Monday, April 28, 2008

பாரதிதாசன் வாரம்-பேரா.கோவி.இராசகோபால்




"நெஞ்சில் நின்ற பாவேந்தர்"


இனிய தமிழ் நெஞ்சங்களே!



நம் தமிழ்த்தாய் சென்ற நூற்றாண்டில் முன்

எப்போதும் இல்லாத எண்ணிக்கையில்
எண்ணற்ற கவிக்குழந்தைகளை
ஈன்றெடுத்தாள்.
அவர்களுள், 'ஈன்ற பொழுதினும்
பெரிதுவக்கும்படி', உச்சி மீது வைத்துத்
தமிழ் உலகோர் யாவரும்
மெச்சிப் புகழும்படி, வரலாற்றில்
இடம்பிடித்தோர் இருவர். ஒருவர்,
சுப்பிரமணிய பாரதியார்.
மற்றொருவர், கனக. சுப்புரத்தினம்.
மூத்தவர் பாரதியார், பின் ஒரு காலத்தில்,
இளையவரின் கவிதை
வாழ்க்கைக்கு 'ஆசான்' ஆனார்.
இளையவர் அவருக்குத் 'தாசன்' ஆனார்.
இயற்பெயர் காற்றில் கரைந்த கற்பூரம் ஆனது.
புனைபெயர் 'பாரதிதாசன்' பட்டாபிஷேகம் கண்டது.
"எனக்குக் குயிலின் பாடலும், மயிலின் ஆடலும்,
வண்டின் யாழும், அருவியின் முழவும் இனிக்கும்;
பாரதிதாசன் பாட்டும் இனிக்கும்" என்று திரு.வி.க. அகம்
மகிழ்ந்து உரைத்தது இங்கு நினைவுகூரத் தக்கது.
சாமிகள் பெயரால், சாதிகள் பெயரால் 'ஆசாமிகள்'
டத்தி வந்த அட்டூழியங்களை எல்லாம் அறவே
வேரறுத்ததால், தமிழ்மொழி‍, இன, நாட்டு வளர்ச்சிக்கு
எதிரான தடைகளை எல்லாம் முற்றும் முழுவதுமாக
உடைத்தெறியக் கவிதைகள் பாடியதால், காட்டாற்று
வெள்ளத்தின் வேகம், இவர்தம் எழுத்துகளில் வீரியமாகப்
பயணித்ததால், இவரைப் 'புரட்சிக்கவிஞர்' என்றார்
பெரியார் ஈ.வெ.ரா. 'சுயமரியாதை இயக்கத்தின்
ஒப்பற்ற கவி'யைப் 'பாவேந்தர்' என்று போற்றிப்
பூபாளம் பாடுகிறது தமிழுலகம்.
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தனர்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே"
என 'நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா'
இது முளைத்தது புதுச்சேரியில். என்னே
ஆச்சரியம்!
ஈடுஇணையில்லா ஓர் இந்தியச் சமூகப் போராளி,
'பாரத ரத்னா' பாபா சாஹெப் அம்பேட்கர் பிறந்த
அதே 1981 ஆம் ஆண்டில், அதே ஏப்ரல் மாதத்தில்
'நெருப்புக் குரல் கொண்ட இந்தக் கறுப்புக்குயில்'
கண் விழித்தது.
5 நாள்கள் பிந்தி அதாவது ஏப்ரல் 29 இல்
இது பிறந்தது தான் ஒரே வித்தியாசம்.
'வாழும் தன் சகமனிதனின் அன்றாடப்
பிரச்சினைகள் மீது கவனம் செலுத்தாமல்,
எங்கோ கற்பனை உலகில் ச‌ஞ்ச‌ரித்துக்
கொண்டு, ச‌முதாய‌த்தோடு அவ்வ‌ளவாக‌த்
தொட‌ர்பு இல்லாம‌ல் 'திரிச‌ங்கு சொர்க்க‌த்தில்'
திளைத்து இருப்ப‌வ‌ன் தான் க‌விஞ‌ன்' என்ற
ப‌த்தாம்ப‌ச‌லித் த‌ன‌த்தை ம‌றுத‌லித்த‌ சீரிய‌
இல‌க்கிய‌வாதிக‌ள் ப‌ரம்ப‌ரையில் உதித்த‌ ஓர்
உதய‌சூரிய‌ன் தான் பாவேந்த‌ர் பார‌திதாச‌ன்.
ஆர‌ம்ப‌ கால‌த்தில், ஓர் இந்திய‌த் தேசிய‌க்
க‌விஞ‌ராக‌வே இவ‌ர் த‌ம் எழுத்துப் ப‌ய‌ண‌த்தைத்
தொட‌ங்கினார். ஆனால், மிகு விரைவிலேயே 1928
இல் பெரியாரின் தொட‌ர்பு ஏற்ப‌ட்ட‌த‌ன் பிற‌கு, 'ஓர்
ஒப்புய‌ர்வு இல்லாத் த‌மிழ்த்தேசிய‌க் க‌விஞ‌ராக‌'
இவ‌ர் ப‌ய‌ணித்தார்; ப‌ரிண‌மித்தார்.
இவ‌ர‌து பார்வை ப‌ட்டு, த‌மிழ்மொழி, த‌மிழினம்,
ச‌ம‌ய‌ ம‌றுப்பு, கைம்பெண் ம‌றும‌ண‌ம், தொழிலாள‌ர்
உல‌க‌ம் என்பன‌ ப‌ளிச்சென வெளிச்ச‌ம் பெற்ற‌ன‌.
'வெறும் ஆட்சி விடுத‌லை என்ப‌து அர்த்த‌ம‌ற்ற‌து;
எல்லோரும் ஓர் நிறை'
என்ற‌ ச‌மூக‌ விடுத‌லையே அடிப்ப‌டையில்
தேவைப்ப‌டுவ‌து என்ப‌தைத் தீர்க்க‌மாக‌ உண‌ர்ந்தார்;
உரைத்தார். என‌வே, பெரும்பாலான‌ ம‌க்க‌ள் கூட்ட‌த்தை
ஏய்த்துக் கொண்டிருந்த‌ புராண‌ங்க‌ளை, க‌ட‌வுள்
நம்பிக்கையை, 'வ‌ர்ணாசிர‌ம‌க் கோட்பாட்டை'ப்
'பொய் பித்தலாட்ட‌ங்க‌ள்' என்றார்; 'குப்பைக்
கூள‌ங்க‌ள்' என்றார்.
இந்த‌ப் 'புளுகு மூட்டைக‌ளை' எல்லாம் அவிழ்த்து
அள்ளித் தெளித்துக் கொண்டிருந்த‌ 'ஆரிய‌
மேட்டிமைத் த‌ன‌த்தை'க் குற்ற‌வாளிக் கூண்டிலே
ஏற்றினார்; எள்ளி ந‌கையாடினார்; உறுதியாக‌க்
கண்டித்தார். 'த‌மிழை இவ‌ர் அள‌விற்கு நேசித்த‌வ‌ர்க‌ள்,
இல்லை...இல்லை சுவாசித்தவ‌ர்க‌ள்' இவ‌ருக்கு
முன்னேயும் பின்னேயும் ஒருவரும் இல்லை
என்றே சொல்லலாம்.
"செந்த‌மிழே! உயிரே! ந‌றுந் தேனே! செய‌லினை
மூச்சினை உன‌க்க‌ளித் தேனே! நைந்தாயெனில்
நைந்து போகுமென் வாழ்வு! ந‌ன்னிலை
உன‌க்கெனில் எனக்குந் தானே!"என்ற‌ப‌டி
த‌ம் உட‌ல், பொருள், ஆவி மொத்த‌த்தையும்
த‌மிழின், த‌மிழ‌ரின் வ‌ள‌ர்ச்சிக்கும் வாழ்வுக்கும்
ஒப்புக் கொடுத்த‌வர் பார‌திதாச‌ன். இந்திமொழி
ஆதிக்கத்தை எதிர்த்துத் தமிழ்நாட்டில் திராவிடக்
கழகங்கள் போராட்டங்கள் நடத்திய கால கட்டத்தில்,
இவருடைய கவிதைகள் தாம் போர் முரசுகளாக,
போர் வாள்களாகச் செயலாற்றி இருக்கின்றன.
"அவர்தம் பாடல்களைப் படிக்கின்ற அந்நியனும்
தமிழனாகி விடுவான்" என்று அறிஞர் சிதம்பரநாதன்
செட்டியார் ஒருமுறை சொன்னது வெறும் புகழுரை
இல்லை. "த‌மிழுக்கும் அமுதென்று பேர்! அந்தத்
த‌மிழ்இன்ப‌த் த‌மிழெங்க‌ள் உயிருக்கு நேர்!
"க‌னியிடை ஏறிய சுளையும் முற்ற‌ல் க‌ழையிடை
ஏறிய‌ சாறும் ப‌னிம‌ல‌ர் ஏறிய‌ தேனும் காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும் ந‌னிப‌சு பொழியும்
பாலும் தென்னை ந‌ல்கிய‌ குளிரிள நீரும் இனியன‌
என்பேன் எனினும் த‌மிழை என்னுயிர் என்பேன்
கண்டேன்" "விழுந்த‌ தமிழ்நாடு த‌லைதூக்க என்ற‌ன்
உயிர்த‌னையே வேண்டினும் த‌ருவேன்"என்ற‌ப‌டி த‌ம்
உள்ள‌த்தை, உண‌ர்வை, உயிரைத் த‌மிழோடு அர்ப்ப‌ணித்துக்
கொண்டவ‌ர் தான் பார‌திதாச‌ன். 'எங்கும் த‌மிழ் எதிலும்
த‌மிழ்' என்ப‌தே இவ‌ரின் கொள்கையாகும்.
"ச‌லுகை போனால் போக‌ட்டும், என் அலுவ‌ல்
போனால் போக‌ட்டும். த‌லைமுறை ஒரு கோடி
க‌ண்ட‌ என் த‌மிழ் விடுத‌லை ஆகட்டும்' எனத்
தீவிர‌த் த‌மிழிய‌க்க‌ப் போராளியாக‌ச் செய‌ல்ப‌ட்ட‌வ‌ர்
தான் பாவேந்த‌ர்.
ஒல்லும் வ‌ழி எல்லாம் த‌மிழ்மொழி வ‌ள‌ர்ச்சிக்கும்
வாழ்வுக்கும் தொண்டாற்றிய‌ பாவேந்த‌ர்,
சாதி-ச‌ம‌ய‌ம் க‌ட‌ந்த‌ ச‌முதாய‌ வாழ்வுக்கும்
போராடினார்.
"இருட்ட‌றையில் உள்ள‌தடா உல‌க‌ம் சாதி
இருக்கின்ற‌ தென்பானும் இருக்கின்றானே"என்று
நெஞ்சு குமுறிச் சாதிக் கொடுமையைச் சாடினார்.
மிக்குய‌ர்ந்த‌ சாதி கீழ்ச்சாதி என்னும் வேற்றுமைக‌ள்
த‌மிழ்க்கில்லை! த‌மிழ‌ர்க்கில்லை!
பொய்க்கூற்றே சாதி என‌ல்"
"பேடி வ‌ழ‌க்க‌ங்க‌ள் மூட‌த்த‌ன‌ம் இந்த‌ப் பீடைக‌ளே
இங்குச் சாத்திர‌ங்க‌ள்" என்று பட்டவர்த்தனமாகத்
ம் எண்ணங்களை எழுத்துகளில் பரப்பினார்
பாவேந்தர் பாரதிதாசன்.
'சாணிக்குப் பொட்டிடுச் சாமிஎன்போர் செய்கைக்கு
நாணி நகைத்த' நம் புரட்சிக்கவிஞர், 'வேண்டாத சாதி
இருட்டு வெளுப்பதற்குத் தூண்டா மணிவிளக்காய்த்
துலங்கிய' ஒரு சீரிய சமூகச் சிந்தனையாளரான
இவர்தான், முதன்முதல் முன் எவரினும் காட்டமாகப்
பெண் அடிமையை எதிர்த்தார்; பரிபூரண விடுதலைக்காகப்
பெண்களைச் சுயமாகப் போராடக் களம் அமைத்துக்
கொடுத்தார்.
"மாதர் தம்மை இழிவு செய்யும் மடமை யைக்
கொளுத்துவோம்" எனப் பாரதியார் இவருக்கு முன்னே
கொள்கைப் பிரகடனம் செய்தார் என்பது உண்மையே.
எனினும், 'ஆணுக்கொரு நீதி - பெண்ணுக்கொரு நீதி' எனத்
'தாந்தோன்றித் தனமாக'ச் சமூகம் செயல்பட்டு வந்த
காலகட்டத்தில், கல்வி, காதல், திருமணம், விதவை
மறுமணம், சமூக மதிப்பு என்ற எல்லா விஷயத்திலும்
ஆணுக்கு நிகராகப் பெண்ணை வளர்த்தெடுக்க வேண்டும்
என்ற தீர்க்கமான சிந்தனை முதன்முதல் புரட்சிக்கவிஞரிடமே
துளிர்விட்டது; ஆழமாக வேர்விட்டது எனலாம்.
பெண்களுக்குக் கல்வி வேண்டும்; அவர்கள் தம்மைத்
தாமே பேணுவதற்காக மட்டுமன்று; குடித்தனம் பேண,
குடித்தனத்தில் தோன்றும் மக்களைப் பேண, உலகைப்
பேண, ஏன், கல்வியைப் பேணவே பெண்களுக்குக் கல்வி
அவசியம் வழங்கப்பட வேண்டும் என்றார் பாரதிதாசன்.
கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம். அந் நிலத்தில் புல்
விளைந்திடலாம்; நல்ல புதல்வர்கள் விளைவதில்லை"
என்பது பாவேந்தரின் முடிவான கருத்து.
'கோரிக்கை அற்றுக் கிட‌க்கும் வேரில் ப‌ழுத்த‌
ப‌லாக்க‌ள்; குளிர் வ‌டிகின்ற‌ வ‌ட்ட‌ நிலாக்க‌ள்;
தென்ற‌ல் சிற‌ந்திடும் பூஞ்சோலைகள்; ந‌றுஞ்சீத‌ள‌ப்
பூமாலைக‌ள்; ந‌ல‌ஞ்செய் ந‌றுங்க‌னிக‌ள்; சூட‌த்த‌கும்
கிரீட‌ங்க‌ள் ந‌ம் பெண்ம‌க்க‌ள்' சீ! என்று இக‌ழ‌ப்ப‌ட்டு
ம‌ண்ணுக்கும் கேடாய் அவ‌ம‌திக்க‌ப்ப‌ட்ட‌
அவ‌ல‌ங்க‌ளை எல்லாம் துடைத்தெறிய‌ச்
ச‌ரியான‌ திராணியுட‌ன் போர்க்குர‌ல் எழுப்பியவ‌ர்
தான் பார‌திதாச‌ன்.
"வாடாத‌ பூப்போன்ற‌ ம‌ங்கை ந‌ல்லாள் ம‌ணவாள‌ன்
இற‌ந்தால்பின் ம‌ண‌த்தல் தீதோ? பாடாத‌ தேனீக்க‌ள்
உல‌வாத் தென்ற‌ல் ப‌சியாத‌ ந‌ல்வயிறு பார்த்த‌
துண்டோ?" "துணைவி இற‌ந்த‌பின் வேறு
துணைவியைத் தேடுமோர் ஆட‌வ‌ன் போல்
பெண்ணும் துணைவ‌ன் இற‌ந்த‌பின் வேறு
துணைதேட‌ச் சொல்லிடு வோம்புவி மேல்"
இப்ப‌டி வித‌வைத் திரும‌ண‌த்தை வ‌ர‌வேற்றுப்
பாடிய‌ பாவேந்த‌ர், 'எழிற்க‌ருங் க‌ண்ம‌ல‌ர்க‌ள்;
தாம‌ரை முக‌ங்க‌ள்; கூவ‌த் தெரியாக் குயிலின்
குஞ்சுக‌ள்; தாவாச் சிறுமான்க‌ள்; மோவே
அரும்புக‌ள்' தாலி அறுக்க‌ப்ப‌ட்டு, வித‌வைக‌ள்
ஆகிக் கால‌ம் எல்லாம் த‌ம் தந்தைய‌ர் வீட்டில்
டைப்பிண‌ங்க‌ளாக‌க் கெட்ட‌ழிய‌ வேண்டுமா?
கூடாது...கூடாது! குழ‌ந்தைத் திரும‌ண‌த்தை
உட‌னே த‌டைசெய்ய‌ வேண்டும்' என்று எக்காள‌ம்
ஊதினார்.
"க‌ல்யாண‌ம் ஆகாத‌ பெண்ணே! உன் க‌தித‌ன்னை
நீநிச்ச‌ ய‌ம்செய்க‌ க‌ண்ணே!" என‌ முதன்முத‌ல்
பெண்க‌ளைத் த‌ட்டி எழுப்பிய‌வ‌ரும் ந‌ம் புர‌ட்சிக்க‌விஞ‌ர்
தான். இவ‌ர் காண‌ விரும்பிய உல‌க‌ம் வித்தியாச‌மானது.
"சாதிம‌த‌ பேத‌ங்க‌ள் மூட‌ வ‌ழ‌க்க‌ங்க‌ள் தாங்கி
நடைபெற்றுவ‌ரும் ச‌ண்டையுலகித‌னை ... ஒழித்திடுவோம்!;
ஏழை முத‌லாளி என்ப‌தில்லாப் 'புதிய‌தோர் உல‌க‌ம் செய்வோம்;
கெட்ட‌ போரிடும் உல‌க‌த்தை வேரொடு சாய்ப்போம்;
பொதுவுடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்;
புனித‌மோடு அதை எங்க‌ள் உயிரென்று காப்போம்" என‌ப்
புர‌ட்சிக்கீத‌ம் இசைத்த‌வ‌ர் தான் பாரதிதாசன். 'தொல்லுல‌க‌
ம‌க்க‌ளெலாம் ஒன்றே' என்னும் தாயுள்ள‌ம்;
தூய உள்ளம்; பெரிய உள்ள‌ம் கொண்ட‌ ம‌க்க‌ளையே
நேசித்த‌து இவ‌ரின் உள்ள‌ம். 'எவனும் யாரையும் எக்
காரண‌ம் கொண்டும் ஏய்க்க‌க் கூடாது' என்ப‌து தான்
இவர் சித்தாந்தம். 'ஏய்க்கப் பட்டோர் இனியும்
ஏமாளிக‌ளாக‌ இருக்க‌க் கூடாது;
இவ‌ர்க‌ள் க‌ண்விழிக்க‌ வேண்டும்; ம‌ண்
சிவ‌க்க‌ வேண்டும்'. இதுவே புர‌ட்சிக்க‌விஞ‌ரின்
உண‌ர்ச்சிக் கொந்த‌ளிப்பு; எதிர்பார்ப்பு.
"வ‌லியோர்சில‌ர் எளியோர்த‌மை வ‌தையே புரிகுவ‌தா?
ம‌க‌ராச‌ர்க‌ள் உல‌காளுத‌ல் நிலையாம்எனும் நினைவா?
கொலைவாளினை எடடாமிகு கொடியோர்செய‌ல்
அற‌வே! குகைவாழ்ஒரு புலியே!உய‌ர் குண‌மேவிய
த‌மிழா!" "ஓட‌ப்ப‌ ராயிருக்கும் ஏழைய‌ப்ப‌ர் உதைய‌ப்ப‌
ராகிவிட்டால் ஓர்நொ டிக்குள் ஓட‌ப்ப‌ர் உய‌ர‌ப்ப‌ர்
எல்லாம் மாறி ஒப்ப‌ப்ப‌ ராய்விடுவ‌ர் உண‌ர‌ப்பாநீ"
என்று ம‌ட‌மையில் துயின்றிருந்த‌ த‌ன்ன‌ரும்
த‌மிழ்ம‌க்க‌ளைத் தம் பாட்டுத் திற‌த்தாலே
பாலித்திட‌ச் செய்தார் பாவேந்த‌ர். "ம‌னித‌ரில்
நீயுமோர் ம‌னித‌ன்; ம‌ண்ண‌ன்று! இமைதிற‌;
எழுந்து ந‌ன்றாய் எண்ணுவாய்.
தோளை
உய‌ர்த்துச் சுடர்முக‌ம் தூக்கு! மீசையை முறுக்கி
மேலே ஏற்று! விழித்த‌ விழியில் மேதினிக்
கொளிசெய்! நகைப்பை முழ‌க்கு! ந‌ட‌த்து
லோகத்தை! உன்வீடு - உன‌து ப‌க்க‌த்தின் வீட்டின்
இடையில் வைத்த‌ சுவ‌ரை இடித்து வீதிக‌ள்
இடையில் திரையை வில‌க்கி நாட்டொடு
நாட்டை இணைத்து மேலே ஏறு! வானை
இடிக்கும் ம‌லைமேல் ஏறு விடாம‌ல்! ஏறு
மேன்மேல்! ஏறி நின்று பார‌டா எங்கும்;
எங்கும் பார‌டா இப்புவி ம‌க்க‌ளைப் பார‌டா
உன‌து மானிட‌ப் ப‌ர‌ப்பை! பார‌டா உன்னுட‌ன்
பிற‌ந்த‌ ப‌ட்டாள‌ம்! 'என்குல‌ம்' என்றுனைத் த‌ன்னிட‌ம்
ஒட்டிய‌ ம‌க்க‌ட் பெருங்க‌ட‌ல் பார்த்து ம‌கிழ்ச்சிகொள்!
அறிவை விரிவுசெய்! அக‌ண்ட‌ மாக்கு!
விசால‌ப் பார்வையால் விழுங்கு ம‌க்க‌ளை!
மானிட‌ ச‌முத்திர‌ம் நானென்று கூவு! பிரிவிலை
எங்கும் பேத‌ மில்லை! உல‌க‌ம் உண்ணஉண்!
உடுத்த‌ உடுப்பாய்! புக‌ல்வேன்; 'உடைமை
ம‌க்க‌ளுக்குப் பொது' புவியை ந‌ட‌த்து பொதுவில் ந‌ட‌த்து!
வானைப் போல‌ ம‌க்களைத் தாவும் வெள்ளை அன்பால்
இத‌னைக் குள்ள‌ ம‌னித‌ர்க்கும் கூற‌டா தோழ‌னே!"
இதுவே பாவேந்த‌ர் ஆத்மா. ப‌ர‌மாத்மா மேல் ஒரு
துளியும் நம்பிக்கையில்லா ஒரு ம‌காத்மாவின் '
ப‌ரிசுத்த ஆத்மா'வைச் ச‌ரியாக‌ப் புரிந்து கொள்ள‌,
அவ‌ர் எழுத்துக‌ளை எல்லாம் ஒரு முறையேனும்
நாம் வாசிக்க‌ வேண்டும் முழுதாக‌.
ந‌ன்றி!
வ‌ண‌க்க‌ம்.

No comments: