Tuesday, April 22, 2008

<>பாரதிதாசன் வாரம் கவிதைகள்<>


கனக சுப்பு ரத்தினக் கவிஞன்!
==========
மீசைக் கவிக்கு மிகவும் நெருங்கிய
நேசக் கவிஞன், தமிழைப் புயலாய்
வீசும் கவிஞன், வெற்றிக் கவிஞன்
தாச னெனப்பெயர் கொண்ட போதிலும்
இராசக் கவிஞன், இரசக் கவிஞன்!
தமிழ்க்குரு திக்குள் தமிழுயிர் வளியைச்
செலுத்திய எங்கள் வலுத்திகழ் கவிஞன்!

தமிழன் வேரில் தமிழ்நன் னீரைப்
பாய்ச்சித் தமிழ்க்கோல் ஓச்சிய கவிஞன்!
காப்பியம், நாடகம், கவிதை யாவினும்
தீப்பொறி பறக்கத் தீட்டிய கவிஞன்!

ஓடப் பர்களை உதையப் பராக்கப்
பாடக் கிளம்பிய சாடற் கவிஞன்!
சோலையும் எந்திரச் சாலையும் தந்தவர்
உழைப்பைப் புகழ்ந்த செழிப்புக் கவிஞன்!


இங்கினி இன்னல் தங்குவ தில்லை
சங்கே முழங்கெனச் சாற்றிய கவிஞன்!
தன்மனை என்றும் தன்சுகம் என்றும்
கடுகு போலக் குறுகிய மனத்தவர்
நெல்லிக் காயாய் நல்ல பூசணியாய்
நேயத் தாலே நெஞ்சம் விரியும் உ
பாயம் சொன்ன பண்புக் கவிஞன்!
பாரதிப் பட்டரை தன்னில் தட்டிய
கூர்வாள் எங்கள் கோபக் கவிஞன்!

தமிழ்பழிப் போர்க்குச் சாபக் கவிஞன்!

இவன்மேல் இவன்கீழ் எனப்பிரிப் போரைச்
சவமாக் கிவிடும் நவயுகக் கவிஞன்!

கோடை யிடியும் குமுறும் சிங்கமும்
சோடை போகவே உறுமிய கவிஞன்!
கனக சுப்பு ரத்தினக் கவிஞன்
கனகக் கவிஞன்! ரத்தினக் கவிஞன்!

இவனை யின்று புகழ்தல்
எனக்குக் கிட்டிய கணக்கிலாப் பேறே!
அன்புடன்
மதுரபாரதி
*************************************
<>பாரதிதாசன் ஒரு பார்வை<>
(கவிஞர்.வைரமுத்து)

கவிஞன்
உருவாக்கப்படுவதில்லை!
காரணம்....
அவன்
களிமண் பொம்மையில்லை!
கவிஞன்
பிறப்பதுமில்லை!

ஏனெனில்,
எந்தக் கருப்பையும்
அவனை
அசுத்தப்படுத்திவிட முடியாது!
அவன்
தோன்றுகிறான்!

தன்னிலிருந்து இன்னொன்றாய்
தானே தோன்றுகிறான்!
நிகழ்காலத்தின்
பாய்விரிப்பில் படுத்துக்கொண்டே
நேற்றுகளிலும்.... நாளைகளிலும்
வாசம்புரிய வல்லவன் அவனே!
அவன் கனவுகள்
தூக்கங்களால் மட்டும்
கெளரவிக்கப்படுவதில்லை!
அவன் கனவுகளுக்கு
விழிப்புகளும் சம்மதிக்கின்றன!
இந்தப்
பிரபஞ்சத்தின் நுரையீரல்களுக்காவே
அவன்
தன்
சொந்த மூக்கில் சுவாசிக்கிறான்!
அவனால் மட்டுமே
உலகின்
எல்லா மொழிகளையும் ஒரே லிபியில் எழுத முடியும்.

அவன் சிரிப்பான்;
சூரியனிலும்
ஈரங் கசியும்!
அவன் அழுவான்
பகலே
இருட்டை அணிந்து
அவனோடு
துக்கங் கொண்டாடும்!
அவன் கோபிப்பான்!

அவன்
விரல்களில் சூட்டில்
பேனா மை கொதிக்கும்!
அவன் நிழ:ல
வெயிலுக்கும்
குடையாகும்.
பாரதியின் தாசனே!
நீயும்
இந்தப்
பட்டியலின் பாற்பட்ட
பாவலன் தான்!
நீ
எதைப்பற்றித்தான்
எழுதவில்லை?
பூமியின் தோள்களில்
வெய்யில் தூரிகையால்
தொய்யில் எழுதுமே
விடிகாலை
அதைப்பற்றி
வெப்பப் பகலை வீழ்த்திய
ஒரு
புரட்சிக்குப் பிறகு....

உறைந்த ரத்தக்ளமாய்க்
குளிர்ந்து கிடக்குமே
அந்தி....
அதைப்பற்றி
காற்றுவாங்க வருவோர்க்கு
அலைச் சாமரங்கள் வீசுமே
கடல்...

அதைப்பற்றி
ஓ! எதைப்பற்றித்தான்
நீ எழுதவில்லை!
உன்னை...

சராசரித் தராசுகள்
நிறுத்திவிட முடியாது!

விமர்சனத் தராசின்
போலிக் கயிறுகளை
அறுத்துவிடும் கனம்
உன் கவிதைக்குண்டு!

நீ கண்டித்தாய்!
சுரங்களைக் சுரக்கும்
காதல் வீணைகள்
விறகுக்காகவே
வெட்டப்படுவதை
நீ எதிர்த்தாய்!

கோவலர்கள் செத்ததற்காய்
கண்ணகிகளையே எரித்துவிடும்
கண்மூடித்தனத்தை
சமூகம்
ஒரு
விதவைக் கூந்தலின்
பூக்களை மட்டுமே
புறக்கணிக்க முடியும்!

அவள் கண்ணிலிருந்து
இதயத்திற்குள் சொட்டும்
கண்ணீருக்கு யார்
காவல் நிற்க முடியும்?

சமுதாயம்
அவளைச் சுத்தப்படுத்துவதாய்த்
தன்னை
அழுக்குப்படுத்திக கொள்கிறது.
விதவைகளின்
அமாவாசை நெற்றிகளில்
திலக நிலவுகள் தீட்டிய புலவன்
நீயல்லவா!
உலகச் சந்தையில்
காணாமல் போன
கைக் குழந்தைகளாய்
நாம்
தவித்தழுத போது
முகவரிதர முனிவந்தவன்
நீயல்லவா?
தமிழின்
சாசனமாயிருந்த
சங்கப் பலகை
பூசணம் பிடித்த பொழுது
அந்தப் பலகையைச்
சொந்த ஊஞ்சலாய் ஜோடித்து
உல்லாசத் தமிழ்மகளை
உட்கார்த்திப் பார்த்தவன் நீயல்லவா?
உன்னை நான் நேசிக்கிறேன்
ஒரு
தாமரைப் பூவில்....
பரணன்முதல் பாரதிவரை
பெண்ணின்
கன்னச் சிவப்பையே காண்கையில்
உழைக்குந் தோழரின்
கைகளில் சிவப்பைக்
கண்டவன் நீ என்பதால்...
உன்னை நான் நேசிக்கிறேன்.

(நன்றி: வைரமுத்து - திருத்தி எழுதிய தீர்ப்புகள்)

No comments: