Thursday, April 17, 2008

பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் உலக பாரதிதாசன் விழா-2008


தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!

அன்பினிய நண்பர்களே!
வணக்கம்.
தமிழ் உலக விழா!


தமிழ் உலகம் இணைய மேடையில் ஓர் இணையிலா விழா!

தமிழ் உலகம் எடுக்கும் விழா,

பாரதியின் தாசனான பாரதிதாசனுக்கு விழா!

பாவேந்தருக்கு விழாஎடுப்பதில் பேரானந்தப் பெருவெள்ளம்
பொங்கிவழிகிறது!

பாவேந்தரின் நினைவு நாளான ஏப்ரல் 21 துவங்கி
அவர்தம் பிறந்த நாளான ஏப்ரல் 29வரை தமிழ்
உலகத்தில் நடைபெற இருக்கிறது.

இந்த மகிழ்ச்சியான சேதியினை பாரதிதாசன்

வைய விரி அவையின்

சார்பாக அறிவித்துச் சந்திப்பதில் மகிழ்வெய்துகிறேன்.

"தூங்கும் புலியை பறைகொண்டெழுப்பினோம்
தூய தமிழரைத் தமிழ் கொண்டெழுப்பினோம்"
என்ற பாவேந்தரின் வைரவரிகளுக்கு ஒப்பாக‌
பாரதிதாசன் வைய விரி அவையின் பாரதிதாசன் விழா
ஒவ்வொருவருடமும் தமிழையும் தமிழரையும்
எழுச்சிகொள்ளச் செய்திருக்கிறது.

பாரதிதாசனின் விழாக்களில் கருத்தரங்கம் இருக்கும்
கட்டுரைகளும், கருத்துக்களும் பல்வேறு தலைப்புகளில்
வந்து குவிவதைப் பார்த்துள்ளோம்.
இந்த ஆண்டு கவிதைகள், கட்டுரைகள், பாவேந்தர் குறித்த‌
மலரும் நினைவுகள், பங்கேற்போர் பாவேந்தரை ஆய்வு செய்து
ஆய்வுக் கட்டுரை வடிக்கலாம்.
கடந்த ஆண்டுகளில் தமிழ் உலகில் நடைபெற்ற விழாச்சேதிகளும்
தொடர்ந்து வரும்.

பாவேந்தருக்கு நாமெடுக்கும் இணைய விழா, தமிழ் உலக விழாச்
சிறக்க தமிழ் உலக உறுப்பினர்கள் மட்டுமல்ல பாவேந்தர் பற்றாளர்களை
அழைத்துப் பங்கேற்கவைப்பதுவும் நம் ஒவ்வொருவரின் பொறுப்புமாகும்.
அவன் எழுதாத பொருளில்லை, சொல்லாத கருதில்லை.

இயற்கையின் எழில், சாதி மதங்களின் கொடுமை, சமுதாயச்சீரழிவு,
பெண்ணினுரிமை, தொழிலார் நலிவு,என பலப் பல பாடியிருக்கிறான்
ஆனால்,
அவன் உள்ளத்தில்,
உடலில்,
உயிரில் இருந்தது தமிழ்,
தமிழ்தான் அவன் மூச்சி,
தமிழர் அவனின் வாழ்வு.
அவன் பாடல்களில் இனிமை, எளிமை, எழிலுண்டு.
பழைய இலக்கிய தமிழுடன், இன்றைய பேச்சு வழக்குமுண்டு.

வற்றாத நீருற்று, பொங்கிவரும் புனல், கட்டவிழ்ந்த காட்டாறு
இவைதான் அவன் கவிதைகள்.
பாரதிதாசன் வாரமென்றாலும் இவ்விழா ஒன்பது நாட்கள் நடக்கும்.
கவிஞர்களும் அறிஞர்களும், அன்பு நெஞ்சங்களும்,
தமிழ் அன்பர்களும் நிறைந்த தமிழுலக
மடற்குழுவில் அதிகம் பங்குபெற்று முன்னெப்போதுமில்லாதவாறு
வெற்றிகாணச் செய்வது இதோ உங்கள் கரங்களில்!
இந்த விழாவில் ஒரு சில பேராசிரியர்கள்
பங்கேற்றுச் சிறப்புச் செய்யவிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்தவிழாவிற்கு தலைவர் யார்? வழி நடத்துபவர் யார்?
எல்லாமே நீங்கள்தான்!

விழாச் சிறக்க ஓவ்வொருவரும் ஆலோசனை நல்கி
வழிநடத்திச் செல்லவேண்டும் என்று
மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.
எட்டுத்திசைகளிலிருந்தும் கிளம்பட்டும் பார் புகழும் பாவேந்தனின் புகழ்!
இமையம் அடைந்த புகழ் வானோக்கி எழும்பட்டும்.
தேனருவிபோல் கவிதை மழைப் பொழியட்டும்!

கருத்துக் குவியல் ம(மா)லையாகட்டும்!

அறிவார்ந்த ஆய்வரங்கம் ஆரம்பம் ஆகட்டும்!

உங்கள்பங்கெடுப்பால் இவ்விழா சிறக்கட்டும்.

முரசு கொட்டட்டும், சங்கு முழங்கட்டும்
விண்ணொடும் உடுக்களொடும்
செம்பரிதி தன்னொடும் பிறந்த தமிழால் அவன்
தகுதி பெற்றதும்,அவனால் தமிழ், தமிழர் தகுதி
பெற்றதும் எடுத்தியம்ப வாரீர்! வாரீர்!! என்று
இருகரம்கூப்பி அழைக்கிறேன்.
ஆல்பர்ட்,
அ.கூ.நா.
பாரதிதாசன் வைய விரி அவை சார்பாக‌.
****************************************

பாவேந்தர் பாரதிதாசன் வாழ்க்கைக் குறிப்புகள்
( நன்றி: புரட்சிப் பாவலரின் "சிரிக்கும் சிந்தனைகள்" நூலிலிருந்து)

1891 - ஏப்ரல் 29, அறிவன் (புதன்) இரவு பத்தேகால் மணிக்குப்
புதுவையில் சுப்புரத்தினம் பிறந்தார். தந்தை கனகசபை.
தாய் இலக்குமி.

உடன்பிறந்தோர் தமையன் சுப்புராயன். தமக்கை சிவகாமசுந்தரி.
தங்கை இராசாம்பாள்.1895 -ஆசிரியர் திருப்புளிச்சாமி
ஐயாவிடம் தொடக்கக் கல்வி. இளம் அகவையிலேயே
பாடல் புனையும் ஆற்றல் பெற்றார். பாட்டிசைப்பதிலும்
நடிப்பதிலும் ஊரில் நற்பெயர் பெற்றார்.

பத்தாம் அகவையிலேயே சுப்புரத்தினத்தைப் பெற்றதால்
புகழ் பெற்றது புதுவை.1908 - புதுவை அருகில் உள்ள சாரம்
முதுபெரும் புலவர் (மகா வித்துவான்) பு.அ. பெரியசாமியிடமும்
பின்னர் பெரும் புலவர் பங்காரு பத்தரிடமும் தமிழ் இலக்கண
இலக்கியங்களையும் சித்தாந்த வேதாந்த பாடங்களையும்
கசடறக் கற்றார். மாநிலத்திலேயே முதல் மாணவராகச்
சிறப்புற்றார்.

புலவர் சுப்புரத்தினத்தை வேணு
"வல்லூறு" வீட்டுத் திருமணத்தில் பாரதியார் காணும்
பேறு பெற்றார். பாரதியாரின் தேர்வு எடையில் நின்றார்.
வென்றார். நட்பு முற்றியது.

பாரதியாரின் எளிய தமிழ், புலமை மிடுக்கேறிய
சுப்புரத்தினத்தைப் பற்றியது.

1909 - கல்வி அதிகாரியார் உதவியால் காரைக்கால்
சார்ந்த நிரவியில் ஆசிரியப் பணி ஏற்றல்.

1910 - வ.உ.சி.யின் நாட்டு விடுதலை ஆர்வத்தால்
கனிந்திருந்த புலவர் - பாரதியார், வ.வே.சு., பர்.வரதராசுலு,
அரவிந்தர் போன்றோர்க்குப் புகலிடம் அளித்தல்.

தம் பெற்றோர்க்குத் தெரியாமல் மேல் துண்டில் வடித்த
சோறு கொடுத்தல். ஓரோர் அமையங்களில் செலவுக்குப்
பணம் தருதல். காவலர்களின் வேட்டையிலிருந்து தப்ப
உதவல்.

பாரதியாரின் "இந்தியா" ஏட்டை மறைமுகமாகப்
பதிப்பித்துத் தருதல். ஆசு ஆட்சித் தலைவரைச்
(கலெக்டரைச்) சுட்ட துமுக்கி (துப்பாக்கி) பாவேந்தர்
அனுப்பியதே.

1916 - தந்தையார் (23.1.1916) இயற்கை எய்தல்.

1918 - பாரதியாருடன் நெருங்கிப் பழகிய பழக்கத்தால்
சாதி, மதம், கருதாத தெளிந்த உறுதியான கருத்துகளால்
ஈர்ப்புற்றுப் புலமைச் செருக்கும் மிடுக்கும் மிகுந்த நடையில்
எழுதும் தேசிய தெய்வப் பாடல்களைப் பழகு தமிழில் எழுதுதல்.

புதுவை, தமிழக ஏடுகளில் புதுவை கே.எசு.ஆர்.,
கண்டெழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன்,
கே.எசு. பாரதிதாசன் என்ற பெயர்களில் பாடல்,
கட்டுரை, கதை மடல்கள் எழுதுதல்.

10 ஆண்டுக்காலம் பாரதியாருக்கு உற்றுழி உதவியும்
உறு பொறுள் கொடுத்தும் தோழனாய் இருந்தார்.

1919 - திருபுவனையில் ஆசிரியராக இருக்கையில்,
பிரெஞ்சு அரசுக்கு எதிராகச் செயல்பட்டார் என்று
குற்றம் சாட்டி ஒன்றேகால் ஆண்டு சிறைபிடித்த
அரசு தவறுணர்ந்து விடுதலை செய்தது.
வேலை நீக்க வழக்கில் புலவர் வென்று மீண்டும்
பணியில் சேர்தல்.

1920 - இந்திய விடுதலை அறப்போராட்டத்தில்
பங்கேற்றல், புவனகிரி பெருமாத்தூர் பரதேசியார் மகள்
பழனி அம்மையை மணத்தல்.

தம் தோளில் கதர்த் துணியைச் சுமந்து
தெருத்தெருவாய் விற்றல்.

1921 - செப்டம்பர் 19 - தலைமகள் சரசுவதி
பிறப்பு (12.11.1921) பாரதியார் மறைவு.

1922 - கே.சு. பாரதிதாசன் என்ற புனைப்பெயரைத்
தொடர்ந்து பயன்படுத்தி, தேச சேவகன் "துய்ப்ளேச்சு",
புதுவை கலைமகள், தேசோபகாரி, தேச பக்தன்,
ஆனந்த போதினி, சுதேச மித்திரன் இதழ்களில்
தொடர்ந்து பாடல், கட்டுரை, கதைகள் எழுதுதல்.

1924 - சோவியத்து நாட்டு மாவீரர் இலெனின் இழப்பிற்குப்
பாடல்.

1926 - சிரி மயிலம் சுப்பிரமணியர் துதியமுது.
நூலில் சிந்தைக்குத் தந்தையாதல்.

1928, நவம்பர் 3 - கோபதி (மன்னர் மன்னன்) பிறப்பு.
தன்மான (சுயமரியாதை) இயக்கத்தில் பெரியார்
ஈ.வெ.இரா.வுடன் இணைதல். தாமும் தம் குடும்பமும்
பகுத்தறிவுக் கொள்கையை மேற்கொள்ளல். குடும்பத்
திருமணங்களில் தாலியைத் தவிர்த்தல்.

1929 - குடி அரசு, பகுத்தறிவு ஏடுகளில் பாடல், கட்டுரை,
கதை, கட்டுப்பாடு பற்றி இந்தியாவிலேயே முதன்முதல்
பாட்டெழுதிய முதல் பாவலர் என்ற சிறப்புச் பெறல்.

1930 - பாரதி புதுவை வருகைக்கு முன்னும் பின்னும்
பாடிய சிறுவர், சிறுமியர் தேசியப் பாடல், தொண்டர்
நடைப்பாட்டு, கதர் இராட்டினப் பாட்டு நூல் வடிவில்
வெளியிடப்பட்டன. தொடர்ந்து சஞ்சீவி பர்வதத்தின்
சாரல், தாழ்த்தப்பட்டோர் சமத்துவப்பாட்டு நூல்களை
ம.நோயேல் வெளியிடல். திசம்பர் 10இல் புதுவை
முரசு கிழமை ஏட்டின் ஆசிரியர் பொறுப்பேற்றல்.

1931 - புதுவை முரசு (5.1.31) ஏட்டில் செவ்வாய்
உலக யாத்திரை - கட்டுரை வரைதல். சுயமரியாதைச்
சுடர் என்ற 10 பாடல்களைக் கொண்ட நூலை
"கிண்டற்காரன்" என்ற பெயரில் வெளியிடல்.
(குத்தூசி குருசாமிக்கு இந்நூல் படைப்பு)
18.8.31 இரண்டாம் மகள் வசந்தா (வேனில்)
பிறப்பு. பள்ளி ஆண்டு விழாவில் சிந்தாமணி
என்ற முத்தமிழ் நாடகம் எழுதி இயக்குதல்..

1932 - "வாரிவயலார் வரலாறு" அல்லது
"கெடுவான் கேடு நினைப்பான்" புதினம் வெளியிடல்.
வெளியார் நாடகங்களுக்கும் தன்மான, பொதுவுடைமைக்
கூட்டங்களுக்கும் பாட்டெழுதித் தருதல்.

1933 - ம. சிங்காரவேலர் தலைமையில் சென்னை
ஒயிட்சு நினைவுக் கட்டிடத்தில் (31.2.1933)
நடந்த நாத்திகர் மாநாட்டில் கலந்து கொண்டு வருகைப்
பதிவேட்டில் நான் ஒரு நிலையான நாத்திகன் என்று எழுதி
கையெழுத்திடல்.

1933 - மூன்றாம் மகள் இரமணி பிறப்பு.

1934 - மாமல்லபுரத்திற்கு முழுநிலா இரவில் தோழர்
ப.சீவானந்தம், குருசாமி, குஞ்சிதம், நயினா சுப்பிரமணியம்,
மயிலை சீனி.வேங்கடசாமி, மாயூரம் நடராசன்,
சாமி சிதம்பரனார், எசு.வி. லிங்கம்,
நாரண துரைக்கண்ணனுடன் படகில் செல்லல்.

மாவலிபுரச் செலவு - பாடல் பிறந்தது.

9.9.1934இல் இரணியன் அல்லது இணையற்ற வீரன்
நாடகம் பெரியார் தலைமையில் நடைபெறல்.(
குருசாமி -இரணியன், திருவாசகமணி கே.எம்
பாலசுப்பிரமணியன் - பிரகலாதன்)

1935 -இந்தியாவின் முதல் பாட்டேடான, "சிரி"
சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம் தொடக்கம்.
இதற்கு உறுதுணையாக இருந்தவர் எசு.ஆர். சுப்பிரமணியம்.
(சர்வோதயத் தலைவர்)

1936 - பெங்களூரில் பதினான்கு நாள் தங்கி (1.4.1936)
தேசிங்கு ராசன் வரலாற்றை "அட்கின்சு" குழுமத்தார்க்கு
"இசு மாசுடர் வாய்சு" இசைத் தட்டுகளில் பதித்தல்.

1937 -இல் புரச்சிக்கவி -குறுப்பாவியம் வெளியிடல்.
பாலாமணி அல்லது பாக்தாத் திருடன் திரைப்படத்திற்குக்
கதை, உரையாடல், பாடல் எழுதுதல்.
இதில் நடித்தவர்கள் டி.கே.சண்முகம்-உடன்
பிறந்தோர் அனைவரும்.

1938 -"பாரதிதாசன் கவிதைகள்" முதல் தொகுதியைக் குத்தூசி
குருசாமி, குஞ்சிதம் குருசாமி வெளியிட்டனர். பொருளுதவி
செய்தவர் கடலூர் தி.கி. நாராயனசாமி. தமிழிலக்கியத்திலேயே
பெரும் புரட்சியை உண்டாக்கியதால், பெரியார்.

"தன்மான இயக்கத்தின் பெரும் பாவலர்" என்று பாராட்டினார்.
மருத்துவர் மாசிலாமணியார் நடத்திய தமிழரசு இதழில்
தொடர்ந்து எழுதுதல். "தமிழுக்கு அமுதென்று பேர்"
என்ற பாடலை அச்சுக் கோத்தவர் பின்னாளில் சிறப்புற்ற
எழுத்தாளர் "விந்தன்".

1939 -"கவி காளமேகம்" திரைப்படத்திற்குக் கதை,
உரையாடல், பாடல் எழுதுதல். இரணியன் அல்லது
இணையற்ற வீரன் நூல் வடிவில் வருதல்.

1941 -"எதிர்பாராத முத்தம்" பாவியம் காஞ்சி பொன்னப்பாவால்
வானம்பாடி நூற்பதிப்புக் கழகத்தில் வெளியிடல். இதற்கு
மேலட்டை ஓவியம் இராய் சவுத்ரி.

1942 - குடும்ப விளக்கு 1 வெளியிடல். இந்தியப் போராட்ட
எழுச்சியை மறைமுகமாக ஊக்குவித்தல். இரண்டாம்
உலகப் போரை -இட்லரை எதிர்த்தல். பல ஏடுகட்கும்
எழுதுதல்.

1943 - பாண்டியன் பரிசு-பாவியம் வெளியிடல்.

1944 - பொரியார் முன்னிலையில் தலைமகள்
சரசுவதி திருமணம். மணமகன் புலவர் கண்ணப்பர்.
"இன்ப இரவு" (புரட்சிக்கவி) முத்தமிழ் நிகழ்ச்சி
அரங்கேற்றம். இருண்ட வீடு, காதல் நினைவுகள்,
நல்ல நீர்ப்பு (நாடகம்) அழகின் சிரிப்பு ஆகிய நூல்கள்
ஒன்றன் பின் வெளியிடல்.

சதி சுலோசனா என்ற திரைப்படத்திற்குக் கதை,
உரையாடல், பாடல் எழுதுதல். குடும்ப விளக்கு 2
வெளியிடல். செட்டிநாடு முழுவதும் இலக்கியச்
சொற்பொழிவு நடத்திப் பகுத்தறிவு இயக்கத்தைக்
காலூன்றச் செய்தல். கலைவாணர் என்.எசு.கே.
வுக்காக "எதிர்பாராத முத்தம்" நாடகமாத் தீட்டித்
தருதல். "கற்கண்டு" பொறுமை கடலினும் பெரிது
இணைத்து எள்ளல் நூல் வெளியிடல்.

1945 - புதுவை 95, பெருமாள் கோயில் தெரு
வீட்டை வாங்குதல். தமிழியக்கம், (ஒரே இரவில்
எழுதியது) எது இசை நூல்கள் வெளியிடல்.

1946 - முல்லை இதழ் தொடங்கப்பட்டது. அமைதி,
ஊமை நாடகம் வெளியிடல். 29.7.1946 - பாவேந்தர்
"புரட்சிக் கவி" என்று போற்றப்பட்டு ரூ.25 ஆயிரம்
கொண்ட பொற்கிழியை, நாவலர் சோமசுந்தரம் பாரதியார்
தலைமையில் பொன்னாடை போர்த்தி அறிஞர்
அண்ணா திரட்டித் தந்தார்.
தமிழகப் பேரறிஞர்கள் அனைவரும் வாழ்த்திப் பேசினர்.

8.11.1946இல் முப்பத்தேழாண்டுத் தமிழாசிரியர் பணிக்குப்
பின் பள்ளியிலிருந்து ஓய்வு பெறுதல்.

1947 - புதுக்கோட்டையிலிருந்து "குயில்" 12 மாத
வெயியீடு. சவுமியன் நாடக நூல், பாரதிதாசன்
ஆத்திச்சூடி வெளியிடுதல். சென்னையில் குயில்
இதழ். ஆயிரம் தலை வாங்கி அபூர்வ சிந்தாமணி -
திரைப்படக் கதை, உரையாடல், பாட்டு தீட்டல்.
இசையமுது வெளியிடல். புதுவையிலிருந்து
"குயில்" ஆசிரியர் - வெளியிடுபவர் -
கவிஞர் பேசுகிறார்" சொற்பொழிவு நூல்.

1948 - காதலா? கடமையா? பாவியம் முல்லைக்காடு,
இந்தி எதிர்ப்புப் பாடல்கள், படித்த பெண்கள்
(உரை நாடகம்), கடற்மேற் குமிழிகள் பாவியம்.
குடும்ப விளக்கு 3, திராவிடர் திருப்பாடல், அகத்தியன்
விட்ட கரடி - நூல் வெளியிடல். குயில் மாத ஏட்டிற்குத்
தடை, நாளேடாக்குதல், கருஞ்சிறுத்தை உருவாதல்.

1949 - பாரதிதாசன் கவிதைகள், 2-ஆம் தொகுதி சேர
தாண்டவம், முத்தமிழ், நாடகம், தமிழச்சியின் கத்தி -
பாவியம், ஏற்றப் பாட்டு வெளியிடல்.1950 - குடும்ப
விளக்கு 4, குடும்ப விளக்கு 5 வெளியிடல்.

1951, செப்டம்பர் 15இல் வேனில் (வசந்தா தண்டபாணி)
திருமணம். அ. பொன்னம்பலனார் தலைமையில் நடந்தது.
அமிழ்து எது? கழைக் கூத்தியின் காதல் வெளியிடல்.
அறுபதாண்டு மணிவிழா திருச்சியில் நிகழ்வுறல்.

1952 - வளையாபதி - திரைப்படம், கதை, உரையாடல்,
பாட்டு, இசையமுது இரண்டாம் தொகுதி வெளியிடல்.

1954 - பொங்கல் வாழ்த்துக் குவியல், கவிஞர் பேசுகிறார் -
சொற்பொழிவு நூல் வெளிவரல். குளித்தலையில் ஆட்சி
மொழிக் குழுவிற்குத் தலைமை ஏற்றல்.

1954 - மூன்றாம் மகள் இரமணி சிவசுப்பிரமணியம் திருமணம்.
இராசாக் கண்ணனார் தலைமையில் நடந்தது.

1955 - புதுவைச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றியுற்று அவைத்
தலைமை ஏற்றல். சூன் 26இல் மன்னர் மன்னன் - மைசூர்
வீ.சாவித்திரி திருமணம். கோவை அ. ஐயாமுத்து தலைமை.
பாரதிதாசன் கவிதைகள் மூன்றாம் தொகுதி வெளியிடல்.

1956 - தேனருவி இசைப்பாடல்கள் வெளியிடல்.

1958 - தாயின் மேல் ஆணை, இளைஞர் இலக்கியம்
வெளியிடல். தமிழகப் புலவர் குழுவின் சிறப்புறுப்பினராதல்.
குயில் - கிழமை ஏடாக வெளிவருதல்.

1959 - பாரதிதாசன் நாடகங்கள், குறிஞ்சித் திட்டு பாவியம்
வெளியிடல். பிசிராந்தையர் - முத்தமிழ் நாடகம் தொடர்தல்.

1.11.1959 முதல் திருக்குறளுக்கு வள்ளுவர் உள்ளம் என்ற
உரை விளக்கம் எழுதுதல்.

1961 - சென்னைக்குக் குடி பெயர்தல். "பாண்டியன் பரிசு"
திரைப்படம் எடுக்க திட்டமிடல். செக் நாட்டு அறிஞர்
பேராசிரியர் கமில்சுவலபில் "செக்" மொழியில் பெயர்த்த
பாவேந்தரின் பாடல்களைக் கொண்ட நூலைப் பெறுதல்.
நடுவர் எசு. மகராசன் நட்புறவு.

1962 - சென்னையில் மீண்டும் குயில் கிழமை ஏடு
(15.4.1962). அனைத்துலகக் கவிஞர் மன்றத் தோற்றம்.
கண்ணகி புரட்சிக் காப்பியம், மணிமேகலை வெண்பா -
வெளியிடல். தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் இராசாசி
பொன்னாடை அணிவித்துக் கேடயம் வழங்கல்.

1963 - தோழர் ப.சீவானந்தம் மறைவு குறித்துப்
"புகழ் உடம்பிற்குப் புகழ் மாலை" பாடல் எழுதுதல்.
சீனப்படையெடுப்பை எதிர்த்து அனைத்திந்திய மக்களை
வீறுகொண்டெழுப் பாடல்கள் எழுதுதல்.
பன்மணித்திரள் நூல் வெளியீடு.

1972-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா வழக்கறிஞர்
வி.பி. இராமன் தலைமையில் நடைபெற்றது.
"பாரதியார் வரலாறு" திரைப்படம் எடுக்கத் திட்டமிட்டு
எழுதி முடித்தல். இராசிபுரத்தில் புலவர் அரங்கசாமி
கூட்டிய கவிஞர்கள் மாநாட்டில் தலைமை ஏற்றல்.

1964 - பாரதியார் வரலாற்றுத் திரைப்படத்திற்குத் தீவிர
முயற்சி. சென்னை, சென்னை பொது மருத்துவமனையில்
ஏப்ரல் 21இல் இயற்கை எய்தல். மறுநாள் புதுவைக் கடற்கரையில்
உடல் அடக்கம். வாழ்ந்த காலம் 72ஆண்டு 11 மாதம் 28 நாள்.

1965, ஏப்ரல் 21 - புதுவை கடற்கரை சார்ந்த பாப்பம்மா கோயில்
இடுகாட்டில் பாரதிதாசன் நினைவு மண்டபம் புதுவை நகராட்சி
யினரால் எழுப்பப்பட்டது.

1968 - உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது சென்னைக்
கடற்கரையில் பாவேந்தர் உருவம் நாட்டப் பெறல்.

1970, சனவரி - இரமணி மறைவு.

1971, ஏப்ரல் 29 - பாவேந்தரின் பிறந்த நாள் விழா புதுவை
அரசு விழாவாகக் கொண்டாடப் பெற்றது.

ஒவ்வோராண்டும் அரசு விழா நிகழ்கிறது. பாவேந்தர் வாழ்ந்த
பெருமாள் கோயில் தெரு, 95ஆம் எண் கொண்ட இல்லம்
அரசுடைமையாயிற்று. அங்கே புரட்சிப் பாவலர் நினைவு
நூலகம், காட்சிக் கூடம் நடந்து வருகிறது.

1972, ஏப்ரல் 29 - பாவேந்தரின் முழு உருவச் சிலை
புதுவை அரசினரால் திறந்து வைக்கப்பெற்றது.1979 -
கடற்மேற் குமிழிகள் - பாவியத்தின் பிரஞ்சு மொழியாக்கம்
வெளியிடப் பெறல்.

....................<>0<>.............................

No comments: