Saturday, April 26, 2008

பாரதிதாசன் வாரம்-இண்டி ராம்


<>புரட்சிக்கவிஞர் இன்றிருந்தாரானால்...

எப்படி நினைப்பார்?<>

புரட்சிக்கவிஞர் கூறிய புரட்சிகரமான கூற்றுகள் :-

1. தமிழ் மேல் பற்றுகொள், தமிழை வளரவை
2. தமிழனாக இருப்பதை நினைத்து பெருமைகொள்
3. தமிழ் இனத்தவர் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்
4. தமிழர்கள் தங்களது தொழிலில் வெற்றி காணவேண்டும்
5. உனது செயல் தமிழினத்திற்கு பெருமை சேர்க்கவேண்டும்
6. பெண்களுக்கு மதிப்பு கொடு
7. பெண்கள் விதவையானால் ஆண்கள் மாதிரி திரும்பி காதலித்து
மறுமணம் செய்துகொள்ள அனுமதி
8. ஆணும் பெண்ணும் தமது உணர்ச்சிகளை வெளிப்படையாகக் காண்பிப்பதில்
தவறில்லை.
9. நம்மிடமுள்ள வேறுபாடுகளைப் பெரிது படுத்தாமல் நம்முள் உள்ள
பொதுவான தமிழ் சமுதாய விழுமங்களை கருத்தில் கொண்டு நடந்துகொள்
10. மற்ற மனிதர்களை மனிதனுக்கு கொடுக்கவேண்டிய பணிவன்புடன் நேசி
ஆகியவற்றை தமது 90 நூல்களிலும் தமது சினிமா ஈடுபாடுகள் மூலமும்
வெளிப்படுத்தினார்.

நம்முடைய நண்பர்கள் பலர் அவைகளை மேற்கோள்காட்டியும் எழுதியுள்ளனர்
தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள தமிழகத்தில் இப்போது என்ன நடந்துவருகிறது
என்பதை சற்று சிந்தித்து பார்க்கலாமா?

1. ஏழை நகரச் சிறார்கள், கிராமக் குழந்தைகள் தவிர மற்ற எல்லா குழந்தைகளும்
ஆங்கில மெட் ரிகுலேஷன் பள்ளியில் தான் படிக்கின்றனர்
ஏன் சில ஆங்கில மெட் ரிகுலேஷன் பள்ளிகளில் வகுப்பறைகளுக்கு வெளியே
தமிழில் பேசக்கூடாது என்று ஸ்டிர்க்டாக ஆங்கிலப் பேச்சுப் பழக்கத்தை
அதிகரிக்கவைக்க முயற்சிக்கும் (இப்பள்ளி நிருவனத்தார் எல்லாம்
பார்திதாசனார் காலத்தில் பிறந்த தமிழர்கள்தான்) பள்ளிகளுக்கு தான் தற்கால
தமிழ்ப் பெற்றோர்கள் அனுப்ப விரும்புகின்றனர்
உண்மையா இல்லையா?
2. கால் செண்டரில் விரும்பி வேலை பார்க்கும் தமிழ் உழைப்பாளிகள்
தங்களது பெயரை மறந்துவிட்டு ஆங்கிலப்பெயரில் ஆங்கிலத்தில்
கலந்துரையாடல் செய்து பயிற்சி எடுக்கின்றனர்
இவர்களை எல்லாம் யாரும் பயமுறுத்தி செய்யச் சொன்னதில்லை
இவ்வாறு தொழிலில் போட்டிபோட்டுக்கொண்டு செயல்படுபவர் தமிழர்கள்தான்
3. தமிழகத்தில் 25 % மக்கள் தலித் பிரிவினர், 60% பின் தங்கிய சாதியினர்
15% முன்னேறிய சாதியினர் (அதில் 4% பிராமணர்கள்)
இந்த தமிழ் இனத்தவர்களிடம் ஒற்றுமை எவ்வாறு வளர்ந்து வருகிறது?
அதற்கு மக்கள் எவ்வாறு ஒத்துழைத்துவருகின்றனர்
4. அப்துல் கலாம், ரஹ்மான் போன்ற சில குறிப்பிட்டதமிழர்களைத்
தவிர தமிழர்கள் இந்தியா அளவிலோ அல்லது உலக அளவிலோ
எவ்வாறெல்லாம் சாதனை சாதித்துள்ளனர் என்று அறிந்தவர்கள்
எனக்குத் தெரிவித்தால் நான் அதற்கு நன்றி செலுத்துவேன்
5. பல காரணங்களால் திருமணமாகாத பெண்கள் எண்ணிக்கை என்ன
6. பெண் சிசுக்கொலை எந்த மாநிலத்தில் பெருமளவில் நடந்து வருகிறது
7. விதவை மறு திருமணம் தமிழகத்தில் எவ்வளவு அதிகரித்துள்ளது
அம்பானி, டாட்டா எல்லாம் தமது சாதனைகளால் தமது இனத்தவர்களுக்கு
பெருமை சேர்த்து வருகின்றனர்.

கேரளத்திற்கு சென்று வருபவர்கள் அங்குள்ளவர்கள் தங்களது
கிராமங்களையும் சுற்றுப்புறத்தையும் எவ்வளது சுத்தமாகவைத்துவருகின்றனர்
என்று வியப்பித்து எழுதுகின்றனர்
தமிழகத்தில் வசிக்கும் நண்பர்களுக்கு மற்ற மாநிலங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில்
நமது மாநிலத்தினரின் செயல்பாடுகள் எவ்விதங்களில்
மேலோங்கிதாக உள்ளதை குறிப்பிட்டுக்காட்ட கேட்டுக்கொள்கிறேன்
தற்காலத் தமிழரிடம்
தமிழ்ப் பற்று வளர்ந்து வருகிறாதா
தமிழினப் பற்று வளர்ந்துவருகிறதா
தமிழின ஒற்றுமை (நான்கு புதிய பிரிவினரிடம்) உயர்ந்துள்ளதா
தமிழகப் பெண்கள் மற்ற மாநிலப் பெண்களைவிட
அதிக சுதந்திரம் பெற்றுள்ளனரா
விதவை மறுமணம் சகலமாக நடக்கிறதா
தமிழகப் பெண்கள் தைரியமாகச் செயல் படுகின்றனரா
பாரதிதாசனார் எழுதியகாலத்திலிருந்து இப்போது
பெரிய மாற்றங்கள ஏதாவது நடந்துள்ளதா
பாரதிதாசனார் வாரத்தை தமிழகப் பெரும்புள்ளிகள் கொண்டாடி
அவரது புரட்சிகரமான எண்னங்களை செயல் படுத்த
மக்களை ஊக்குவிக்கிறார்களா?
தமது செயல்பாடுகளிலும் அவற்றை கடைபிடிக்கின்றனரா?
இதையெல்லாம் அறிய நான் ஆவலாக உள்ளேன்
சினிமா, அரசியல் வாதிகளைத்தவிர நாம் மற்ற
துறைகளில் சாதனைபுரியும் தமிழர்களை ஏன் போற்றுவதில்லை?
அவர்களை இனம் காட்ட நாம் ஏன் சிந்திப்பதில்லை?

இண்டி ராம்
*******************************************************************
நண்பர் இண்டிராம்,
உயர்ந்த கட்டுரை.
நீங்கள் கேட்டிருக்கும் ஒவ்வொரு கேள்வியும்
உயர்ந்தன.
பெருமளவு கேள்விகளுக்கு இல்லை-சரியில்லை
என்ற அவக்காரமானபதில்தான் கிடைக்கிறது.
அவரின் கருத்துகள் இயன்ற அளவிற்குச் சென்று
சேரவேண்டும்என்ற விழைவில் பலரும்
ஆர்வமாயிருப்பது மட்டுமே மகிழ்ச்சியளிக்கிறது.
அன்புடன்,
நாக.இளங்கோவன்_..
*******************************************************
திரு இண்டிராம் / திரு இளங்கோவன்,

தமிழின், தமிழரின், தமிழ் கலச்சாரத்தின், அப்பட்டமான
உண்மை நிலை, திரு இண்டிராம் அவர்களின் கேள்விகள்
மற்றும் நம் மனதில் விளையும் அதற்கான பதில்கள்
மூலம் முழுதாகப் படம் பிடித்துக் காட்டப்படுகிறது.

தமிழ், தான் தோன்றிய காலந்தொட்டு அவ்வப்போது
வரிவடிவத்திலும், வழக்கிலும், பயன் பாட்டிலும்
பலப்பல மாறுதல்களைச் சந்தித்தபோதும், தன்
செம்மையை பல சீரிய சான்றோர்களின்
முயற்சியால் வளமைப்படுத்திக் கொண்டு
வந்திருக்கிறது.

ஆனால், இப்போது ஏற்பட்டுள்ள சோதனை தீர,
அத்தனை தமிழார்வளர்களும் ஒன்றாய் செயல்
பட்டாக வேண்டும். அதற்கு இன்று உள்ள
அறிவியல் வளற்ச்சி உறுதுனையாக
இருக்கும்; இருக்கட்டும்..
அன்புடன்,
மு.வெற்றிவேல்_..
****************************************************
அன்பின் நண்பர் திரு.வெற்றி அவர்களே,
வருக. வருக.
நண்பர் திரு.வெற்றியைத் தமிழுலகத்தில்
காண்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

கடந்த வருடம் 2007 பாவேந்தர் விழாவை
மெய்யுலக விழாவாகஇரியாத் நகரில்
புதுவையின் முன்னாள் முதல்வரும்
தற்போதைய இந்தியத் தூதருமான
திரு,பரூக் மரக்காயர் அவர்களின்
தலைமையில்எழிலுற நடத்திய
பெருமை நண்பர் திரு.வெற்றி
அவர்களைச் சேரும்.
அவரை மீண்டும் வரவேற்பதில்
மகிழ்ச்சி கொள்கிறேன்.
அன்புடன்,
நாக.இளங்கோவன்_..
*****************************************
அன்பினிய நண்.வெற்றி அவர்களே,
வணக்கம்.
தமிழ் உலகில் விழா நடக்கும்நேரத்தில்
முகம் காட்டியிருக்கிறீர்கள்.
உங்களை வருக வருகவென தமிழ் உலகம்
சார்பிலும்பாரதிதாசன் வைய விரி அவையின்
சார்பிலும்வரவேற்பதில் பெருமகிழ்வெய்துகிறோம்.

தங்களைப்பற்றி நண்பர் மூலம் கேள்விப்பட்டிருந்தாலும்
நேரம் கிடைக்கும்போது தங்களைப்பற்றிய‌சிறிய
அறிமுகத்தை தமிழ் உலகம் அறியும்வகையில்
செய்து கொள்ளுங்கள்.
மெய்யுலகில் பாரதிதாசன் விழா கொண்டாடியிருந்தாலும்
வலையுலகில் கவிஞரின் பெருமைகளை நீங்களும்
இங்கு..இணைய உலகிலும் பகிர்ந்துகொள்ள வேண்டும்
என்பது எங்கள் விருப்பம். தங்கள் வருகைக்கு மீண்டும்
எம் இனிய கைகூப்பிய வரவேற்புகள்.
அன்பு மிக,
ஆல்பர்ட்,அமெரிக்கா.
பழனி,சிங்கை,
மணியம்,சிங்கை.
*******************************************************
பாவேந்தர் இன்றிருந்தால் என்ன செய்திருப்பார்...?

தமிழ் அரசுகள் உள்ள மூன்று நிலங்களில்
ஒன்று புதுவை.புதுவை ஈன்ற இருபெரும்
கவிஞர்களில் ஒருவர்பாவேந்தர் பாரதிதாசனார்.
தமிழ் மொழி, நாடு,மக்கள் என்ற ஒரே
குறிக்கோளில் காலம் முழுவதும் வாழ்ந்தவர்.

இளமையிலேயே கவித்திறன் மிகுந்து இருந்து
இவர் இயற்றியஇறைப்பாடல்களை அவரின்
நூல்களில் காணலாம்.

மாகவி பாரதியாரின் அன்புக்கு உரியவர்.
பாரதியாரின் தூண்டலில்அவரின் முன்னர்,
பாரதிதாசனார் எழுதியமுதல் பாடலே
சத்தியைப் பற்றித்தான்!
எங்கெங்கு காணினும் சக்தியடா - தம்பி
ஏழுகடல் அவள் வண்ணமடா! - அங்குத்தங்கும்
வெளியினிற் கோடியண்டம் - அந்தத்
தாயின் கைப்பந்தென ஓடுமடா! - ஒரு
கங்குலில் ஏழு முகிலினமும் - வந்து
கர்ச்சனை செய்வது கண்டதுண்டோ? - எனில்
மங்கை நகைத்த ஒலியெனலாம் - அவள்
மந்த நகையங்கு மின்னுதடா!
காளை ஒருவன் கவிச்சுவையை - கரை
காண நினைத்த முழு நினைப்பில் - அன்னை
தோளசைத்தங்கு நடம்புரிவாள்! - அவன்
தொல்லறிவாளர் திறம் பெறுவான் - ஒரு
வாளைச் சுழற்றும் விசையினிலே - இந்த
வையமுழுதும் துண்டு செய்வேன் - என
நீள இடையினின்றி நீ நினைத்தால் - அம்மை
நேர்படுவாள் உன்றன் தோளினிலே!
அன்னை சத்தியின் மந்த நகையில்
மனம் மயங்கி,புலவனின்/கவிஞனின்
சிந்தையிலேஅன்னை நடம்புரிந்து
திறம் தருவாள் என்றும்,சீரிய
மறவனின் தோள்களிலேஅன்னையே
நேர்படுவாள் என்றும் இறைத்துய்ப்போடு
பாவேந்தர் பாடிய இப்பாடலில்மனம்
பறிகொடுத்தவர்கள்பலர்; என்னையும் சேர்த்து.
மேலும் சுப்பிரமணியர் துதியமுது, சிவசண்முக
பஞ்சரத்நம்போன்ற நீண்ட பாடல்கள்
அவரிடம் மிகுந்து இருந்த ஆன்மச் சிந்தனைகளைச்
சொல்லுவன.

அப்படி இருந்த பாவேந்தரைத்தான்,
தமிழகத்தையும்இறைத்தலங்களையும்
சுற்றியிருந்த வைதீகக் கொடுமைகள்
ஆன்மிகத்தை விட்டே விரட்டியது.
பெருத்த மூடநம்பிக்கைகளுக்கு முட்டுக்
கொடுத்துக் கொண்டு,மக்களை வருண
பேதிப்பால் கூறுபோட்டு, கல்வியை மறுத்து,
உச்சமாக தமிழ்நெறிகளையும் கடவுள்களையுமே
தமிழர்களிடம் இருந்து பிரித்து, தமிழ்நாட்டின்
இயல் நெறிகளின் தடமே ஏறத்தாழ இல்லாத
நிலை செய்து,பலரை நாத்திகத்துக்கும் பிற
மதங்களுக்கும்விரட்டிக் கொண்டே இருந்தது,
இருக்கிறது வைதீக மதம்.
அந்த வைதீகத்தை வெறுத்து ஓடியவர்களில்
நாத்திக நிலையில்நின்ற பலருள் பாவேந்தரும்
ஒருவர்.
மேலே உள்ள பாடலில் அவர் காட்டியிருக்கும்
இறைத்துய்ப்பை உணரும் நடுநிலையாளர்,அவர்
அப்படி நாத்திகத்திற்குப் போனது எவ்வளவுபெரிய
இழப்பு என்று புரிந்து கொள்ள முடியும்.

வெகுண்டு அவர் தமிழ்க் கடவுள்களைஏசியதும்
உண்டு. ஏன் பீரங்கியையே தூக்க வேண்டும்என்று
சொன்னதும் உண்டு.
அது அவர் தமிழ்க்கடவுள்களைஏசியது என்று
எண்ணுவதை விட,தமிழ்க்கடவுளரைச் சுற்றியிருந்த
வைதீகக் குற்றங்களைச் சாடினார் என்பதுதான் உண்மை.
இதையே பிடித்துக் கொண்டு சிலர்'பீரங்கி பீரங்கி..' என்று பிதற்றுவதெல்லாம்இறைவனை அப்படிச் சொன்னாரே
என்ற இறையன்பினால் அல்ல.

அறியாமையில் சிலரும்,வைதீகக் காப்புப் போட்டுக்
கொண்டேஇருக்க சிலரும் செய்யும் பரப்புரை இது
என்பதை நாம் உணர்ந்தே இருக்கிறோம்.

ஆதலாற்றான் சில வைதீகப்பிரியர்கள்மற்றும் சில அவசரக்காரர்கள்பாவேந்தர் குறித்து சொல்லும்
தவறான கருத்துகளை நாம் செவிமடுப்பதில்லை.
நாத்திக நிலையில் இருந்து பலரும் வைதீகத்தைத்தான்
எதிர்க்கிறார்கள் தமிழகத்தில்.
ஆனால் இதனையே சாக்காகவைத்துக்கொண்டு
பல திரிப்புக்களையும் புரட்டுக்களையும்செய்து
கொண்டு வைதீகம் பழைய நினைப்பிலேயே திரிகிறது.

ஆகவே, தமிழ் மொழியை,தமிழ் மண்ணைப்
பேணுவதோடு,நமது தொன்மத் தமிழ் இறை
நெறிகளையும்மீட்டெடுத்துப் பயின்றுபேண
தமிழர்கள் முனைப்புடன் இருக்க வேண்டும்.

கோயிலில் வடமொழி, மூடநம்பிக்கை,
சாதியாதிக்கம் என்றுசொல்லிக் கொண்டே,
யாரோ வந்து நமக்கு நமது இறைச்
செல்வங்களை, தமிழ்ச் செல்வங்களைத்
திருப்பித் தருவார்கள்என்ற எண்ணத்தில்
வைதீகத்திலேயே சுழன்றுகொண்டிராமல்
நமது அன்றாட வாழ்வில்முழுமையாக
வைதீகத்தைத் துறந்து தமிழ்ச்சமயநெறி
பேணுதலே நமது கடமையாக இருக்க முடியும்.

மாற்றம் என்பது மாறாதது, பாவேந்தர்
போன்ற பல புரட்சிக் காரர்களின் முயற்சியால்
சிறிதளவு தமிழ்நாடு மாறியிருக்கிறது என்றே
சொல்ல வேண்டும்.

இந்த நிலையில், இன்று பாரதிதாசன் இருந்திருந்தால்
அவர் நமது முக்கியமானஇறைச்செல்வங்களை
மெய்யியல் செல்வங்களைமீட்டெடுப்பதையே
தலைமையாகக் கொண்டிருக்கக் கூடும்.
ஏனென்றால் அதில்தான் தமிழ் உலகம்இன்னும்
மொத்தமாக கவிழ்ந்து கிடக்கிறது.தமிழர்களின்
இயல்பு நெறிகளான சிவநெறியும் மால் நெறியும்
மீளாமல் தமிழருக்கு வாழ்வில்லை.
அன்புடன்,
நாக.இளங்கோவன்_..
பி.கு::செய்ய வேண்டிய பலவற்றில் இந்த ஒன்றனை உறுதியாகச்செய்திருப்பார் என்றே எனக்குப் படுகிறது.
*********************************************************

No comments: