Tuesday, April 29, 2008

<>பார‌திதாச‌ன் வார‌ம் - கவிஞர்.ம‌துமிதா<>


<>புரட்சிக்கவி என

அழைப்பது ஏன்?<>


==கவிஞர்.ம‌துமிதா==

'ஆணுக்குப் பெண் இளைப்பில்லை
காணென்று கும்மியடி' என்றார் பாரதி. '
ஆணுக்கு பெண் நிகர்' என்றவர் பாரதியின்
தாசனான பாரதிதாசன்.

நூற்றாண்டு கண்ட பாரதிதாசன் 20 ஆம் நூற்றாண்டின்
தமிழ் இலக்கிய வரலாற்றில் நீங்கா இடம் ஏற்படுத்திக்
கொண்டவர். 'பாரதிதாசன் மாத்திரம்தான் தாம் கண்டதை
எழுதுகிறார்; பார்த்ததை எழுதுகிறார்; புரியாத விஷயங்கள்
தெரியாத விஷயங்கள் பற்றியேனவர் எழுத மாட்டார்'
ஏனென்றால் அப்படி எழுதினால் இன்று இல்லாவிட்டால்
நாளை பரிகாசத்துக்கு இடமாகும் என்பதை அறிந்திருந்தவர்
என்கிறார் டாக்டர் சகத்ரட்சகன்.

கனகசபை முதலியாருக்கும் இலட்சுமி அம்மையாருக்கும்
புதுச்சேரியில் 29.4.1891 புதன்கிழமை இரவு 10.15க்குப் பிறந்தார்.
தமிழாசிரியராய் 1909 - 1946 (32 ஆண்டுகள்) பனிபுரிந்தார்.
தமிழ், பிரெஞ்சு ஆகிய மொழி அறிந்திருந்தார்.
பழனியம்மாளை 1920ல் தனது 36 ஆவது வயதில் திருமணம்
புரிந்தார். குழந்தைகள் சரசுவஹி, கோபதி (மன்னர் மன்னன்), வசந்தா
(வேனில்) ரமணி ஆகியோர்.

அரசர்கள், செல்வச் செழிப்புமிக்க அவரின் அரண்மனை வாழ்க்கை,
கடவுள்கள், அவர்தம் பெருமைகள் பழைய கவிஞர்களிடையே
திருப்புமுனையாக வந்தவர் பாரதிதாசன் சமுதாயத்தின்பால்
திரும்பியது அவர் பார்வை. ஏழை - செல்வந்தன், உயர்ந்தவர் - தாழ்ந்தவர்,
முதலிய வேறுபாடுகளையும் மூடநம்பிக்கை, சமயம், கடவுள், பெண்ணடிமை
ஆகியவற்றை சுட்டெரித்த சிவப்பு சூரியன் அவர். தமிழ்க்கவிதையில்
பாரதிதாசன் என்பது வெறும் பெயரன்று. ஒரு புரட்சியின் குறியீடு.
பெரியாரின் வழித்தோன்றலான பாரதிதாசன் சமூக நீதியை
வரவேற்றும் பொருளியல் அநீதியை எதிர்த்தும் பாடினார்.

அறிஞர் அண்ணா....

புரட்சிக்கவி என அவரை அழைப்பது ஏன்?
இந்த வினாவுக்கான பதில் அறிஞர் அண்ணாவின்
வாயிலாக வருவதைப் பாருங்கள்.
வைதிகம் என்னும் குறுக்குச் சங்கிலியுடன் அக்காலக் கவிதைகள்
பிணைக்கப்பட்டிருந்தன. கவிதாரசத்துடனே அவை கல்லூரி
மாணவர்களின் நெஞ்சிலே நஞ்சைப் பாய்ச்சுகின்றன.
அதனால்தான் நம்முடைய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்,
'அந்தக் குறுக்குச் சங்கிலியை வெட்டு' எனக் கூறுகிறர்.
'கூர் இல்லாத வாளைக் கூர் ஆக்கு' என்கிறார்'குள்ள உள்ளத்தைக் கொலை செய்''கூனாதே நிமிர்ந்து நட''மேகத்திரளிலிருந்து நிலவொளி வெளியே வரட்டும்''அந்த உலகத்தைப் பற்றிப்பாடாதே!
இந்த உலகத்தைப் பற்றிப் பாடு!'
'காலத்துக்கு அடிமை ஆகாதே''இலக்கணக் கட்டுப்
பாட்டுக்குப் பயப்படாமல் பாடு' என்கிறார்.

இதனாலேயே இவரை புரட்சிக்கவி என அழைக்கிறோம்.
உயிர்க்கவி உண்மைக்கவி என அழைக்கிறோம் என
அண்ணா குறிப்பிடுகிறார்.

தமிச் சமுதாய மறுமலர்ச்சிக்கும் சர்வதேசிய
வாழ்வொருமைக்கும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
ஆற்றியுள்ள பணி அளப்பரியதாகும். கவிஞர்கள் உணர்ச்சியில்
குமுறிக்கொட்டும் சொற்கள் காலமாற்றங்களில் சமூக வட்டங்கள்
ஆகின்றன. சாதிமத சார்பின்மை, பெண்கள் முன்னேற்றம்,
மூடப்பழக்கங்கள் ஒழிப்பு, சமூக உடைமைச் சமூக அமைப்பு
ஆகியவை பாவேந்தரின் சமூகம் குறித்த கனவுகள்.

இன்று இவை அரசாலும் சான்றோராலும், பொதுமக்களாலும்
இன்றியமையா வாழ்க்கைக் குறிக்கோளாக உணரப்படுகின்றன.
அவ்வகையில் தீர்க்கதரிசியாகவும் அறியப்படுகிறார்.
புரட்சிக் கவிஞரின் உவமைச்சிறப்பு, பொதுவுடமைச்
சிந்தனை, இல்லறம், பிள்ளைப்பேறு, வாழ்க்கைப் பண்பாடு
ஆகியவை குறித்த அவரின் எண்ணம், சமயம் கடவுள் குறித்த
கருத்துகுழந்தைகள் இளைஞர், பெண்கள் என அனைவருக்கும்
தனித்தனியே கவிதை எழுதியமை, அரசியல் சார்புகள் தத்துவநிலை
இவை அனைத்தைக் குறித்தும் சிந்திக்கவைப்பவை அவரின் படைப்புகள்.

'சாதி உயர்வென்றும் செல்வத்தால் உயர்வென்றும்
போதாக்குறைக்குப் பொதுத்தொழிலாளர் சமூகம் மெத்த
இழிவென்றும் மிகப் பெரும்பாலானோரை கத்திமுனை
காட்டிக் காலமெல்லாம் ஏய்த்துவரும் பாவிகளைத்'
திருத்த வேண்டும் என்று ஏற்றதே பாவேந்தர்
கொண்ட இலக்கியப்பணி.

வெந்ததைத் தின்று விதிவந்தால் சாவோமென்று
வாழ்க்கைப் பயணம் உயர வழிகாணாது விதியின்
மேல் காரணம் சுமத்துவோருக்கு, 'மிதிபட்டுச்
சாவதற்கும், மேம்பட்டு வாழ்வதற்கும் காரணம்
மதியல்ல. தலை எழுத்தே; என்பவனை ஒரு தமிழன்
மதிக்கலாமா' என எழுதிமுழங்கியவர். 'எல்லாம் அவன்
செயலே' என்று சொல்லி பிறர்பொருளை வெல்லம்போல்
அள்ளி விழுங்கியவரைக் கண்டு வெறுத்து கடவுள் மறுப்பு
கோட்பாட்டை பாடி நிறுவினார் கவியரசர்.
வேத வேதாந்தம் பேசியவர் சிந்தையும் மொழியும் செல்லாத
உலகம் என்று இல்லாத நிலையைச் சொல்லிக் குழம்பிய
நிலையில்

"எதிர்த்திடும் துன்பம் ஏதும்இல்லாமல் மக்கள் பேரர்வதிந்திடல் கண்டு நெஞ்சுமகிழ்வதே வாழ்வின் வீடு" என்று
வீடுபேற்றிற்கு புதுவிளக்கம் தந்தவர்.

மாகவிஞன்....

19 ஆம் நூற்றாண்டில்
தோன்றிய பிரெஞ்சு புரட்சியின் கொள்கைகளாகிய சுதந்திரம்,
சமத்துவம், சகோதரத்துவம் இவரின் படைப்புகளில்
இடம்பெற்றுள்ளன.மக்களுக்காக மக்கள் மொழியில் மக்களைப்
பாடிய மாகவிஞன்.

சாதி இருட்டு தீண்டாமைக்கொடுமை, வர்ண
பேதம், மூடத்தனம், மதம், பெண்ணடிமை,
கைம்மை, தொழிலாளர் துயர், சிந்தனை
முடக்கம், மொழிப்பற்றின்மை, விதியின்
பேரில் மதிமயக்கம், எல்லாம் கடவுள்
செயல் எனும் சங்கிலிகளை உடைத்தெறிந்தார்.
இரண்டு செய்திகளில் பாரதிதாசன் குறித்த
கருத்துவேறுபாடு இல்லை.

1. பாரதியாரை அடுத்த சிறந்த தமிழ்க் கவிஞர்.
2. எங்கெல்லாம் தாம் அநீதி எனக் கருதிய ஒன்று
தோன்றியதோ இடம் பெற்றிருந்ததோ அதனை
ஒழிப்பதற்கும் நீதிக்குத் துணை போவதற்கும்
அவர் காட்டிய தீரமும், துணிச்சலும் என
நீதிபதி மு.மு.இஸ்மாயில் குறிப்பிடுகிறார்.

முதல் கவிதை இதழ்

இதழியல் துறையில் முதல் கவிதை இதழ்
நடத்தியவர் பாரதிதாசன்.

குயிலின் மீதும் பாரதியின் குயில்பாட்டின்
மீதும் அவர் கொண்டிருந்த பற்றே
'குயில்' இதழ் தொடங்க காரணமாகும்.

1958 - 1959 வந்த குயில் இதழின் உத்தியைப்
பார்த்தால் அதிலும் தனித்தன்மை விளங்கும்.
இதழில் தலையங்கம், கவிதை, கட்டுரை
மற்றும் பிற செய்திகளை வெளியிடும்போது
அவ்விதழின் உட்புறத்தில் இவ்வாறு
அமையப் பெற்றுள்ளமை அனைத்தும்
ஆசிரியரால் எழுதப்படுபவை என
'நினைவுறுத்துகிறோம்' என்ற பகுதியில்
சுட்டிச் செல்வதை இதழ் அனைத்திலும்
ஒரு உத்தியாகப் பின்பற்றியுள்ளார்.
'குயிலில் பிறரால் எழுதப்படும் பாட்டு
உரைநடைக்கு அவரின் இயற்பெயர் அல்லது
புனைபெயர் இருக்கும். ஆசிரியரால்
எழுதப்படுபனவற்றிற்ர்குப் புனைபெயரோ
இயற்பெயரோ இராது' எனவரும் பகுதி
பாரதிதாசனிடம், பெயர் குறிக்காமல்
செய்தியினை நினைவுபடுத்தும்
உத்தியைப் புலப்படுத்துவதாய் உள்ளது.

முன்னிலைப் படுத்திக்காட்டும் உத்தி,
வருவதை உரைக்கும் உத்தி, உவமையினைக்
கையாளும் உத்து, கதை வழிச் செய்தியை
விளக்கல், தொகுத்துரைத்தல்,
விரித்துரைத்தல்... ஆகியவற்றையும்
குயில் இதழில் கடைப்பிடித்திருக்கிறார்.

கனகசுப்புரத்தினம் என்னும் பெயரில் எழுதாது
புதுவை கே.எஸ். பாரதிதாசன், கே.எஸ்.ஆர்,
கண்டெழுதுவோன், கிண்டல்காரன், கிறுக்கன்
என்னும் புனைபெயர்களில் எழுதியிருக்கிறார்.

தேச சேவகன், ஆத்மசக்தி, தாய்நாடு, துய்ப்ளேக்சு,
புதுவை முரசு, சு.பா. கவிதா மண்டலம், முல்லை,
குயில் ஆகிய இதழ்களுக்கு இதழாசிரியராக
இருந்திருக்கிறார். இசையோடு பாடுவார்;
நாடகங்களில் நடிப்பார்.
இராமானுஜர், பாலாமணி அல்லது பக்காத் திருடன்,
கவிகாளமேகம், சதி சுலோசனா, ஆயிரம் தலை வாங்கிய
அபூர்வ சிந்தாமணி, வளையாபதி, பொன்முடி ஆகிய
ஏழு திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவர்.

20 படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார். மேலும்
சிலம்பம், குத்துவரிசை போன்ற உடல்பயிற்சிகளில்
தேர்ச்சி பெற்றவர்.

பாரதிதாசன் நோக்கில் பெண்கள் உயர்வாய்
சித்தரிக்கப்பட்டனர்.

"பெண் ஆணுக்கு நிகர்" என்று பாரதியைத்
தொடர்ந்து முதலில் முழங்கியவர்.அனைத்து
தொழிற்துறை செயல்களும்
ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவே
என்பதை எழுதுகிறார்.

" வானூர்தி செலுத்தல் வையமாக்கடல்
முழுத வித்தல்ஆன எச் செயலும்
ஆண் பெண்அனைவர்க்கும் பொதுவே'
பெண்ணுக்கான மன வலிமைக்கு
உபாயம் சொல்கிறார்.
எவ்விதம் தறுதலை ஆண்களை எதிர்த்து
நிற்கவேண்டும்?
என்பதையும் எடுத்துரைக்கிறார்.

"தனித்து வரும்போது - கெட்டதறுதலை கண் வைத்தால்இனிக்க நலம்கூறு - பெண்ணேஇல்லாவிடில் தாக்குஉமியல்ல மாதர் வலக்கை - தீயர்உயிரை இழக்கும் உலக்கை'இப்பாடல் இருமையை அருமையாகக் காட்டுகிறது.

உயர்வு தாழ்வு வேண்டாமென்பதை ஆணித்தரமாக
அழகுணர்ச்சியுடன் காட்டுகிறது.
'எத்தனை பெரிய வானம்எண்ணிப்பார் உனையும் நீயே;இத்தரை கொய்யாப் பிஞ்சுநீ அதில் சிற்றெறும்பேஅத்தனை பேரும் மெய்யாய்அப்படித்தானே மானேபித்தேறி மேல்கீழ் என்றுமக்கள் தாம் பேசல் என்னே'சோம்பலை விட்டு செயல்
செய்வதற்கான வலிமையைச் சொல்லும் பாடல்:
சோம்பிக்கிடப்பது தீமை நல்லதொண்டு செயாது கிடப்பவன் ஆமை*தேம்பி அழும் பிள்ளை போல - பிறர்தீமையை அஞ்சி நடப்பவன் ஊமை.
நம்நாட்டில் அறம் தழைத்து பொதுவுடமை
நிலைத்து வறுமை அறவே ஒழிய மக்கள்
வீர உணர்வோடு உழைக்க வேண்டும் என்பதை,
"தயையாகிய அறமே புரிசரி நீதியுதவுவாய்!சமமே பொருள் ஜனநாயகம்எனவே முர சறைவாய்! இலையே உணவிலை யேகதிஇலையே எனும் எளிமைஇனிமே யிலை எனவே முரசறைவாய் முரசறைவாய்! - ( வாளினை எடடா )
காதல் குறித்து எழுதாத கவியுண்டோ!

இதோ நம் பாவேந்தரும் காதலைப் படைக்கிறார்.
"காதல் அடைதல் உயிரியற்கை! அதுகட்டில் அகப்படும் தன்மையதோ? அடிசாதல் அடைவதும் காதலிலே - ஒருதடங்கல் அடைவதும் ஒன்று கண்டாய்."
காதல் கடிதம் எழுதிக் கொள்கின்றனர் காதலனும் காதலியும்.
காதலி எழுதுகிறார்:
அனைவரும் நலமாக இருப்பதாக.
தன்னைப் பற்றி மட்டும் குறிப்பாகக் கடைசியில்
சொல்கிறார் கடிதத்தில். நெல், அணிகலன், பழங்கள்,
சோலைகள் அனைத்தும் உண்டு.

இங்குள்ளோர், தோழியர், வேலைக்காரர்,
மான், மயில்,
பசுக்கள் க்ஷேமம்..."என்றன் நிலையோ என்றால்இருக்கின்றேன் சாகவில்லை என்றறிக"
காதலி கடிதம் எழுதி முடிக்கையில் கையொப்பமிடுகிறார்.
" இங்ஙனம் உன் எட்டிக்காயே " என எழுத
காதலன் பதில் எழுதுகிறான்:

இவ்வுலக இன்பமெலாம் கூட்டி எடுத்து
தெளிவித் திறுத்திக் காய்ச்சிஎங்கும் போல் எடுத்துருட்டும் உருட்சியினைஎட்டிக்காய் என்பாயாயின்எனக்கு நீ எட்டிக்காய் என்றுதான்சொல்லிடுவேன்என மாற்றுச் சிறப்பாய் எழுதியதை அறிகிறோம்.
பொதுவுடைமைச்சித்தாந்தம் மனதில் உறைந்து பொதுவுடமைப்
பாடல்கள் விரல்வழி பொழிகின்றன. உழைத்தும் பலர்
உணவின்றித்தவிக்க உழைக்காமலே சிலர் சுரண்டிக்
கொழுக்கின்ற ஊழல் பாரதிதாசரின் உள்ளத்தை வருத்துகிறது.கூழுக்குப் பற்பலர் வாடவும் சிற்சிலர்கொள்ளையடிப்பதும் நீதியோ - புவிவாழ்வதுதான் எந்தத் தேதியோ
பொருளாதார சமப்பகிர்வுக்கு அஹிம்ஸை
பயனளிக்கிறது.
அதை அடுத்து இம்சையைக் கையில்
எடுக்கவும் கூறுகிறார்.அடி உதவுவது போல் அண்ணன் தம்பி
உதவமாட்டான் என்பது வலியுறுத்துவது
போலவும் நகைச்சுவைக்குப் பின்னே உயர்
கருத்து ஒளிந்திருந்து ஒளிர்வது போலவும்
உதையப்பர் எனும் சொல் உபயோகிக்கிறார்.
ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர்உதையப்பராகி விட்டால் ஓர் நொடிக்குள்ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆய்விடுவார் உரையப்பா நீ!

அனைத்தும் பொதுவுடமையாக்கப்பட
வேண்டும் என்பதை மொழிகிறார்.
"உடமை மக்களுக்குப் பொதுபுவியை நடத்து பொதுவில் நடத்து"
"பனையளவு நலமேனும் தன்னலத்தைப்பார்ப்பானோர் மக்களிலே பதடியாவான்"
தமிழ்ச் சமுதாயம் சீரழிந்து போவதற்கு சாதி
சமய காரணம் என்பதையும் உயர்வு தாழ்வு
பார்க்கக்கூடாது என்பதையும் இதில் வலியுறுத்துகிறார்.
"பிறவியில் உயர்வும் தாழ்வும் சொல்லல் மடமை இந்தப்பிழை நீங்குவதே உயிருள்ளாரின் கடமை"

பெண்களுக்கான பாடல்களில் பெண்ணின் உயர்வு
கல்வியினால் வரும் என்பதை வலியுறுத்துகிறார்.
கல்வியிலாப் பெண்கள் களர் நிலம் என்றும் கல்வி
கற்ற பெண்கள் திருந்திய கழனி என்றும் கூறுகிறார்.

இதை பெண்ணடிமைத்தனமாகப் பார்க்கக் கூடாது;
பெண்ணின் மீதான கரிசனமாகப் பார்க்க வேண்டும்.
"படியாத பெண்ணினால் தீமை- என்னபயன் விளைப்பாளந்த ஊமை"
இவரின் குழந்தைப் பாடல்களும் சிறப்பு மிக்கவை.
வருங்காலத்தில் நாட்டை ஆளப்பிறந்தவர்கள்
நீங்கள் என குழந்தைகளைக் கூறுகிறார்.
'இன்று குழந்தைகள் நீங்கள் எனினும்இனி இந்த நாட்டினை ஆளப்பிறந்தீர்'
குழந்தைகள் என்ன செய்யவேண்டும் என்பதையும் கூறுகிறார்.
'போகா இடங்கள்
போனால் பொல்லாங்கெல்லாம் நேரும்பொல்லாரோடு சேர்ந்தால்
பொய்யும் புரட்டும் சேரும்பெரியோர் பேசும்போது -
குறுக்கில் பேசல் தொல்லை'
திருடாமை, எதெல்லாம் கூட
தீங்காகும் என்பதைச் சொல்கிறார்.
"பசித்த போதும் பொறுப்பது பாங்குபருக்கை ஒன்றைத் திருடலும் தீங்கு"

எதைப் படிப்பது எப்போது எப்படிப் படிப்பது?
என குழந்தைகளுக்குச் சொன்னாலும்
பெரியோருக்கும் ஏற்புடைத்ததாகவே இருக்கிறது இவரின் பாடல்கள்.
"ஏட்டில் உள்ள பாட்டைஇசைத்துப்பாடி புரியும்காட்டும் உரைநடையைக்
கலந்து படி புரியும்"கலைஞர் கருணாநிதி....
"காலையில் படி கடும்பகல் படிமாலை இரவு பொருள் படும்படி
நூலைப்படிசாதி என்னும்
தாழ்ந்தபடி நமக்கெல்லாம் தள்ளுபடிசேதி அப்படி தெரிந்து படி" என்கிறார்.
சிங்கத்தின் முழக்கம், சிறுத்தையின் பாய்ச்சல்,
வேங்கையின் கம்பீரம், புயலின் வேகம், இடியின்
முழக்கம், மின்னலின் வீச்சு, அருவியின் ஓட்டம்,
தென்றலின் தெம்மாங்கு, நிலவின் குளிர்ச்சி இத்தனையும்
சேர்ந்தால் பாரதிதாசனின் கவிதை என்கிறார்
கலைஞர் கருணாநிதி.
'ஆவேசத்தையும் உணர்ச்சியையும், வெள்ளமாகக் கொட்டும்
உயிர்க்கவி பாரதிதாசன்' -என்றவர் அறிஞர் வ.ரா'பாரதியார் இன்று நமக்கு வைத்துவிட்டுப்போன
சொத்துகள் பல. அவற்றில் முக்கியமானவற்றைக்
குறிப்பிட்டால் ஞானரதம், குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம்,
கனக சுப்புரத்தினம் என்ற பாரதிதாசன் என்று சொல்லப்போகும்'
என்றவர் புதுமைப்பித்தன்.
கலையின் வகைகளைச் சொல்லும்போது நாடகத்தில் பெரிதும்
கவனம் கொண்டவர் பாரதிதாசன்.
" சீரிய நற் கொள்கையினை எடுத்துக் காட்டல்சினிமாக்கள் நாடகங்கள் நடத்த வேண்டும்" என்றவர் பாரதிதாசன்.
ஒரு செய்தியை நன்றாக விளக்க வேண்டுமென்றால் அதற்கு
நாடகமே ஏற்ற வடிவம் என்பார் பாரதிதாசன் (படித்த பெண்- முன்னுரை)
அவரது கவிதைகூட நாடகப் பண்பைப் பெற்றிருப்பது
அறியப்படத்தக்கது.

தனிபாடல்கள் கதைப் பாடல்கள் நாவல்கள் சிறுகதைகள்
இலக்கியம் இலக்கணம் சொல்லாய்வு நாடகம் திரைப்படம்
எனப் பல்வேறு துறைகளில் தம் தடம் பதித்திருந்தாலும்
பாட்டால் அறிமுகமானதால் பாவேந்தர் எனவும்
புரட்சிக்கவி எனவும் புகழப்படுகிறார்.
இவரின் முதல் கவிதைத்தொகுப்பில் வெளிவந்த
'புரட்சிக்கவி, வீரத்தாய்' என்னும் இரு கவிதை நாடகங்கள்
இவரின் நாடக ஆர்வத்தை முதலில் எடுத்துக் காட்டியவை..

தாமே குயில் இதழ் நடத்திய போதும் பிற இதழ்களுக்கும்
படைப்புகள் அளித்தபோதும் பல நாடகங்களையும்
அளித்துள்ளார்.

இவரின் 'பிசிராந்தையார்' நாடகத்துக்கு சாகித்ய அகாடமி
விருது வழங்கப்பட்டது.
கவிதை, கதை, கட்டுரை, நாடகம், இலக்கணம் என 72 நூல்கள் படைத்துள்ளார்.
கவிதை நூல்கள்- 33கதைப்பாடல் - 17நாடகங்கள் - 12சிறுகதை - 2இலக்கணம்- 2இலக்கியம் - 2சொற்பொழிவு - 1கேள்வி பதில் - 1துணுக்குகள் - 1கட்டுரை - 1
இவரின் 'எதிர்பாராத முத்தம்' 'பொன்முடி' என்ற திரைப்படமாகியது.
கருத்தொருமித்த காதலர்கள் 'எதிர்பாராத முத்தத்' தில் முடிவில்
இறந்து விடுகின்றனர்.
ஆனால் 'பொன்முடி' திரைப்படத்தில் மணம் புரிந்துகொள்வதாக
முடிவினை மாற்றி படமாக்கியுள்ளனர்.
உலகெங்கிலும் சோக முடிவுகள் தாங்கிய காவியங்களே
அழியாப்புகழ் பெற்று இன்றளவும் வாழ்கின்றன.
1950களில் லைலா மஜ்னு, அனார்கலி போன்ற திரைப்படங்கள்
சோக முடிவுடன் வந்து வெற்றிபெற்ற திரைப்படங்கள்.

எதிர்பாராத முத்தமோ சோகமுடிவைக் கொண்டது. ஆனால் பொன்முடி
எனும் பெயரில் இதே காலக்கட்டத்தில் வெளிவந்தாலும் முடிவு
மாற்றியமைக்கப்பட்டது. இந்த மாற்றத்துக்கு திரைப்படத்துக்கு
பொருளுதவி செய்தவர் இட்ட நிபந்தனையே காரணம் எனக் கருதவும்
வாய்ப்பு உண்டு. ஆனால் இக்கூற்று பொய்யெனப்படும் விதமாக

"ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி" படத்தில் ஒரு சிறிய
வசனம் மாற்ற வேண்டும் என தயாரிப்பாளர் சொல்ல அதை மாற்ற
மறுத்து பாரதிதாசன் தான் பணமாகப் பெற்ற நாற்பதாயிரத்தை திருப்பிக்
கொடுத்துவிட்டார் என மு.சாயபு மரைக்காயர் குறிப்பிடுகிறார்.
புதுவை சட்டமன்ற தலைவராய் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பாரதிதாசன்.
72 ஆண்டு 11 மாதம் 23 நாட்கள் வாழ்ந்த அவர் 21.4.1964 செவ்வாய்கிழமை
புகழுடம்பை மட்டும் பெறுகிறார்.

காலம் கடந்தும் இன்னும் வாழ்கிறார்.

பாரதியை பார்ப்பனர் என்ற காரணத்தால் விலக்குபவரும்கூட பாரதியை
நேசித்த, பாரதியின் நட்பைப் போற்றிய பாரதியின் தாசனை பாவேந்தர்
எனக் கொண்டாடுகின்றனர்.

ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நூல்கள்:1. பாரதிதாசன் ஆய்வுக்கோவை- மு.சாயபு மரைக்காயர்2. பாரதிதாசன் வாழ்வினிலே - மு.சாயபு மரைக்காயர்3. நாவேந்தர் கண்ட பாவேந்தர் - டாக்டர் சகத்ரட்சகன்4. பாரதிதாசனின் புதிய நாடகங்கள்- டாக்டர் ச.சு. இளங்கோ 5. பாரதிதாசன் கவிதைகள்
அன்புடன்,
மதுமிதா.

No comments: