Thursday, April 24, 2008

பாரதிதாசன் வாரம்- சிறீதரன்


எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

மங்காத தமிழென்று சங்கே முழங்கு!



* இன்று பாரதிதாசனின் 117வது பிறந்த தினம் மா.க.ஈழவேந்தன்
19 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 20 ஆம் நூற்றாண்டு இறுதிக்காலம் வரை பல கவிஞர்களை தமிழகம் உலகுக்குத் தந்துள்ளது. வள்ளலாரை நினைவு கொள்ளும் நாம் அடுத்து பழம் பெரும் கவிஞர்களாகிய பாரதிதாசனை `கவிமணியை' நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை ஆகியோர் நினைவுக்கு வருகின்றனர். இது கொண்டு மேற்குறித்தவர்கள் நீங்கலாக தமிழுக்கு வாழ்வு கொடுக்கும் வேறு யாரையும் தமிழகம் தரவில்லை என்பது பொருள் அல்ல.
சுப்பிரமணிய யோகி, பராசக்தி காவியம் தந்த சுத்தானந்த பாரதி இவர்களை அடுத்து காலத்தின் கருத்தோட்ட தேவைகளுக்கு ஏற்ப கவியரசர் கண்ணதாசன் , கவிஞர் வாலி , கவியரசு வைரமுத்து, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் , கவிஞர் மேத்தா ஆகியோர் எமது நினைவலைகளில் மோதுகின்றனர்.
தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி கூட கவிஞர்கள் வரிசையில் தனியிடம் பெறுமுறையில் கவிதைகளைப் பாடாவிடினும் தனி முத்திரையை சில கவிதைகளில் பதித்துள்ளார் என்பதை நாம் மறுப்பதற்கில்லை.
ஈழத்தை பொறுத்தவரையில் முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகள் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை மற்றும் எண்ணற்ற இஸ்லாமிய கவிக்குயில்களை நாம் மறப்பதற்கு இல்லை. மாறாக இதயத்தில் ஏற்றி மகிழ்கிறோம். காக்கி இராசதுரை துறைநீலாவணன் ஆகியோர் எம் இன எழுச்சிக்காகப் பாடிய பாடல்கள் எம் நினைவை விட்டு அகல முடியாது.
யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை தமிழ் தாத்தா சோமசுந்தரப் புலவர் அவர் மகன் சோ.இழமுருகனார், வித்துவான் வேந்தனார், கவிஞர் அம்பி ஆகியோரையும் நினைத்துப் பார்க்கிறோம்.
நாம் இங்கு நினைவு கொண்டு எழுதுவது பாரதிதாசனைப் பற்றியாகும். காரணம் பாரதிதாசன் பிறப்பும் இறப்பும் ஏப்ரல் மாதத்திலேயே நிகழ்கிறது. ஏப்ரல் 1891.29 ஆம் திகதியில் தோன்றிய இவர் ஏப்ரல் 1964 ஆம் ஆண்டு 21 இல் நிறைவாழ்வு வாழ்ந்து தனது எழுபத்து மூன்றாம் அகவையில் நிலைத்த புகழை நிலமிசை நிலை நாட்டி எம்மை விட்டுப் பிரிந்துள்ளார். பாரதிதாசன் 70 ஆம் அகவையைத் தாண்டி மறைய அவரது குரு பாரதி 39 ஆண்டுகள் தான் இம்மண்ணில் வாழ்வு பெற்றார். சுப்புரெத்தினம் என்ற இயற்பெயர் பூண்டு இருந்த இவர் பாரதி மீது கொண்டிருந்த பற்றினால் தன்னை பாரதிதாசன் என அழைத்து பெருமை கொண்டார். பாரதியின் தாசனாய் விளங்கியபோதும் பாரதியை விஞ்சுகின்ற அளவிற்கு பல்துறையில் பல பாடல்களைப் படைத்து பெருமை கொண்டார்.
பாரதியை திலகயுகக் கவிஞர் என்று அழைத்த ராஜாஜி, நாமக்கல் கவிஞரை காந்தியுகக் கவிஞர் என்று அழைத்தார். எம்மைப் பொறுத்தவரை பாரதிதாசன் திராவிட எழுச்சி அல்லது தமிழனின் எழுச்சிக் கவிஞனாகவே காட்சி அழிக்கின்றார். தமிழக கவிஞர்கள் பலர் ஏன் ஏறக்குறைய எல்லோரும் இயற்கையையும் இறைவனையுமே பாடியுள்ளனர். ஆனால், பாரதிதாசனோ சுப்பிரமணி துதி பாடினாலும் பின்பு இறைவனைப் பற்றிப் பாட மறுத்து நாத்திகனாக விழங்கினார் . ஆனால், தமிழ் என்று வருகின்ற பொழுது தமிழை ஒரு தெய்வீக நிலைக்கு உயர்த்தி தமிழையே வழிபட்ட கவிஞராக அவர் விளங்கியதை அவரது வரலாற்றை ஆராய்வோர் உணர்வர். பாரதிதாசளில் எத்தகைய குறைகளை நாம் காண முயன்றாலும் அவர் போல் தமிழ் உணர்ச்சிப் பிழம்பாக விளங்கிய ஒரு கவிஞரை நாம் இதுவரை கண்டதில்லை.
"எங்கெங்கு காணினும் சக்தியடா அவள் எழுகடல் வண்ணமடா" என்ற பாடலுடன் அறிமுகமானவர். இவர் பாரதியுடன் பத்தாண்டுகள் நல்லுறவு பேணி புதுச்சேரியில் வாழ்ந்தவர் பாரதியோ புதுவையில் தஞ்சம் புகுந்தவர். ஆனால், பாரதிதாசனோ புதுவை மண்ணுக்குரியவர். காரணம் எதுவோ நாம் அறிவோம் பாரதியின் பத்தாண்டு புதுவை வாழ்வு தான் தமிழ் இலக்கியத்தின் தலையாய படைப்பிற்கு காரணமாய் அமைந்திருந்தது. பாரதிதாசன் போல் பார்ப்பனீயத்தை எதிர்த்த கவிஞரை நாம் காண முடியாது. ஆனால், 20 ஆம் நூற்றாண்டில் இருவர் பார்பனர் பைந்தமிழ் பற்றுடையோர் என்று கூறி பாரதியின் தாசனாகவும் சூரிய நாராயண சாஸ்திரி என்ற இயற்பெயரை பரிதிமாற்கலைஞர் என மாற்றி அப்பெருமகனையும் இவர் வாழ்த்தத் தவறியதில்லை. பாரதி பிறப்பால் பார்ப்பனராய் இருந்த போதிலும் பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே என்று பார்பனீயத்தை எதிர்த்த பாரதி தம் பூநூலையும் அறுத்தெறிந்து புரட்சி செய்தார். ஆகவே தான் எம் புரட்சிக் கவிஞர் பாரதியின் தாசனாக விளங்கினார். ஈழத்தில் நவநீதி கிருஷ்ண பாரதியார் தன்னை மாவைகாவுண்ய வெண்ணைக் கண்ணனார் என மாற்ற மறந்த சுகந்திரன் ஆசிரியர் மகேஸ்வர சர்மா பூநூலை அறுத்தெறிந்ததோடு கோவை மகேசனைத் தமிழில் போரோச்சினார்.
திராவிட நாட்டில் அறிஞர் அண்ணா அவர் தம்பிக்கு எழுதிய கடிதங்களை பயில்கின்ற போது கோவை மகேசனின் அரசியல் மழலை அருமைத்தோழனை விழிந்து வரைந்த கட்டுரைகள் சிலவேளையில் அறிஞர் அண்ணாவின் உணர்ச்சிகளை விஞ்சுகின்ற அளவிற்கு கோவை மகேசனின் கடிதங்களில் தமிழ் உணர்ச்சி பொங்கிப் பெருகியது.
இன்றைய சூழ்நிலையில் ஈழத்தமிழரைப் பொறுத்தவரை பாரதிதாசன் எம் தேவையை எவ்வளவு தூரம் நிறைவு செய்ய அவர் வாழ்வு பயன்பட்டது என்பதே இக்கட்டுரையாளனின் அடிப்படை நோக்கமாகும். அவரின் பின்வரும் பாடல் எம்சிந்தையைக் கொள்ளை கொள்ளும் பாடலாக அமைகிறது.
தென்னிசையைப் பார்க்கின்றேன் என் செல்வேன் என்றான்
சிந்தையெலாம் தோள்களெல்லாம் பூரிக்குதட
அன்றந்த இலங்கையினை ஆண்ட மறத் தமிழன்
ஐயிரண்டு திசை முகத்துப் தென் புகழை வைத்தோன்
குன்றெடுக்கும் பெருந்தோளான் கொடை கொடுக்கும் கையால்
குள்ளநரிச்செயல் செய்யும் கூட்டத்தின் கூற்றம்
என்றமிழர் மூதாதை என்றமிழர் பெருமான் இராவணன்கால் -அவன் புகழை இவ்வுலகம் அறியும்
வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்.
விசையொடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்
சூழ்ச்சிதனை வஞ்சகத்தைப் பொறாமை தன்னைத்
தொகையாக எதிர் நிறுத்தி தூள் தூளாக்கும்
காழ்ச்சிந்தை மறச்செயல்கள் மிகவும் வேண்டும்
கடல்போலச் செந்தமிழைப் பெருக்க வேண்டும்
கீழ்ச்செயல்கள் விட வேண்டும் இராவணன்றன்
கீர்த்தி சொல்லி அவன் நாமம் வாழ்த்த வேண்டும்".
பாரதிதாசன் வாழ்ந்த காலத்திலேயே ஈழத்துப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. எனினும், இத்தகைய உச்சக்கூட்டத்தை அன்று அடைந்ததில்லை. ஆனால், தொலைநோக்குச் சிந்தனை உடைய நம் பாரதிதாசன் பின்வரும் முறையில் பாடியிருப்பது எமக்கு தெம்பு தரும் நிகழ்ச்சியாகும். இதோ அவர் பாடியவை.
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே
சிங்களம் சேர் தென்நாட்டு மக்கள்
தீராதி தீரரென்று வாதூதுசங்கே
பொங்கு தமிழர்க்கு இன்னல் விழைந்தால்
சங்காரம் நிகழுமென்று சங்கே முழங்கு"
என்று அன்றே பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைந்தால் சங்காரம் நிஜம் என்று முழங்கியவர் நம் பாரதிதாசன்.
Anbudan

Sritharan



<>பாரதிதாசன்முதல் திரைப்பட பாடல்<>
Thu, Apr 24, 2008 at 3:50 AM

பாரதிதாசன் பாடல் எழுதி வெளியான
முதல் திரைப்படம் டி.கே.எஸ். சகோதரர்களின்
தயாரிப்பில் வெளிவந்த
"பாலாமணி அல்லது பக்காத் திருடன்".
இது வெளிவந்தது 1937 இல்.
வடுவூர் துரைசாமி ஐயங்காரின் கதை.

இப்படத்தில் இடம்பெற்ற பாரதிதாசனின்
பாடல் ஒன்று:

"ஆலமர உச்சியிலே அழகான சிட்டுக்கூட்டம்
ஆணும் பெண்ணும் சகவாசம் பண்ணும்ஓலை
பண்ணும் சலசலப்பில்உயர இருக்கையிலே
உடல் துள்ளுதே! - இதுபயம் கொள்ளுதே!"


அன்புடன்சிறீதரன்
http://kanaga_sritharan.tripod.com/


<>பாரதிதாசன் திரைப்பட பாடல்<>
Sat, Apr 26, 2008 at 12:08 AM

"பாலாமணி" (1937) இல் பாரதிதாசன் எழுதிய
பாடல் அன்று பலரின் விமரிசனத்துக்கு இலக்கானது.
அப்படப் பாடல்கள் விருத்த இலக்கணத்துக்கு
உட்பட்டு அமையப்படவில்லை என்பது
அவர்களின் வாதம்.
பாரதிதாசன் எழுதியது சிந்துப்பா வகையைச்
சேர்ந்தது. அது அப்போது புதிய பாடல் வகை.
பாரதிதாசன் இதற்கு பதிலளித்து
"நகர தூதன்" 19/9/37 இதழில் "விருத்தமல்ல..."
என்ற தலைப்பில் இப்படி எழுதினார்:

"தமிழ் தெரியாத ஒரே காரணத்தால்
பலர் தமிழ்க் கவிதைகள், தமிழ் விமரிசனம்,
தமிழ்ப் பத்திரிகை எழுதிப் பிழைப்பதைப்
பிள்ளை (அரியூர் வ, பத்மநாதப் பிள்ளை)
அவர்கள் பார்த்து வருகிறார். சகிக்காத
உள்ளம் - மொத்தத்தில் பாய்ந்தே தீரும்.
பொது நலங் கருதி எழுச்சியடைந்த
அந்த வரிப்புலியை நான் வாலுருவி
விடுகிறேன். அதன் இலட்சியத்தை
நோக்கி!

அவ்வெழுச்சியை நான் ஆயிரம் முறை
வாழ்த்துகிறேன்."
தமிழ்ப்பற்றின் காரணமாகவே அவர்கள்

குறை கூறினர் என உணர்ந்து அவர்களைப்
பாராட்டினார்.

பாரதிதாசனின் பினவரும் பாடல் 1966
இல் வெளிவந்த "மணிமகுடம்" என்ற
திரைப்படத்தில் இடம்பெற்றது.

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!
குகைவாழ் ஒரு புலியே!
உயர்குணமேவிய தமிழா!
வலியோர் சிலர் எளியோர்

தமைவதையே புரிகுவதா?
மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உலகாள உனது தாய் மிக
உயிர்வாதை அடைகிறாள்;
உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

தலையாகிய அறமே
புரிசரிநீதி உதவுவாய்!சமமே
பொருள் ஜனநாயகம்எனவே
முர சறைவாய்!
இவையே உணவிலையே

கதிஇலையே எனும் எளிமை
இனிமேலிலை எனவே முரசறைவாய்
முரசறைவாய்!

அன்புடன்,
சிறீதரன்
http://kanaga_sritharan.tripod.com/

தகவலுக்காக:
Sun, Apr 27, 2008 at 1:31 AM
பாரதிதாசன் பாடல் எழுதிய முதல் படம்
"ஸ்ரீ இராமானுஜர்". ஆனாலும் இது 1937 இல்
"பாலாமணி" வெளி வந்த பின்னரே, 1938 இல்,
வெளிவந்தது. "மணிக்கொடி" இலக்கிய
நண்பர்கள் சேர்ந்து வெளியிட்டிருந்தனர்.
ஏ.நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த
இத்திரைப்படத்தில் சங்கு சுப்பிரமணியம்,
என்.ராமரத்னம் ஆகியோர் நடித்திருந்தனர்.
அன்புடன்
சிறீதரன்

No comments: