<>பாவேந்தர் நவின்ற ஈழத்துக் கொள்கைகள்<>
Thu, Apr 24, 2008 at 7:17 AM
பாவேந்தரை நினைவுகூர்வது தமிழ்நாட்டுத்
தமிழரிடையே கூடச் சிறிது சிறிதாய்க் குறைந்து
வருங் காலத்தில், ஈழத் தமிழர் (ஒருசிலரைத் தவிரப்)
பெரும்பாலோரிடம் பாவேந்தர் தாக்கம் இல்லாது
போவது வியப்பொன்றும் இல்லை.
அவர்கள் பாரதி பற்றியாவது ஒருசில
அறிந்திருக்கிறார்கள்; ஆனால் பாரதிதாசன்
பற்றிய சிந்தனை அவரிடம் குறைந்தே இருக்கிறது.
பாவேந்தர் ஏதோ தமிழ்நாட்டிற்கு மட்டுமே
சொந்தமானவர் என்று எண்ணும் போக்கு,
புலம்பெயர்ந்தவரிடம் பெரிதும் இருக்கிறது.
தமிழின மறுமலர்ச்சிக்கு பாரதிதாசன் என்றும்
அடிப்படையானவர். அவர் கருத்துக்கள் ஆழ்ந்து
எண்ணிப் பார்க்க வேண்டியவை. தெளிவான,
சிந்தனை மிகுந்த, ஈழம் பற்றிய, அவரின்
அரிய பாடல் இலங்கைத் 'தினகரன்'
சிறப்பு மலரில் 11/7/1959 இல் வெளிவந்தது
எத்தனை பேருக்குத் தெரியும்?
இந்தப் பாடல் பாரதி தாசன் குயிற் சுவடி 10ல்,
(அக்டோ பர் 1964) பக்கம் 10 இல் தொகுக்கப்
பட்டிருக்கிறது.
நான் இதே பாடலைப் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின்
பாரதிதாசன் உயராய்வு மையம் வெளியிட்ட
"பாவேந்தர் பாரதிதாசனின் பழம் புதுப்பாடல்கள்"
2005 ஆம் ஆண்டுப் பதிப்பு) கண்டேன்.
இனித் தங்கள் வாசிப்பிற்கு.
அன்புடன்,
அன்புடன்,
இராம.கி.
வெல்க தமிழ், வெல்க தமிழர்!
இலங்கைத் தமிழர் துலங்க எண்ணினால்
அவர்கள் ஒற்றுமை அடைய வேண்டும்;
வேற்றுமை விளைக்கும் ஆற்றல் எவற்றையும்
கான்றே உமிழ்தல் வேண்டும்; கழிவடைச் சாதி
சமயம் என்னும் எவற்றையும் மதித்தல் கூடாது,
மறப்பது நன்று; தமிழர் நலத்தைத் தாக்கும்
கட்சிகள் எவற்றினும் எவரும் சேர்தல் சரியன்று;
தமிழர் அனைவரும் கூடித் தக்கதோர் கொள்கையை
வகுத்துக் கொள்ள வேண்டும்; தாய்மொழி யான
தமிழ்மொழி வாழ்ந்தால் தமிழர் வாழ்வர்;
தமிழ்மொழி வீழ்ந்தால் தமிழர் வீழ்வர்;
தமிழ்தமி ழர்க்குயிர்; தமிழன் னைக்கொரு
தாழ்வு நேர விடுதலின் உயிரை விடுதல்
தக்கது; சிங்களர்க் குள்ள இலங்கையின்
உரிமை செந்தமி ழர்க்கும் உண்டு! திருமிகு
சட்ட மன்றிலும் பைந்தமி ழர்க்கு நூற்றுக்
கைம்பது விழுக்காடு நோக்கிப் படிமை
ஒதுக்கப் படுதல் வேண்டும்! செந்தமிழ்
மக்கள் சிறுபான்மை யோரெனச் சிங்களர்
பெரும்பான்மை யோரெனச் செப்பித் தமிழர்
உரிமையைத் தலைக விழ்க்க எண்ணும்
எண்ணம் இழைக்கும் தீமைகள் எவற்றையும்
தமிழர் எதிர்க்க வேண்டும்;
மானங் காப்பதில் தமிழ மக்கள் சாதல்
நேரினும் தாழக் கூடாது; இவைகள் இலங்கைத்
தமிழர் கொள்கைகள்! யாவர் இவற்றை
எதிர்ப்பினும் விடற்க! வெல்க இலங்கைத் தமிழர்!
வெல்க தமிழே! மேவுக புகழே!
*********************************
மதங்கள், மொழிகள் கீழே வரும்
பாட்டு 1962 இந்திய-சீனப் போரின் போது,
'கல்வி, மதங்கள், மொழிகள்' பற்றிய
பார்வையாகப் பாவேந்தர் பாடியது.
இந்திய இறையாண்மையை நிலைக்க
வைப்பதில், இன்றைக்கும் கூட இந்தக்
கருத்துக்கள் இன்றியமையாதவை.
"இந்தியா ஒரு பல்தேசிய நாடு"
என்ற கொள்கையைத் தெளிவாய்
உணர்த்தும் தன் பாடலின் ஊடே,
"ஆங்கிலத் தாக்கம் இனியும் இருக்கக் கூடாது"
என்பதையும் பாவேந்தர் தெளிவுற உரைக்கிறார்.
"உள்ளதும் போச்சுரா, தொள்ளைக் காதா" என்றபடி,
அறுபதுகளில் நாம் பெற்ற மொழியுணர்வை
முழுதாகத் தொலைத்து, தவறான வழியில்
கழகங்கள் பயணம் செய்ததால், மாநிலம்
எங்கும் மடிக்குழைக் கல்வி பெருகி,
ஆங்கிலத் தாக்கம் கூடி, தமிங்கிலம்
பரவி, தமிழ் மொழி, பண்பாடு போன்றவை
குலையும் இந்த நாளில், குறிப்பாகப்
பாவேந்தர் நினைவேந்தல் வாரத்தில்,
இந்தப் பாவை மீண்டும் படித்து, பாவேந்தர்
கருத்துக்களை ஓர்வது நல்லது.
அன்புடன்,
இராம.கி.
நாட்டியல் நாட்டுவோம்
("பாரதிதாசன் பாடல்கள்" என்று முனைவர்
தொ.பரமசிவன் தொகுத்த நியூ செஞ்சுரி
புக் ஹவுஸ் 1993 பதிப்பில் 490-494 ஆம்
பக்கங்களில் இருக்கும் பாட்டு.)
"தென்பால் குமரி வடபால் இமயம்
கிழக்கிலும் மேற்கிலும் கடலாய்க்
கிடந்த பெருநி லத்தின் பெயரென்ன, அத்தான்?"
"நாவலந் தீவென நவிலுவார், கண்ணே!
தீவின் நடுவில் நாவல் மரங்கள் இருந்ததால்
அப்பெயர் இட்டனர் முன்னோர்; செவ்விதழ்
மாணிக்கம் சிந்தும் செல்வியே!
எவ்வினத் தார்க்கும் இப்பெயர் இனிக்கும்;
நாவல் நறுங்கனி யாருக்குக் கசக்கும்?
கல்வி: பழையநம் தீவில் மொழி,இனம் பலஉள;
மொழியி னின்று கல்வி முளைத்தது;
கல்விஇந் நாட்டில் கணக்கா யர்களைக்
கலைஞரைக் கவிஞரைத் தலைவரைப்
புலவரை விஞ்ஞா னிகளை விளைத்தது
ஆயினும், கற்றவர், கல்லா ரிடத்தும்
கல்வியைப் பரப்ப முயல வில்லை;
பாழிருள் விட்டு மீண்டவர் பிறரை மீட்கிலர்;
'கற்ற வர்சிலர் கல்லா தவர்பலர் என்னும்
இழிவு நாட்டில் இருக்கலாம்' என்பது கற்றவர்
எண்ணம் போலும்! எல்லா ரும்இந்த நாட்டில்
கற்றவர் எனும்நிலை இயற்றுதல் கற்றவர்
பொறுப்பே!" "என்ன அத்தான், நீங்கள்
இப்படிக் கற்றா ரையெல்லாம் கடிந்துகொள் கின்றீர்?"
"கற்றா ரைத் திட்ட வில்லை, கல்வி
அற்றார்க்கு இரக்கம் காட்டினேன், அன்பே!
கல்வி இருட்டிற்குக் கலங்கரை விளக்கு;
யாவர்க்கும் வாக்குரிமை இருக்குமிந்
நாட்டில் யாவர்க்குங் கல்வி இருக்க வேண்டும்;
'கண்ணிலார் எண்ணிலார்' என்பது கண்டும்
கண்ணுளார் கண்ணிலார் போல இருப்பதா?
கல்லா வறியர்க்குக் கைப்பொருள் கல்வியே!
இல்லை என்பது கல்வியில் லாமையே!
உடையவர் என்பவர் கல்வி உடையரே!
நாட்டின் மக்கள் நாட்டின் உறுப்பினர்;
உறுப்பினர் நிறுவனம் உடையவர் ஆவார்;
சிலர்ப டித்தவர், பலர்ப டியாதவர், என்ற
வேற்றுமை ஏன்வர வேண்டும்?
ஆட்சி வேலை அதிகம் இருக்கையில்,
'நாட்டிற் கட்டாயக் கல்வி நாளைக்கு ஆகட்டும்'
என்பவர் 'மக்கள் இன்று சாகட்டும்' என்று சாற்றுகின் றாரே!
எந்நாளு மேநான் எண்ணுவது இதுதான்; 'இந்த நாட்டில் யாவரும் படித்தவர் என்னும் நன்னிலை ஏற்படுவ தெந்நாள்?' " மதங்கள்: "நாவலந் தீவில் மதங்கள் நனிபல! கடவுளே வந்து மதம்பல கழறினார்; கடவுளின் தூதரும் கழறினார் மதங்கள்; கடவுளிற் கொஞ்சம், மனிதரிற் கொஞ்சம், கலந்த ஒருவரும் ஒருமதம் கழறினார்; கடவுளை நேரிற் கண்டவர் சொன்னார்; கேள்விப் பட்டவ ரும்கி ளத்தினார்; ஒருவர் "கடவுள் ஒருவர்" என்பார்; ஒருவர் "கடவுள் மூவர்" என்பார்; ஒருவர் "கடவுள் இல்லை"யென் றுரைப்பார்; நான்பெற்ற பேறு யார்பெற் றார்கள்? ஒருமதம் தோன்றி அதன்கிளை ஒன்பதாய்த் திருவருள் புரிந்த பெரியோ ரும்பலர்; மதங்களைப் பலவாய் வகுக்க, அவற்றில் விதம்பல சேர்த்த வித்தக ரும்பலர்; நாவலந் தீவில் மதங்கள் அனைத்தும் இருக்கலாம் - இன்னும் பெருக்கலாம் - எனினும், மதங்கள் வேறு, மக்கள் வேறு, மதங்கள் மக்களின் மாற்றுச் சட்டைகள்; இந்நில மக்கள் அவ்வெழிற் சட்டையின் உட்புறத் துள்ள மனிதரைக் காண்க! அந்த மனிதர் இந்தப் பெருநிலம் ஈன்ற பிள்ளைகள் என்னும் எண்ணம் அறிந்து பயன்நிலை உணர்ந்தால் ஒற்றுமை நிலைபெறும்; கலகம் அறவே நிற்கும்; பன்மதம் சேர்ந்த பல்கோடி மக்களும் 'நாங்கள் ஒன்றுபட்டோ ம்' என்று நவின்றால் மதங்களின் தலைவர் விரைந்து வந்து பிரிந்தி ருங்கள் என்றா பிதற்றுவர்? அவர்கள் அருளுளம் கொண்டவர் அல்லரோ? நாட்டியல் என்னும் நல்ல தங்கத்தேர் நன்னிலை நண்ண வேண்டாமா,சொல்? எல்லாரும் இந்நாட்டு மக்கள் என்றுணர்ந்தால் செல்அரும் நிலைக்குச் செல்லல் இலேசு" மொழிகள்: "பல இனம் பலமொழி பற்றி ஒருசில:- பழம்பெரு நிலத்தில் பலமொழி பல இனம் இருப்பதால், இஃதொரு பல்கலைக் கழகம்! ஆனால், தேனாய்ப் பேசும் திருவே, ஓரினத் துக்குள்ள மொழியை பலஇனத் துள்ளும் பரப்ப முயல்வதால் நாட்டில் ஒற்றுமை நண்ணும் என்ற கோட்பாடு சரியென்று கொள்வதற் கில்லை. அவ்வவ் வினத்தின் அவ்வம் மொழிகளைச் செம்மை செய்து செழுமை யாக்கி இனத்து மக்கள் எவர்க்கும் பரப்பும் ஒன்றினால் நாட்டில் ஒற்றுமை ஏற்படும் என்பதென் எண்ணம், கன்னற் சாறே! இனத்தைச் செய்தது மொழிதான், இனத்தின் மனத்தைச் செய்தது மொழிதான், மனத்தை மொழிப்பற் றினின்று பிரிப்பது முயற்கொம்பு 'அன்னை மொழியையும் படி, அதனொடு நான் சொன்ன மொழியையும் படி' எனும் சொற்கள் கசக்குமே அலாது மக்கட்கு இனிக்குமோ? ஆங்கிலன் தனக்குள அடிமையை நோக்கி 'ஆங்கிலம் படித்தால் அலுவல் கொடுப்பேன்' என்றான், நாட்டின் இலக்குமண சாமிகள்* தமிழ்மறந் துஆங்கிலம் சார்ந்து தமிழைக் காட்டிக் கொடுக்கவும் தலைப்பட் டார்கள்; இந்த நிலத்தில் அடிமை இல்லை, ஆதலால் துரைகளும் இல்லை அல்லவா? கைக்குறிக் காரர் கணக்கிலர் வாழும் இந்த நிலையில் அயல்மொழி ஏற்றல் எவ்வாறு இயலும்? அமைதியென் னாகும்? நானிங்கு நவின்ற திருத்தம் வைத்துப் பாரடி நாவலந் தீவின் பரப்பை நீ! பிரிந்த பகுதி பிணைந்தது பாரடி! பிரிய நினைத்தவர் பிழையுணர் கின்றனர் பெருநிலத் தில்ஒரே கொடிப றந்தது! நாவலந் தீவினர் எல்லாரும் நல்லவர் எல்லாரும் வீரர் எல்லாரும் கவிஞர் இமையச் சாரலில் ஒருவன் இருமினான்; குமரி வாழ்வான் மருந்துகொண் டோ டினான்; 'ஒருவர்க்கு வந்தது, அனைவர்க்கும்' என்ற மனப்பாங்கு வளர்ந்தது வேண்டிய மட்டும்! இமயம் மீட்கப் பட்டதி தோ,பார் சீனன் செந்நீர் கண்ணீ ராக எங்கோ ஓட்டம் பிடிக்கின் றானடி! விளைச்சற் குவியல் விண்ணைமுட் டியது தொழில்நலம் கண்டோ ம் தேவை முழுமை எய்திற்று, வாழ்க! அழகிய தாய்நிலம் அன்பில் துவைந்ததே!" ------------------------------------ * சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராய் இருந்த ஆ.இலட்சுமணசாமி முதலியார் ஆங்கிலப் பயிற்று மொழியே வேண்டும் என்றவர். ****************************** <>இருவேறு விடுதலை ஆசைகள்<> Wed, Apr 23, 2008 at 3:40 AM கீழே வரும் இரு பாட்டுக்களும் தந்தை தன் மகற்குக் கூறியதாய் வரும் சந்தப் பாட்டுக்கள். ஒன்று திருத்தணிகை முருகன் மீது அருணகிரியார் பாடிய 258 ஆம் திருப்புகழ். "மகனே! பெருணவத்தின் பொருளை எனக்குச் சொல்" என்ற சிவன் கூற்றை னைவுறுத்தி, பிறப்பிலிருந்து விடுபடும் தன் ஆசையைச் சொல்லி "உன்னைத் தொழுகாது இருப்பேனோ" என்று அருணகிரியார் கேள்விகளாய்க் கொட்டுவார். இது இறைப்பத்தியின் வழி எழும் விடுதலை ஆசை! தனதன தான தனதன தான தனதன தான தன தானா எனக்கென யாவும் படைத்திட நாளும் இளைப்பொடு காலந் தனிலாயோ? எடுத்திடு காயந் தனைக்கொடு மாயும் இலச்சையி லாதென் பவமாற! உனைப்பல நாளும் திருப்புக ழாலும் உரைத்திடு வார்தங்(கு) உளிமேவி, உணர்த்திய போதந் தனைப்பிரி யாது(ஒ)ண் பொலச்சர ணானுந் தொழுவேனோ? வினைத்திற மோடு(அ)ன் று(எ)திர்த்திடும் வீரன் விழக்கொடு வேள்கொன் றவன்"நீயே விளப்பென மேல்"என் றிடக்கய னாரும் விருப்புற வேதம் புகல்வோனே! சினத்தொடு சூரன் தனைக்கொடு வேலின் சிரத்தினை மாறும் முருகோனே! தினைப்புனம் மேவும் குறக்கொடி யோடுந் திருத்தணி மேவும் பெருமாளே! இன்னொரு சந்தப்பாட்டும் விடுதலை ஆசையையைத் தான் உணர்த்துகிறது. ஆனால் தமிழர் தரணியில் உயர்ந்து வாழுதற்கான விடுதலை ஆசை. இப்படி ஒரு பாடலைப் பாவேந்தர் மட்டுமே பாட முடியும். னித்தமிழ் வண்ணம் என்றும் அவர் கவிதைகளில் ("பாரதிதாசன் பாடல்கள்" என்று முனைவர் தொ.பரமசிவன் தொகுத்த நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 1993 பதிப்பில் 489-490 ஆம் பக்கங்களில் இருக்கும்) இந்தப் பாடல் குறிப்பிடப் படுகிறது. "எளியவர்க்கு உதவியாய் இருப்பாயோ? பிறர்நலம் நாடுகிறாய் என்று கேட்டு நான் மகிழேனோ? எங்கும் தமிழ் என்றாக்க உழையாயோ? தமிழ்நாடு செறிந்து விளங்குகிறது என்று காட்ட என்னை அழையாயோ? 'தமிழ் நம் உயிர்' என்று எல்லோரும் உணர வழி செய்யாயோ? தமிழ்நாடு விடுதலை பெற ஆசை பெருகாதோ?" என்ற சிறிய வினாக்கள்; எளிய கருத்துக்கள். தமிழிசை, தமிழிசை என்று பலவிடத்தும் தாகம் கொள்கிறோம்; "பாட்டெங்கே இருக்கிறது?" என்று றுமொழி எழுகிறது. தமிழிசைப் பாட்டுக்கள், வண்ணமாய்ச் சந்தமாய், வெள்ளமாய்க் கிடக்கிறது, அது பத்திப் பாட்டாக மட்டுமே இருக்க வேண்டுமா, என்ன? பாவேந்தர் பாட்டாக இருக்கவொண்ணாதோ? என்ன சொல்கிறீர்கள்? யாராவது இந்தப் பாட்டை மெட்டமைத்துப் பாடுவீர்களா?
அன்புடன்,
இராம.கி.
---------------------------
<>விடுதலை ஆசை<>
(தனித்தமிழ் வண்ணம்)
தனதன தான தனதன தான
தனதன தான தன தானா
கருவிழி ஓடி உலகொடு பேசி
எனதிடம் மீளும் அழகோனே
கழைநிகர் காதல் உழவினில்
ஆன கதிர்மணி யே,என் இளையோய்
நீ பெரியவ னாகி எளியவர் வாழ்வு
பெருகிடு மாறு புரியாயோ?
பிறர்நலம் நாடி ஒழுகிணை யாக
இருசெவி வீழ மகிழேனோ?
தெரிவன யாவும் உயர்தமி ழாக
வருவது கோரி உழையாயோ?
செறிதமிழ் நாடு திகழ்வது பாரீர்
எனஎனை நீயும் அழையாயோ?
ஒருதமி ழேநம் உயிரென யாரும்
உணவுறு மாறு புரியாயோ?
உயர்தமிழ் நாடு விடுதலை
வாழ்வு பெறஉன தாசை பெருகாதோ?
அன்புடன்,
இராம.கி.
---------------------------
<>விடுதலை ஆசை<>
(தனித்தமிழ் வண்ணம்)
தனதன தான தனதன தான
தனதன தான தன தானா
கருவிழி ஓடி உலகொடு பேசி
எனதிடம் மீளும் அழகோனே
கழைநிகர் காதல் உழவினில்
ஆன கதிர்மணி யே,என் இளையோய்
நீ பெரியவ னாகி எளியவர் வாழ்வு
பெருகிடு மாறு புரியாயோ?
பிறர்நலம் நாடி ஒழுகிணை யாக
இருசெவி வீழ மகிழேனோ?
தெரிவன யாவும் உயர்தமி ழாக
வருவது கோரி உழையாயோ?
செறிதமிழ் நாடு திகழ்வது பாரீர்
எனஎனை நீயும் அழையாயோ?
ஒருதமி ழேநம் உயிரென யாரும்
உணவுறு மாறு புரியாயோ?
உயர்தமிழ் நாடு விடுதலை
வாழ்வு பெறஉன தாசை பெருகாதோ?
அய்யா இராமகியின் அன்பு வேண்டுகோளைச்
சொன்னமாத்திரத்தில் அவர் ஆசையைநிறைவேற்ற
உதவிடுமாறு என்னருமைச்சகோதரர் "விஷி" என்ற
அழகி விசுவநாதன் உடனே தன் கணீர் குரலில் பாடி எனைமெய் சிலிர்க்க வைத்தார். இதனை வலைப்பதிவில் இடுவது என்று வரும்போது, அன்பு வேண்டுகோள் சகோதரர் இலங்கை எம்.ரிஷான் ஷெரீப் உதவ,
இதோ உங்கள் காதில்இன்பத் தேன் பாயுது இப்போது....
சுட்டுங்கள் இந்தச் சுட்டியை...ஆனந்தமாக அனுபவியுங்கள்
பாடலை...!
No comments:
Post a Comment