய‌ர‌ப்ப‌ர்
எல்லாம் மாறி ஒப்ப‌ப்ப‌ ராய்விடுவ‌ர் உண‌ர‌ப்பாநீ"
என்று ம‌ட‌மையில் துயின்றிருந்த‌ த‌ன்ன‌ரும்
த‌மிழ்ம‌க்க‌ளைத் தம் பாட்டுத் திற‌த்தாலே
பாலித்திட‌ச் செய்தார் பாவேந்த‌ர். "ம‌னித‌ரில்
நீயுமோர் ம‌னித‌ன்; ம‌ண்ண‌ன்று! இமைதிற‌;
எழுந்து ந‌ன்றாய் எண்ணுவாய்.
தோளை
உய‌ர்த்துச் சுடர்முக‌ம் தூக்கு! மீசையை முறுக்கி
மேலே ஏற்று! விழித்த‌ விழியில் மேதினிக்
கொளிசெய்! நகைப்பை முழ‌க்கு! ந‌ட‌த்து
லோகத்தை! உன்வீடு - உன‌து ப‌க்க‌த்தின் வீட்டின்
இடையில் வைத்த‌ சுவ‌ரை இடித்து வீதிக‌ள்
இடையில் திரையை வில‌க்கி நாட்டொடு
நாட்டை இணைத்து மேலே ஏறு! வானை
இடிக்கும் ம‌லைமேல் ஏறு விடாம‌ல்! ஏறு
மேன்மேல்! ஏறி நின்று பார‌டா எங்கும்;
எங்கும் பார‌டா இப்புவி ம‌க்க‌ளைப் பார‌டா
உன‌து மானிட‌ப் ப‌ர‌ப்பை! பார‌டா உன்னுட‌ன்
பிற‌ந்த‌ ப‌ட்டாள‌ம்! 'என்குல‌ம்' என்றுனைத் த‌ன்னிட‌ம்
ஒட்டிய‌ ம‌க்க‌ட் பெருங்க‌ட‌ல் பார்த்து ம‌கிழ்ச்சிகொள்!
அறிவை விரிவுசெய்! அக‌ண்ட‌ மாக்கு!
விசால‌ப் பார்வையால் விழுங்கு ம‌க்க‌ளை!
மானிட‌ ச‌முத்திர‌ம் நானென்று கூவு! பிரிவிலை
எங்கும் பேத‌ மில்லை! உல‌க‌ம் உண்ணஉண்!
உடுத்த‌ உடுப்பாய்! புக‌ல்வேன்; 'உடைமை
ம‌க்க‌ளுக்குப் பொது' புவியை ந‌ட‌த்து பொதுவில் ந‌ட‌த்து!
வானைப் போல‌ ம‌க்களைத் தாவும் வெள்ளை அன்பால்
இத‌னைக் குள்ள‌ ம‌னித‌ர்க்கும் கூற‌டா தோழ‌னே!"
இதுவே பாவேந்த‌ர் ஆத்மா. ப‌ர‌மாத்மா மேல் ஒரு
துளியும் நம்பிக்கையில்லா ஒரு ம‌காத்மாவின் '
ப‌ரிசுத்த ஆத்மா'வைச் ச‌ரியாக‌ப் புரிந்து கொள்ள‌,
அவ‌ர் எழுத்துக‌ளை எல்லாம் ஒரு முறையேனும்
நாம் வாசிக்க‌ வேண்டும் முழுதாக‌.
ந‌ன்றி!
வ‌ண‌க்க‌ம்.

Saturday, April 26, 2008

பாரதிதாசன் வாரம்-இண்டி ராம்


<>புரட்சிக்கவிஞர் இன்றிருந்தாரானால்...

எப்படி நினைப்பார்?<>

புரட்சிக்கவிஞர் கூறிய புரட்சிகரமான கூற்றுகள் :-

1. தமிழ் மேல் பற்றுகொள், தமிழை வளரவை
2. தமிழனாக இருப்பதை நினைத்து பெருமைகொள்
3. தமிழ் இனத்தவர் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்
4. தமிழர்கள் தங்களது தொழிலில் வெற்றி காணவேண்டும்
5. உனது செயல் தமிழினத்திற்கு பெருமை சேர்க்கவேண்டும்
6. பெண்களுக்கு மதிப்பு கொடு
7. பெண்கள் விதவையானால் ஆண்கள் மாதிரி திரும்பி காதலித்து
மறுமணம் செய்துகொள்ள அனுமதி
8. ஆணும் பெண்ணும் தமது உணர்ச்சிகளை வெளிப்படையாகக் காண்பிப்பதில்
தவறில்லை.
9. நம்மிடமுள்ள வேறுபாடுகளைப் பெரிது படுத்தாமல் நம்முள் உள்ள
பொதுவான தமிழ் சமுதாய விழுமங்களை கருத்தில் கொண்டு நடந்துகொள்
10. மற்ற மனிதர்களை மனிதனுக்கு கொடுக்கவேண்டிய பணிவன்புடன் நேசி
ஆகியவற்றை தமது 90 நூல்களிலும் தமது சினிமா ஈடுபாடுகள் மூலமும்
வெளிப்படுத்தினார்.

நம்முடைய நண்பர்கள் பலர் அவைகளை மேற்கோள்காட்டியும் எழுதியுள்ளனர்
தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள தமிழகத்தில் இப்போது என்ன நடந்துவருகிறது
என்பதை சற்று சிந்தித்து பார்க்கலாமா?

1. ஏழை நகரச் சிறார்கள், கிராமக் குழந்தைகள் தவிர மற்ற எல்லா குழந்தைகளும்
ஆங்கில மெட் ரிகுலேஷன் பள்ளியில் தான் படிக்கின்றனர்
ஏன் சில ஆங்கில மெட் ரிகுலேஷன் பள்ளிகளில் வகுப்பறைகளுக்கு வெளியே
தமிழில் பேசக்கூடாது என்று ஸ்டிர்க்டாக ஆங்கிலப் பேச்சுப் பழக்கத்தை
அதிகரிக்கவைக்க முயற்சிக்கும் (இப்பள்ளி நிருவனத்தார் எல்லாம்
பார்திதாசனார் காலத்தில் பிறந்த தமிழர்கள்தான்) பள்ளிகளுக்கு தான் தற்கால
தமிழ்ப் பெற்றோர்கள் அனுப்ப விரும்புகின்றனர்
உண்மையா இல்லையா?
2. கால் செண்டரில் விரும்பி வேலை பார்க்கும் தமிழ் உழைப்பாளிகள்
தங்களது பெயரை மறந்துவிட்டு ஆங்கிலப்பெயரில் ஆங்கிலத்தில்
கலந்துரையாடல் செய்து பயிற்சி எடுக்கின்றனர்
இவர்களை எல்லாம் யாரும் பயமுறுத்தி செய்யச் சொன்னதில்லை
இவ்வாறு தொழிலில் போட்டிபோட்டுக்கொண்டு செயல்படுபவர் தமிழர்கள்தான்
3. தமிழகத்தில் 25 % மக்கள் தலித் பிரிவினர், 60% பின் தங்கிய சாதியினர்
15% முன்னேறிய சாதியினர் (அதில் 4% பிராமணர்கள்)
இந்த தமிழ் இனத்தவர்களிடம் ஒற்றுமை எவ்வாறு வளர்ந்து வருகிறது?
அதற்கு மக்கள் எவ்வாறு ஒத்துழைத்துவருகின்றனர்
4. அப்துல் கலாம், ரஹ்மான் போன்ற சில குறிப்பிட்டதமிழர்களைத்
தவிர தமிழர்கள் இந்தியா அளவிலோ அல்லது உலக அளவிலோ
எவ்வாறெல்லாம் சாதனை சாதித்துள்ளனர் என்று அறிந்தவர்கள்
எனக்குத் தெரிவித்தால் நான் அதற்கு நன்றி செலுத்துவேன்
5. பல காரணங்களால் திருமணமாகாத பெண்கள் எண்ணிக்கை என்ன
6. பெண் சிசுக்கொலை எந்த மாநிலத்தில் பெருமளவில் நடந்து வருகிறது
7. விதவை மறு திருமணம் தமிழகத்தில் எவ்வளவு அதிகரித்துள்ளது
அம்பானி, டாட்டா எல்லாம் தமது சாதனைகளால் தமது இனத்தவர்களுக்கு
பெருமை சேர்த்து வருகின்றனர்.

கேரளத்திற்கு சென்று வருபவர்கள் அங்குள்ளவர்கள் தங்களது
கிராமங்களையும் சுற்றுப்புறத்தையும் எவ்வளது சுத்தமாகவைத்துவருகின்றனர்
என்று வியப்பித்து எழுதுகின்றனர்
தமிழகத்தில் வசிக்கும் நண்பர்களுக்கு மற்ற மாநிலங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில்
நமது மாநிலத்தினரின் செயல்பாடுகள் எவ்விதங்களில்
மேலோங்கிதாக உள்ளதை குறிப்பிட்டுக்காட்ட கேட்டுக்கொள்கிறேன்
தற்காலத் தமிழரிடம்
தமிழ்ப் பற்று வளர்ந்து வருகிறாதா
தமிழினப் பற்று வளர்ந்துவருகிறதா
தமிழின ஒற்றுமை (நான்கு புதிய பிரிவினரிடம்) உயர்ந்துள்ளதா
தமிழகப் பெண்கள் மற்ற மாநிலப் பெண்களைவிட
அதிக சுதந்திரம் பெற்றுள்ளனரா
விதவை மறுமணம் சகலமாக நடக்கிறதா
தமிழகப் பெண்கள் தைரியமாகச் செயல் படுகின்றனரா
பாரதிதாசனார் எழுதியகாலத்திலிருந்து இப்போது
பெரிய மாற்றங்கள ஏதாவது நடந்துள்ளதா
பாரதிதாசனார் வாரத்தை தமிழகப் பெரும்புள்ளிகள் கொண்டாடி
அவரது புரட்சிகரமான எண்னங்களை செயல் படுத்த
மக்களை ஊக்குவிக்கிறார்களா?
தமது செயல்பாடுகளிலும் அவற்றை கடைபிடிக்கின்றனரா?
இதையெல்லாம் அறிய நான் ஆவலாக உள்ளேன்
சினிமா, அரசியல் வாதிகளைத்தவிர நாம் மற்ற
துறைகளில் சாதனைபுரியும் தமிழர்களை ஏன் போற்றுவதில்லை?
அவர்களை இனம் காட்ட நாம் ஏன் சிந்திப்பதில்லை?

இண்டி ராம்
*******************************************************************
நண்பர் இண்டிராம்,
உயர்ந்த கட்டுரை.
நீங்கள் கேட்டிருக்கும் ஒவ்வொரு கேள்வியும்
உயர்ந்தன.
பெருமளவு கேள்விகளுக்கு இல்லை-சரியில்லை
என்ற அவக்காரமானபதில்தான் கிடைக்கிறது.
அவரின் கருத்துகள் இயன்ற அளவிற்குச் சென்று
சேரவேண்டும்என்ற விழைவில் பலரும்
ஆர்வமாயிருப்பது மட்டுமே மகிழ்ச்சியளிக்கிறது.
அன்புடன்,
நாக.இளங்கோவன்_..
*******************************************************
திரு இண்டிராம் / திரு இளங்கோவன்,

தமிழின், தமிழரின், தமிழ் கலச்சாரத்தின், அப்பட்டமான
உண்மை நிலை, திரு இண்டிராம் அவர்களின் கேள்விகள்
மற்றும் நம் மனதில் விளையும் அதற்கான பதில்கள்
மூலம் முழுதாகப் படம் பிடித்துக் காட்டப்படுகிறது.

தமிழ், தான் தோன்றிய காலந்தொட்டு அவ்வப்போது
வரிவடிவத்திலும், வழக்கிலும், பயன் பாட்டிலும்
பலப்பல மாறுதல்களைச் சந்தித்தபோதும், தன்
செம்மையை பல சீரிய சான்றோர்களின்
முயற்சியால் வளமைப்படுத்திக் கொண்டு
வந்திருக்கிறது.

ஆனால், இப்போது ஏற்பட்டுள்ள சோதனை தீர,
அத்தனை தமிழார்வளர்களும் ஒன்றாய் செயல்
பட்டாக வேண்டும். அதற்கு இன்று உள்ள
அறிவியல் வளற்ச்சி உறுதுனையாக
இருக்கும்; இருக்கட்டும்..
அன்புடன்,
மு.வெற்றிவேல்_..
****************************************************
அன்பின் நண்பர் திரு.வெற்றி அவர்களே,
வருக. வருக.
நண்பர் திரு.வெற்றியைத் தமிழுலகத்தில்
காண்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

கடந்த வருடம் 2007 பாவேந்தர் விழாவை
மெய்யுலக விழாவாகஇரியாத் நகரில்
புதுவையின் முன்னாள் முதல்வரும்
தற்போதைய இந்தியத் தூதருமான
திரு,பரூக் மரக்காயர் அவர்களின்
தலைமையில்எழிலுற நடத்திய
பெருமை நண்பர் திரு.வெற்றி
அவர்களைச் சேரும்.
அவரை மீண்டும் வரவேற்பதில்
மகிழ்ச்சி கொள்கிறேன்.
அன்புடன்,
நாக.இளங்கோவன்_..
*****************************************
அன்பினிய நண்.வெற்றி அவர்களே,
வணக்கம்.
தமிழ் உலகில் விழா நடக்கும்நேரத்தில்
முகம் காட்டியிருக்கிறீர்கள்.
உங்களை வருக வருகவென தமிழ் உலகம்
சார்பிலும்பாரதிதாசன் வைய விரி அவையின்
சார்பிலும்வரவேற்பதில் பெருமகிழ்வெய்துகிறோம்.

தங்களைப்பற்றி நண்பர் மூலம் கேள்விப்பட்டிருந்தாலும்
நேரம் கிடைக்கும்போது தங்களைப்பற்றிய‌சிறிய
அறிமுகத்தை தமிழ் உலகம் அறியும்வகையில்
செய்து கொள்ளுங்கள்.
மெய்யுலகில் பாரதிதாசன் விழா கொண்டாடியிருந்தாலும்
வலையுலகில் கவிஞரின் பெருமைகளை நீங்களும்
இங்கு..இணைய உலகிலும் பகிர்ந்துகொள்ள வேண்டும்
என்பது எங்கள் விருப்பம். தங்கள் வருகைக்கு மீண்டும்
எம் இனிய கைகூப்பிய வரவேற்புகள்.
அன்பு மிக,
ஆல்பர்ட்,அமெரிக்கா.
பழனி,சிங்கை,
மணியம்,சிங்கை.
*******************************************************
பாவேந்தர் இன்றிருந்தால் என்ன செய்திருப்பார்...?

தமிழ் அரசுகள் உள்ள மூன்று நிலங்களில்
ஒன்று புதுவை.புதுவை ஈன்ற இருபெரும்
கவிஞர்களில் ஒருவர்பாவேந்தர் பாரதிதாசனார்.
தமிழ் மொழி, நாடு,மக்கள் என்ற ஒரே
குறிக்கோளில் காலம் முழுவதும் வாழ்ந்தவர்.

இளமையிலேயே கவித்திறன் மிகுந்து இருந்து
இவர் இயற்றியஇறைப்பாடல்களை அவரின்
நூல்களில் காணலாம்.

மாகவி பாரதியாரின் அன்புக்கு உரியவர்.
பாரதியாரின் தூண்டலில்அவரின் முன்னர்,
பாரதிதாசனார் எழுதியமுதல் பாடலே
சத்தியைப் பற்றித்தான்!
எங்கெங்கு காணினும் சக்தியடா - தம்பி
ஏழுகடல் அவள் வண்ணமடா! - அங்குத்தங்கும்
வெளியினிற் கோடியண்டம் - அந்தத்
தாயின் கைப்பந்தென ஓடுமடா! - ஒரு
கங்குலில் ஏழு முகிலினமும் - வந்து
கர்ச்சனை செய்வது கண்டதுண்டோ? - எனில்
மங்கை நகைத்த ஒலியெனலாம் - அவள்
மந்த நகையங்கு மின்னுதடா!
காளை ஒருவன் கவிச்சுவையை - கரை
காண நினைத்த முழு நினைப்பில் - அன்னை
தோளசைத்தங்கு நடம்புரிவாள்! - அவன்
தொல்லறிவாளர் திறம் பெறுவான் - ஒரு
வாளைச் சுழற்றும் விசையினிலே - இந்த
வையமுழுதும் துண்டு செய்வேன் - என
நீள இடையினின்றி நீ நினைத்தால் - அம்மை
நேர்படுவாள் உன்றன் தோளினிலே!
அன்னை சத்தியின் மந்த நகையில்
மனம் மயங்கி,புலவனின்/கவிஞனின்
சிந்தையிலேஅன்னை நடம்புரிந்து
திறம் தருவாள் என்றும்,சீரிய
மறவனின் தோள்களிலேஅன்னையே
நேர்படுவாள் என்றும் இறைத்துய்ப்போடு
பாவேந்தர் பாடிய இப்பாடலில்மனம்
பறிகொடுத்தவர்கள்பலர்; என்னையும் சேர்த்து.
மேலும் சுப்பிரமணியர் துதியமுது, சிவசண்முக
பஞ்சரத்நம்போன்ற நீண்ட பாடல்கள்
அவரிடம் மிகுந்து இருந்த ஆன்மச் சிந்தனைகளைச்
சொல்லுவன.

அப்படி இருந்த பாவேந்தரைத்தான்,
தமிழகத்தையும்இறைத்தலங்களையும்
சுற்றியிருந்த வைதீகக் கொடுமைகள்
ஆன்மிகத்தை விட்டே விரட்டியது.
பெருத்த மூடநம்பிக்கைகளுக்கு முட்டுக்
கொடுத்துக் கொண்டு,மக்களை வருண
பேதிப்பால் கூறுபோட்டு, கல்வியை மறுத்து,
உச்சமாக தமிழ்நெறிகளையும் கடவுள்களையுமே
தமிழர்களிடம் இருந்து பிரித்து, தமிழ்நாட்டின்
இயல் நெறிகளின் தடமே ஏறத்தாழ இல்லாத
நிலை செய்து,பலரை நாத்திகத்துக்கும் பிற
மதங்களுக்கும்விரட்டிக் கொண்டே இருந்தது,
இருக்கிறது வைதீக மதம்.
அந்த வைதீகத்தை வெறுத்து ஓடியவர்களில்
நாத்திக நிலையில்நின்ற பலருள் பாவேந்தரும்
ஒருவர்.
மேலே உள்ள பாடலில் அவர் காட்டியிருக்கும்
இறைத்துய்ப்பை உணரும் நடுநிலையாளர்,அவர்
அப்படி நாத்திகத்திற்குப் போனது எவ்வளவுபெரிய
இழப்பு என்று புரிந்து கொள்ள முடியும்.

வெகுண்டு அவர் தமிழ்க் கடவுள்களைஏசியதும்
உண்டு. ஏன் பீரங்கியையே தூக்க வேண்டும்என்று
சொன்னதும் உண்டு.
அது அவர் தமிழ்க்கடவுள்களைஏசியது என்று
எண்ணுவதை விட,தமிழ்க்கடவுளரைச் சுற்றியிருந்த
வைதீகக் குற்றங்களைச் சாடினார் என்பதுதான் உண்மை.
இதையே பிடித்துக் கொண்டு சிலர்'பீரங்கி பீரங்கி..' என்று பிதற்றுவதெல்லாம்இறைவனை அப்படிச் சொன்னாரே
என்ற இறையன்பினால் அல்ல.

அறியாமையில் சிலரும்,வைதீகக் காப்புப் போட்டுக்
கொண்டேஇருக்க சிலரும் செய்யும் பரப்புரை இது
என்பதை நாம் உணர்ந்தே இருக்கிறோம்.

ஆதலாற்றான் சில வைதீகப்பிரியர்கள்மற்றும் சில அவசரக்காரர்கள்பாவேந்தர் குறித்து சொல்லும்
தவறான கருத்துகளை நாம் செவிமடுப்பதில்லை.
நாத்திக நிலையில் இருந்து பலரும் வைதீகத்தைத்தான்
எதிர்க்கிறார்கள் தமிழகத்தில்.
ஆனால் இதனையே சாக்காகவைத்துக்கொண்டு
பல திரிப்புக்களையும் புரட்டுக்களையும்செய்து
கொண்டு வைதீகம் பழைய நினைப்பிலேயே திரிகிறது.

ஆகவே, தமிழ் மொழியை,தமிழ் மண்ணைப்
பேணுவதோடு,நமது தொன்மத் தமிழ் இறை
நெறிகளையும்மீட்டெடுத்துப் பயின்றுபேண
தமிழர்கள் முனைப்புடன் இருக்க வேண்டும்.

கோயிலில் வடமொழி, மூடநம்பிக்கை,
சாதியாதிக்கம் என்றுசொல்லிக் கொண்டே,
யாரோ வந்து நமக்கு நமது இறைச்
செல்வங்களை, தமிழ்ச் செல்வங்களைத்
திருப்பித் தருவார்கள்என்ற எண்ணத்தில்
வைதீகத்திலேயே சுழன்றுகொண்டிராமல்
நமது அன்றாட வாழ்வில்முழுமையாக
வைதீகத்தைத் துறந்து தமிழ்ச்சமயநெறி
பேணுதலே நமது கடமையாக இருக்க முடியும்.

மாற்றம் என்பது மாறாதது, பாவேந்தர்
போன்ற பல புரட்சிக் காரர்களின் முயற்சியால்
சிறிதளவு தமிழ்நாடு மாறியிருக்கிறது என்றே
சொல்ல வேண்டும்.

இந்த நிலையில், இன்று பாரதிதாசன் இருந்திருந்தால்
அவர் நமது முக்கியமானஇறைச்செல்வங்களை
மெய்யியல் செல்வங்களைமீட்டெடுப்பதையே
தலைமையாகக் கொண்டிருக்கக் கூடும்.
ஏனென்றால் அதில்தான் தமிழ் உலகம்இன்னும்
மொத்தமாக கவிழ்ந்து கிடக்கிறது.தமிழர்களின்
இயல்பு நெறிகளான சிவநெறியும் மால் நெறியும்
மீளாமல் தமிழருக்கு வாழ்வில்லை.
அன்புடன்,
நாக.இளங்கோவன்_..
பி.கு::செய்ய வேண்டிய பலவற்றில் இந்த ஒன்றனை உறுதியாகச்செய்திருப்பார் என்றே எனக்குப் படுகிறது.
*********************************************************