Monday, April 21, 2008

<>பாவேந்தர் பற்றி அறிஞர்கள்..<>


<>புரட்சிப் பாவேந்தர்<>


எடுப்பான தோற்றம் - மிடுக்கான நடை -
பரந்த முகம் - விரிந்த நெற்றி -
அடர்ந்தெழுந்த மீசை - தூக்கிப் பின்னோக்கி
வாரி விடப்பட்ட தன்னங்கறுத்த தலைமயிர் -
அகன்ற கண்கள் - குறுகுறுத்த பார்வை -
முகத்திற்குப் பொலிவூட்டும் மூக்கு -
மயிரடர்ந்த புருவம் - மூக்கின் மேல்
கண்ணாடி - கறுத்த மேனி -
மடித்துக் கட்டபபட்ட வேட்டி -
நீண்டு தொங்கும் முழுக்கைச்
சட்டை - மார்பிலே, குறுக்கே
போர்த்தப்பட்ட பொடி நிறப்
போர்வை - காலிலே தொடு தோல் -
கையிலே கொண்டிருக்கும்
சுருட்டு.

இந்தக் தோற்றப் பொலிவோடு
மனக்கண்முன் தோன்றிப் பூரிப்பும்
பெருமையும் பெருமிதமும் அளிப்பவர்
தாம் புரட்சிக் கவிஞர்
பாரதிதாசன் அவர்கள் ஆவார்கள்.


-நாவலர் நெடுஞ்செழியன்.


வீரராகத் திகழ.....
தழிழராக வாழ....!
"முகிலைக் கிழித்து வெளிக் கிளம்பும்
ஒரு முழுமதி போல".... தமிழ்நாட்டில்
தோழர் பாரதிதாசனின் கவிதை தேன்றியுள்ளது.
புரட்சிக் கருத்துகள் அவரது உள்ளத்தில்
பொங்கிப் பூரித்து, புதுமைக் கவிதைகளாக
வெளிவருகின்றன.
இயற்கையின் எழில், காதல், மேம்பாடு,
கலை நுணுக்கம் முதலியனபற்றி அவர்
இயற்றியுள்ள கவிதைகள் படிப்போரைக்
களிப்புக் கடலில் ஆழ்த்தும்.
ஆனால், புத்துலகக்கரை கொண்டு போய்ச் சேர்க்கும்.
வீரச் சமுதாயம், "கடவுள்", "மதம்", என்னும் கட்டறுத்து
காதல், கவிதை, கலை எனும் நறுமணச் சோலையில்
உலவும் நல்ல சமுதாயம்,
"ஓடப்பர்" இல்லது "ஒப்பப்பர்" உள்ள சமுதாயம்,
வஞ்சகத்தை வீழ்த்த வாளெடுக்கத் துணியும்
தீரச் சமூகம் - இது கவியின் இலட்சியம்.
இது பலப்பல பரிமளத்துடன் பாக்களாக
வந்துள்ளன.

ஒவ்வொன்றும் உள்ளத்துக்கு உல்லாசமும்,
உறுதியும் தருவன. முத்தும், பவளமும், வைரமும்
தங்கப் பேழையில் இட்டுத் தருவதுபோல் பாரதிதாசனின்
கவிதைகளைத் திரட்டி அழகிய வடியினதாக, சென்னை
"தமிழ் நூல் நிலையத்தார்" வெளியிட்டுள்ளனர்.
இளைஞர்கள் ஒவ்வொருவரும் இதனைப்
பெற வேண்டும். பேறு பெற அல்ல.
புத்துலகக் கருத்து பெற, புதுமைச் சுவையை உண்ண,
வீரராகத் திகழ! தமிழராக வாழ!
- பேரறிஞர் அண்ணா.

<><>சுயமரியாதை இயக்கத்தின் ஒப்பற்ற கவி<><>
"பாரதிதாசன் கவிதைகள்" என்னும் புத்தகம்
தமிழ் நாட்டுக்கு ஒரு சிறந்த பொக்கிஷமாகும். இது,
படிப்போருக்குக் கவியா? வசனமா?
என்று மலைக்கும் படியான ஓர் அற்புதக்
கவித்திரட்டு என்றுதான் சொல்ல வேண்டும்.
கவிதைகள் அமைப்புப் பெருமை
இங்ஙனம் இருக்க, கவிகள் கொண்ட
கருத்துக்களோ முற்றிலும் சமூக
சமயச் சீர்திருத்தக் கருத்துக்களேயாகும்.
சிறப்பாக மூட நம்பிக்கைகளை அகற்றும்
தன்மையில், மிகமிகப் பாமர மக்களுக்கும்
பசுமரத்தில் ஆணி அறைந்தது போல்
விளங்கும்படியும் பதியும்படியும்
பாடப்பட்டிருப்பதுடன், கவி நயமோ
புலவர்களுக்கு ஒரு நல் விருந்தாகவும்
அமைந்துள்ள அரும் புத்தகமாகும்.
தோழர் பாரதிதாசன் அவர்கள்
தமிழ்நாட்டிற்குப் புதியவரல்ல.
அவர் சென்ற பத்து ஆண்டுகளாகச்
சுயமரியாதை இயக்கத்தில் தீவிரமாய்
ஈடுபட்டு வருகின்றார்.
மனித சமுதாயத்தின் ஒற்றுமைக்கும்
முன்னேற்றத்திற்கும் சந்தோஷ வாழ்க்கைக்கும் இன்றியமையாத புரட்சியான பல
சீர்திருத்தங்களை ஆதரிப்பது மட்டுமின்றி,
அவைகளை ஜன சமூகத்தில் பலவழிகளிலும்
பரப்ப வேண்டுமென்ற ஆசையைக் கொண்டவர்.
சிறப்பாகவும், சுருக்கமாகவும் கூற
வேண்டுமானால் பாரதிதாசன் அவர்கள்
"சுயமரியாதை இயக்கத்தின் ஒப்பற்ற கவி"
என்றுதான் கூற வேண்டும்.
இந்த ஒரு காரணத்தினாலேயே, அவர்
இன்று தமிழ் நாட்டின் சிறந்த கவியாய்
இருந்தும், அவருடைய புகழ் போதுமான
வரையில் பரவாமலிருக்கிறது.
ஆனால் அவர் மட்டும் வெறும் புகழை
விரும்புவாரானால், காலத்திற்கும் பாமர
மக்கள் உணர்ச்சிக்கும் ஏற்றவாறு தம்
கருத்துக்களை மாற்றிக் கொண்டு மிகச்
சிறந்த கவி என்ற பெயரை எளிதில்
பெற்று விடலாம்.
ஆனால், உண்மை, நியாயம், அறிவு
முதலியவற்றைச் சிறிதும் விட்டுக்
கொடுக்க இசையாத இயற்கையான
ஒரு பிடிவாதமுடையவராதலால்
அவர் புகழை எதிர்பாராமல், தம்
கொள்கைகளில் விடாப்பிடியாய்
இருந்து வருகிறார்.


இக்குணத்தை நான் அவரிடம் பல
தடவைகளில் கண்டிருக்கிறேன்.
இத்தகைய ஒருவரால் எழுதப்பட்ட
இப்புத்தகத்தை உண்மைத் தமிழ்
மக்கள் ஒவ்வொருவரும் சிறப்பாகச்
சமூகப் புரட்சிக் கருத்துடையவர்களும்,
சமூகச் சீர்திருத்தத் தொண்டு
செய்பவர்களும் வாங்கி அனுபவித்து
அதன் கருத்துக்களை மக்களிடையில்
பரப்ப வேண்டியது மிக்க அவசியமாகும்.
இப்பாட்டுக்களைப் பாடிய தோழர்
பாரதிதாசன் அவர்களுக்கும் இவைகளைத்
திரட்டி வெளியாக்கிய தோழர் குஞ்சிதம்
குருசாமி அவர்களுக்கும் சீர்திருத்த உலகம் கடப்பாடுடையதாகும்.
-தந்தை பெரியார்
1.1.1938
**********************

<>பாச்சுவை பாரதிதாசன் வாழ்க<>


திருச்சியில் ஒரு மணி விழா நடைபெற்று வருகிறது.

அது தமிழ் விழா. தமிழ்நாட்டு விழா. தமிழ்ப் பாட்டு விழா.

அவ்விழாவை, இயல் வாழ்த்துகிறது; இசை வாழ்த்துகிறது;

நாடகம் வாழ்த்துகிறது. மணி விழாவுடையார் யார்?


புதுவைத் தோன்றல் சுப்புரத்தினம் - பாரதிதாசன்; அவர் வாழ்க!


கடவுள் பாட்டு, கருணை பாட்டு, நிலை பாட்டு,

வெண் வீதி பாட்டு, ஞாயிறு பாட்டு, திங்கள் பாட்டு,

நானிலம் பாட்டு, எல்லாம் பாட்டு - பாட்டே!


எல்லாவற்றையும் பாட்டாக நோக்கும் நெஞ்சில் பாட்டு

முகிழ்க்கும். அதனை எழுத்தோவியமாக அமைக்கும் பேறு

பலர்க்கு வாய்ப்பதில்லை.


தோழர் பாரதிதாசனுக்கு அப்பேறு எளிதில் வாய்த்தது.

இது கருவிலுற்ற திருவேயாகும்.தோழருடன் சிறிது நேரம்

பேசினும் அவர்தம் குழந்தை மனம் புலனாகும்.

குழந்தை மனம் பாட்டுப் புலம் என்பதை விளக்க வேண்டுவதில்லை.


புதுவைத் தமிழ் வகுப்பு கனகசுப்புவினிடத்திருந்து பொங்கி

வழிந்த பாமணிகள் பலப்பல. அவற்றுள், கருத்து வேற்றுமை

உண்டு. வேற்றுமை என் நெஞ்சைக் கவர்வதில்லை. பாட்டே

என் நெஞ்சசைக் கவரும். இது சுப்புவின் பாட்டுத் திறம் என்று

கூறாது வேறென்ன கூறுவது.


பொதுவைப் பொழில் - புதுமை மலர் - தமிழ்த்தேன் - பாச்சுவை -

பாரதிதாசன் வாழ்க! வாழ்க! வாழ்க பல்லாண்டு!

தமிழ்த்தென்றல் திரு வி.க.

".....இக்காலத்திற் பல துறைகளிலுஞ் சீர்திருத்தம் வேண்டி

நிற்கும், நம் தமிழ் மக்கட்குப் புது முறையிற் பாடப்பட்டிருக்கும்

பாரதிதாசனின் பாட்டுகள் கிளர்ச்சியினையும் மகிழ்ச்சியினையும்

பயந்து, சீர்திருத்தங்கள் பலவற்றிற்கு வழி காட்டும்.


-மறைமலையடிகள்

No comments: