Tuesday, April 22, 2008

பாரதிதாசன் வாரம்- கவிஞனின் காதலி


கவிஞனின் காதலி

பேராசிரியர் பெஞ்சமின் லெபோ

என்னுயிர்த் தோழி,
இனிதே வாழி!

என்னவனைப் பற்றி எழுதச் சொன்னாய்,
அந்த என்னவன் -பாண்டியன் பரிசு
தந்த தென்னவன், எனை ஆளும் மன்னவன்!

புதுவைக் குயில், புரட்சிக் கனல்!

ஏற்றமிகு தோற்றம் அவனுக்கு-
நிமிர்ந்த நெஞ்சு, நேர்கொண்ட பார்வை,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத் தோற்றம்!
திமிர்ந்த ஞானச் செருக்கு!

வானளந்த புகழை எல்லாம்
தேனளந்த தமிழாலே
தானளந்த தமிழ் மகன்.

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞன்!

அவன் படைத்த காதல் கவிதைகள்-
தமிழ்த்; தேனில் ஊறிய பலாச் சுளைகள்!
புரட்சிப் பாடல்களோ பொங்கும் எரிமலைகள்!

அந்த புரட்சிக் கவியிடம் உள்ளத்தைப் பறிகொடுத்தேன்.
அவன் அழகின் சிரிப்பிலே எனை மறந்தேன்!
சஞ்சீவி பர்வத்தின் சாரலிலே கொஞ்சி மகிழ்ந்தேன்.
தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாத
அவன் தமிழ் உணர்வில் நெகிழ்ந்தேன்.
அவன் அளித்த எதிர்பாராத முத்தம் நெஞ்சில்
இனிக்குமே நித்தம்.

குடும்ப விளக்கென என்னைக் கொண்டாடும்
அவனை மணந்தேன்.
அவனும் நானும் -

' வெண்ணிலாவும் வானும் போலே
வீரனும் கூர் வாளும் போலே
வண்ணப்பாவும் மணமும் போலே '

இணைபிரியாமல் இனிதே வாழ்ந்து வருகிறோம்.
எங்கள் ஊடலில், கூடலில், உறவாடலில்
எத்தனை எத்தனை பாடல்கள்!
அவற்றுள் சிலவற்றை உனக்குச் சொல்லட்டுமா?

ஒருநாள்....

' என்மீது உனக்கேன் இவ்வளவு காதல்? ' என்றேன்.
அவ்வளவில்,;

' தென்னவளே, தேனமுதே!
என்னடி அப்படிக் கேட்டு விட்டாய்,
மூவேந்தர் மடி வளர்ந்த முத்தமிழ்ச் செல்வி நீ!
பாவேந்தர் பாடிவளர்த்த பாவை நீ!
தமிழ், தமிழ், தமிழ் என உன் பெயரை
உரைக்கும் போதெல்லாம் என் நாவில்
ஊறுவது அமிழ்தல்லவா!
அதனால்தான், என் உயிரே உன் மீது
காதலாகிக் கசிந்து உருகித்

' தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத்
தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்'
எனப் பாடினேன் என்றானடி அவன்.


பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தோம்
மெதுவாகத் தொடங்கினேன் :

' கண்டு கேட்டு உண்டு, உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள
எனப் பெண்ணின்பத்தைப் புகழ்ந்து வள்ளுவர் பாடினார்.

வள்ளலாரோ -
'காமமிகு காதலன்தன் கலவிதனைக் கருதுகின்ற
ஏமமிகு கற்பினள்;தன் இன்பினும் இன்பாயது "
இறைவனேடு இணைகின்ற பேரின்பம் என அதனைத் தேடினார்.

நீயோ அவர்கள் இருவரையும் விஞ்சிவிட்டாய் ' என்றேன்.
உடனே, ' எப்படி, எப்படி, எப்படி? ' எனத் துடித்தான்.
' அப்படி வா வழிக்கு,
' மங்கை ஒருத்தி தரும் சுகமும்
மாத்தமிழுக்கு ஈடில்லை '
எனப் பாடியவன் நீ தானே ' என்று மடக்கினேன்!

'ஆமடி, அஃதுண்மை தானடி,
ஊனில் கலந்து உயிரில் கலந்து உவட்டாமல் இனிக்கின்ற,
'செந்தமிழே நறுந்தேனே என் செயலினை
மூச்சினை உனக்களித்தேனே
நைந்தாய் எனில் நைந்துபோகும் என் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே! '
என்று என்னை வாரி அணைத்துக் கொண்டானடி, என் தோழி.

<>Tue, Apr 22, 2008 at 9:40 AM<>

சஞ்சீவி பர்வத்தின் சாரலிலே வம்புக்கு இழுத்தேன் :

'ஐயா கனக சுப்புரத்தினமே,
தாங்கள்
பாரதிதாசனாக மாறிய மர்மம் என்னவோ? '

உடனே, 'நமக்குத் தொழில் கவிதை எனப்
பெருமிதங்கொண்ட
முறுக்கு மீசைப் புலவனுக்குத் தாசனடி நான்.
அதனாலே, இந்தப் பெயர் மாற்றம் '
என்று இந்த
நறுக்கு மீசைக் கவிஞன் சொன்னான்.

விடுவேனா நான், மேலும் சீண்டினேன் :

' ஏய்,
'கண்ணாடிக் கன்னத்தைக் காட்டி என்றன்
உள்ளத்தைப் புண்ணாக்கிப் போடாதேபோ
போ போய்விடு'
எனச் சற்றுமுன் என்னை
விரட்டியவனே, பச்சைப் பொய் சொல்கிறாய்!

பாரதியாருக்கா தாசன்? இல்லை, இல்லை,
பாரதி என்றால் கலைமகள் அல்லவா!

பாரதி என்ற பெண்ணுக்கு அல்லவா நீ தாசன்..... '

முடிக்கவில்லை நான்.

துடித்துப்போனான் அவன் :

'அய்யய்யோ, அப்படி இல்லையடி என் முல்லையே... '

அவனுக்கோ பதைப்பு எனக்குள்ளோ நகைப்பு!

ஊடலைத் தொடர்ந்தேன் :
'ஓகோ ஓ, அப்படி இல்லையா?
பின்னே, பார் ரதிக்குத் தாசன் என்று மார்
தட்டுகிறாய் போலும்.' என்றதுதான் தாமதம்.

உடனடியாய் அவன்,

'வட்டெழுத்தாய் உள்ளத்தை வளைக்காதே!
நெட்டெழுத்தாய் ஊடலில் திளைக்காதே...
கட்டழகே கன்னித் தமிழே,

பார்! அதி தாசன் உனக்கே தான் என்றான். '

'வந்தாயா வழிக்கு' என்று நெஞ்சுக்குள் நான் மகிழ்ந்தே,
நீலப் புடவையால் நிலா முகம் மறைத்தேனோ
இல்லையோ, தென்றலாய் அவன் கவிதை
வந்தென்னைத் தொட்டது :

'நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து
நிலாவேன்று காட்டுகின்றாய்
ஒளிமு கத்தைக்கோலம்முழு தும்
காட்டி விட்டால் காதற்
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ!

வானச்சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்
சொக்கவெள்ளிப் பாற்குடமோ அமுத ஊற்றோ'
மனத்தை மயக்கும் மாலைப் பொழுதில்
என்னை அவன் சீண்டியதும் உண்டு :

'காலை இளம் பரிதியிலே அவளைக் கண்டேன்
கடற்பரப்பில் ஒளிப்புனலில் அவளைக் கண்டேன்'
என்று அவன் பாடிவரு முன்னே,
'ஓகோ எவளைக் கண்டாய் ' என்று அதட்டினேன்
பாரேன்,உடனே,'.
............................................................
அங்கெல்லாம்அழகென்பாள் கவிதை தந்தாள்
'என அழகாகப் பாடி முடித்துவிட்டான்.
'போதும் போதும், அவளைப் பாடியது போதும்
நம்மைப் பாடெ' ன்றேன். 'வேற்றுமொழிப்
பாடத்திலே மயங்கிக் கிடந்தேன் வீட்டு
வாசலுக்கு வந்தென்னை ஆட்கொண்டாய்.
அதனைப் பாடவா' என்று கேட்டான்.

இம் என்னும் முன்னே அவன் கவிதை
அருவி எனப் பொங்கிப் பெருகியது :

'கூடத்திலே மனப் பாடத்திலேகூடிக்
கிடந்திட்ட ஆணழகைஓடைக் குளிர்
மலர்ப் பார்வையினால்உண்ணத் தலைப்
படும் நேரத்திலேபாடம் படித்து நிமிர்ந்த
விழிதன்னில்பட்டுத் தெறித்தது மானின்
விழிஆடை திருத்தி நின்றாள் அவன்ஆயிரம்
ஏடுகள் திருப்புகின்றான். '

மாலைத் தென்றலாய் மனத்தைக் கவரும்
மாணிக்க வரிகள்!
ஒவ்வொரு சொல்லும் ஓராயிரம் பொன் பெறுமே!

தெறித்தது என்ற சொல் உணர்த்தும் பொருள்...
அப்பப்பா!

கோலி குண்டு இரண்டு மோதினால் ஒன்றை
ஒன்று ஒருகணம் தொட்டு மறுகணம் இரண்டும்
இரு திசை நோக்கித் தெறித்துப் போகுமே!
அதுபோல, ஆசை எனும் விசையோடு வந்து
தாக்கிய வண்டு விழிகள் அவன் விழிகளோடு
மோதித் தெறித்தனவாம். ஒன்றினை ஒன்று
உண்ணவும் நிலை பெறாது உணர்வும்
ஒன்றிடக் கவ்விய விழிகளைக் கம்பன்
காட்டுவான்.

பட்டுத் தெறிக்கும் விழிகள் வழியே
துளிர்க்கும் காதலைத் துல்லியமாகக் காட்டி
விடுகிறான், என்னவன்.
குலையாத ஆடையை அவள் திருத்துகிறாளாம்
நூறு பக்கம் கூட வராத நூலில் இவன் ஆயிரம்
ஏடுகள் திருப்புகிறானாம்! நிலை குலைந்த
நெஞ்சங்கள் உளம் ஒன்றிப் போன அழகிய
காதல் காட்சி!

தாபப் பாடல்களில் இவன் தென்றல் காற்று,
கோபப் பாடல்களிலே புரட்சி ஊற்று. அவன்
காலத்துத் தமிழகத்தின் தலைநகரில்
தமிழ்தானில்லை என்ற நிலைதனை
மாற்றிடத் துடிக்கிறான். ஊமைகளாய்
ஆமைகளாய் உறங்கிக்கிடந்த தமிழ்
இனத்தைத் தட்டி எழுப்பக் கவிதைக்
கனல் வடிக்கிறான், போர்ப்பறை என அவன்
ஆர்ப்பரிப்பதைக் கேள் என் தோழி :

'பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறந்தது
சிறுத்தையே வெளியே வா..............எலிஎன
உன்னை இகழ்ந்தவர் புகழ்ந்திடப்புலிஎனச்
செயல்படப் புறப்படு வெளியில்
......................................சிங்க இளைஞனே
திருப்புமுகம் திறவிழிஇங்குன் நாட்டுக்கு
இழிகழுதை ஆட்சியா? '

நாமமது தமிழர் எனக் கொண்டிங்கு வாழ்ந்து
வந்தவர்களை உலுக்கி அவன் எழுப்புவதை
உரத்துப் பாடுகிறேன் கேள் :

'வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே?
மொழிப்பற் றெங்கே விழிப்புற் றெழுக! '
அதுமட்டுமா, தமிழர்களைக் கிளர்ச்சிக்குத்
தூண்டுகிறான் பார் :'தமிழின் நலங்கெடல்
எங்கெல்லாம் அங்கெல்லாம்தலையிட்டுக்
கிளர்ச்சி செய்க! '

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை
கெட்ட மாந்தரை நினைந்துவிட்டால் எனக்
கொதித்துப் பாடினார் பாரதியார்.
இவனோ, தமிழ் மாந்தர் நிலைகெட
வைத்தவர்களைப் பூண்டோடு வேரறுத்தல்
வேண்டும். அதனால்,'கொலை வாளினை
எடடா மிகக்கொடியோர் செயல் அறவே'
எனக் குதித்துச் சாடுகின்றான்.
புரட்சிக் கவி என்ற நூலை எழுதிய
காரணத்தால் மட்டுமே இவன் புரட்சிக்
கவிஞன் ஆகிவிடவில்லை!

இக்காலத்தில் மிகவும் பழகிப்போன கருத்துக்கள்
இவன் காலத்தில்- அரை நூற்றாண்டுக்கு முன்னால் ‍
இவன் கவிதையில் பூத்த புரட்சிப் பூக்கள்!

கருத்தடையும் கருச்சிதைவும் தெருவெங்கும்
மலிவாகிப் போனது இக்காலம்.
ஆனால் அன்றோ அதனைப் பற்றி எண்ணவும்
நாணினர் பேசவும் கூசினர். 'மக்கள் தொகைப்
பெருக்கம் இறைவன் தந்த வரம், அதனைக்
குறைக்க முயல்வது பாவம்... 'என நம்பிய
ஆட்டு மந்தைக் கூட்டத்திலே அரிமாவாய்
இவன் குரல் ஒலிப்பதைக் கேள் :

'காதலுக்கு வழி வைத்துக் கருப்பாதை
சாத்தக்கதவொன்று கண்டறிவோம் இதிலென்ன
குற்றம்?சாதலுக்கோ பிள்ளை தவிப்பதற்கோ?
'கருத்தடைக்கு வழிகாணச் சொல்கிறானே தவிரக்
கருகலைப்புக்கு வழிவகுக்கச் சொல்லவில்லை
என்பதைக் கவனி;.
மேலும் தொடரட்டுமா என் தோழி :

தொட‌ரும் நாளையும்....

(பேராசிரியர்.பெஞ்சமின் லெபோ
பிரான்சு.)


No comments: