Monday, April 28, 2008

பாரதிதாசன் வாரம்-வ.ந.கிரிதரன்,ஆசிரிய‌ர், ப‌திவுக‌ள்.





பாரதிதாசன் பற்றிச்
சில குறிப்புகள்...
- வ.ந.கிரிதரன் -

பாரதிதாசன் சமுதாயத்தைச் சுட்டெரித்துக் கொண்டிருக்கும்
மூடநம்பிக்கைகளை, தீண்டாமைக்
கொடுமைகளை, பெண் சுதந்திரம்,
கைம்மைத் துயர், குழந்தை மணம்,
மதப்பிரிவுகளால் இரத்தவெறி
பிடித்தலையும் உலகம், போலிச் சாமியார்கள்.. எனச்
சமுதாயச் சீர்கேடுகளைப் பற்றிக் கொதித்தெழுந்து
பாடிய கவிஞன்.

அவனது கவிதைகளில் தமிழ்ப் பற்றும், திராவிடப்
பற்றும் மிகுந்திருக்கும். தொழிலாளர்களின்
உரிமைகளுக்காகப் பொதுவுடமை பற்றி விரிவாகப்
பாடிய கவிஞன். மதப்பிரிவுகளை, அவற்றாலுருவான
மூடநம்பிக்கைகளைப் பாரதியாரைப் போல மிகவும்
அதிகமாக எதிர்த்ததொரு கவிஞன்.
ஆனால் அவரும்
தனது முப்பது வயது வரையில் 'கடவுள் இதோ'வென்று
மக்களுக்குக் காட்டிக் கவிதை படைத்ததொரு கவிஞனே
என்பதை 'நானோர் பாவேந்தன்' என்னும் தன்னைப்
பற்றிய கவிதையில் "...முப்பதாண்டு முடியும்
வரைக்கும் நான் எழுதிய அனைத்தும் என்ன
சொல்லும்? கடவுள் இதோஎன்று மக்கட்குக் காட்டிச்
'சுடச்சுட அவன்அருள் துய்ப்பீர்' என்னும் ஆயினும்,
கடவுளுருவும் அனைத்தையும் தடவிக் கொண்டுதான்
இருந்ததென் நெஞ்சம்" என்று விபரித்திருக்கின்றார்.
இவ்விதமிருந்தவர் 'பாடலிற் பழமுறை பழநடை
என்பதோர் காடு முழுதும் கண்டபின் கடைசியாய்ச்
சுப்பிரமணிய பாரதி தோன்றியென் பாட்டுக்குப்
புதுமுறை, புதுநடை காட்டினார்' என்கின்றார்.
(ஆனால் அதே சமயம் மதங்களின் பெயரால்
நிலவும் அக்கிரமங்களை, தீண்டாமைக்
கொடுமைகளையெல்லாம் எதிர்த்தபோதிலும்
பாரதிதாசன் எல்லா மதங்களும் அடிப்படையில்
ஒன்றே; இன்புற்று வாழ்ந்திடப் போதிப்பவையே
என்றும் கருதியவர். அதனால்தான் 'ஒற்றுமைப்
பாட்டு' என்னும் கவிதையில் 'எல்லா மதங்களும்
ஒன்றே - அவை, எல்லாரும் இன்புற்று வாழ்வீர்கள்
என்றே, சொல்லால் முழங்குவது கண்டீர் - அவை,
துன்புற்று வாழ்ந்திடச் சொல்லியதும் உண்டோ?'
என்று அவரால் பாட முடிகிறது.
ஆனால் அதே சமயம்
'திக்கெட்டும் உள்ளவர் யாரும் - ஒன்று,
சேராது செய்வதே மதமாகு மானால்,
பொய்க்கட்டு நீக்குதல் வேண்டும் - அப்,
பொல்லாங்கில் எல்லாரும் நீங்குதல் வேண்டும்,
எக்கட்சி எம்மதத்தாரும் - இங், கெல்லாரும் உறவினர்
என்றெண்ண வேண்டும்' என்றும்
அதே கவிதையின் ஆரம்பத்தில் அவரால் மதங்களுக்
கெதிராகவும் குரல் கொடுக்கவும் முடிகிறது).

பாரதிதாசன் தனது கவிதைகள் பலவற்றில்
மதத்தினை, கடவுளினை, மதத்தின் பெயரால்
ஏற்பட்ட அனர்த்தங்களைப் பற்றியெல்லாம்
மிகவும் கடுமையாகச் சாடியவர்.

'சாதிமத பேதங்கள் மூட வழக்கங்கள், தாங்கி
நடைபெற்றுவரும் சண்டை உலகிதனை,
ஊதையினில் துரும்புபோல் அலைக்கழிப்போம்;பின்னர், ஒழித்திடுவோம்;புதியதோர் உலகம் செய்வோம்!
பேதமிலா அறிவுடைய அவ்வுலகத்திற்குப்
பேசு சுயமரியாதை உலகு எனப்
பேர்வைப்போம்! ஈதேகாண்! சமூகமே,
யாம் சொன்னவழியில் ஏறுநீ! ஏறுநீ! ஏறுநீ! ஏறே. ........
'அண்டுபவர் அண்டாத வகை செய்கின்ற
அநியாயம் செய்வதேது?- மதங்கள் அன்றோ?' என்றும்
('முன்னேறு' என்னும் கவிதையில்),
'மக்கள் பசிக்க மடத்தலைவர்க்கெனில் வாழை யிலை
முற்றும் நறுநெய்யாம்- இது மிக்குயிர் மேல்வைத்த
கருணையாம். ........ கோயிலிலே பொருள் கூட்டும்
குருக்களும் கோதையர் தோளினிற் சாய்கின்றார்-இங்கு
நோயினிலே மக்கள் மாய்கின்றார்' என்றும்
('சாய்ந்த தராசு' என்னும் கவிதையில்),

'சேசு முகம்மது என்றும்!-மற்றும்
சிவனென்றும் அரியென்றும்
சித்தார்த்தனென்றும் பேசி வளர்க்கின்ற போரில்- உன்
பெயரையும் கூட்டுவர் நீ ஒப்ப வேண்டாம்' என்றும்
('வாழ்வில் உயர்வுகொள்' என்னும் கவிதையில்)
இது
போல் இன்னும் பல கவிதைகளில் மதத்தையும்,
அதன் பெயரால் நடக்கும் அக்கிரமங்களையும்
சாடுமொரு கவிஞன். இருந்தாலும் மதங்களை
இவ்வளவுதூரம் சாடும் பாரதிதாசன்
'எங்கெங்கு காணிணும் சக்தியடா!
ஏழுகடல் அவள் வண்ணமடா!' என்று
சக்தியைப் பற்றிப் பாடுவதைப் பார்க்கையில்
மூடநம்பிக்கைகளை எதிர்த்தாலும் அவரும்
பாரதியாரைப் போல் , இப்பிரபஞ்சம் சக்தியொன்றின்
விளைவேயென்று , சக்தியொன்றில் நம்பிக்கை
வைத்துள்ளாரென்றுதான் கருத வேண்டியிருக்கின்றது.

'தித்திக்கும் பழம் தின்னக் கொடுப்பார்;
மதுரப் பருப்பு வழங்குவார் உனக்கு;
பொன்னே, மணியே, என்றுனைப் புகழ்வார்;
ஆயினும் பச்சைக்கிளியே அதோபார்!
உன்னுடன் பிறந்த சின்ன அக்கா,
வான வீதியிலே வந்து திரிந்து
தென்னங் கீற்றுப் பொன்னூசல்
ஆடிச் சோலை பயின்று சாலையில்
மேய்ந்து வானும் மண்ணுந்தன்
வசத்திற் கொண்டாள்! தச்சன்
கூடுதான் உனக்குச் சதமோ?
அக்கா அக்கா என்று நீ அழைத்தாய்.
அக்கா வந்து கொடுக்கச் சுக்கா
மிளகா சுதந்திரம் கிளியே?'

மேற்படி கவிதையில் கூண்டுக்குள் அடைபட்டு
பழம், பருப்புண்டு, அக்காவென்று அழைக்கும்
கூண்டுக் கிளிப்பெண்ணைப் பார்த்து, அவளின்
உடன்பிறப்பான சின்ன அக்கா எவ்விதம்
சுதந்திரமாக வானும் மண்ணுந்தன் வசத்தில்
வைத்து வாழ்கின்றாளென்று விபரிக்கும்
கவிஞர் அச்சுதந்திரத்தைக் கூண்டுக்கிளி
மனோபாவத்தை நீக்குவதால் மட்டுமே
பெறமுடியுமென்பதைக் குறிப்பாக அக்கூண்டுக்
கிளிக்கு உணர்த்துவதாக அமைந்துள்ளது மேற்படி
கவிதை 'சுதந்திர'த்திற்காகக் கொடுக்கவேண்டிய
விலையினையும் வேண்டி நிற்கின்றது.
விடுதலையில் நாட்டமற்று வாழும் கூண்டுக்
கிளிக்கு விடுதலையில் நம்பிக்கையூட்டுவதாக
அமைந்துள்ளது பாரதிதாசனின் மேற்படி 'சுந்ததிரம்'
என்னும் கவிதை.

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தனும் பாரதியாரையும்,
பாரதிதாசனையும் ஒப்பிட்டு நல்லதொரு நூலொன்றினை,
'பாரதியும் பாரதிதாசனும்', எழுதியுள்ளார். அதில் அவர்
பாரதிதாசன் பற்றிய தனது கருத்துகளில் பாரதிதாசன்
தன்னை நாத்திகரென அறிவித்துக் கொண்டாலும்,
அவர் உண்மையில் கடவுள் நம்பிக்கை
மிக்கவர்தானென்பதை பாரதிதாசனின் கவிதைகள்
சிலவற்றினூடு எடுத்துக் காட்டுகின்றார்.
நாத்திகரென்றால் கடவுள் என்னும்
கோட்பாட்டினையே முற்றாக மறுதலிப்பவராக
இருக்க வேண்டும்.
அனைவருக்கும் ஒரு கடவுள்
என்பதை நம்பும் ஒருவரை நாத்திகரென்று கூற முடியாது.

'சீருடைய நாடு - தம்பி திராவிட நன்னாடு.
பேருடைய நாடு - தம்பி
பெருந் திராவிடந்தான். ஓர் கடவுள் உண்டு -
தம்பி உண்மை கண்ட நாட்டில் பேரும்
அதற் கில்லை - தம்பி பெண்டும்
அதற் கில்லை தேரும் அதற் கில்லை - தம்பி'
சேயும் அதற் கில்லை ஆரும் அதன் மக்கள் -
அது அத்தனைக்கும் வித்து உள்ளதொரு தெய்வம் -
அதற் குருவ மில்லை தம்பி'
(கவிதைத் தொகுதி-3 ஏற்றப்பாட்டு-55)

என்னும் மேற்படி கவிதையினை உதாரணமாகக்
காட்டுவார் பேராசிரியர் அ.ச.ஞா. அவர்கள்
தனது நூலில். பேராசிரியர் அ.ச.ஞா.வும்
மேற்படி தனது நூலின் இன்னுமொரு
பகுதியில் பாரதிதாசனைப் பற்றி
'...உண்மையிலவர் கடவுள் நம்பிக்கை உடையவரே;
கடவுள் நம்பிக்கை உடையவரென்று சொன்னவுடன்
ஊரிலுள்ள காளி, மூளி, காட்டேரி, சங்கிலிக் கருப்பன்
ஆகிய அனைத்தையும் நம்பி, ஆடு, அறுத்து பூசை
போடுகிறவர்களோ அல்லது கோயிலுக்கு சென்று
பால் அபிஷேகம் செய்து சகஸ்ரநாம அர்ச்சனை
செய்கின்றவர்களோதாம் கடவுள் பக்தி
உடையவர்கள் என்று தயவு கூர்ந்து யாரும்
நினைத்து விட வேண்டா. ..............
பாரதிதாசன் கண்ட கடவுள் நம்முடைய
முன்னோர்கள் சொல்லிய அதே கடவுள்தான்.
கடவுள் என்ற பெயரிலேயெ பாரதிதாசன் கண்ட
பொருளும் அடங்கியிருகிறது. வாக்கு, மனம்,
கற்பனை ஆகிய அனைத்தையும் கடந்து
நிற்கின்ற காரணத்தினால்தானே அப்பொருளுக்குக்
கடவுள் என்று நம் பழந்தமிழர் பெயரிட்டார்கள்...'.
இவ்விதம் பேராசிரியர் அவர்கள் தனது வாதத்திற்கு
வலுச்சேர்ப்பார். இந்த அடிப்படையில் பாரதிதாசனை
முற்று முழுதாக நாத்திகவாதியென்று கூடக்
கூறிவிட முடியாது அவரே அவ்விதம் தம்மைப்
பற்றிக் கூறிக்கொண்டால் கூட.

பாவேந்தர் 1920இல் இந்திய விடுதலை அறப்
போராட்டத்தில் பங்கேற்றதாக அவரது வாழ்க்கைக்
குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாரதியார் 1921இல் இறந்த பின்னர்,
1929இல் 'குடியரசு, 'பகுத்தறிவு' ஏடுகளில்
எழுதத்தொடங்கிய பின்னரும் கூட 1930இல்,
அதாவது பாரதியார் இறந்து 9 ஆண்டுகள்
கழிந்த நிலையிலும் கூடப் பாவேந்தர் தனது
'சிறுவர் சிறுமியர் தேசிய கீதம்', 'தொண்டர்
நடைபாட்டு', 'கதர் இராட்டினப் பாட்டு' போன்ற
கவிதைகளையெல்லாம் (இவையெல்லாம்
பாரதியாரின் காலகட்டத்தில் இயற்றப்பட்டவை
யாயிருந்த போதிலும்) தொகுத்து நூலாக
வெளியிடுகின்றார். பாரதம் சுதந்திரம்
அடைவதற்கே இன்னும் பல ஆண்டுகள்
இருந்த நிலையில் இக்கவிதைகளைத்
தொகுத்து பாவேந்தர் வெளியிட வேண்டிய
தேவையென்ன?
பாரதியார் மறைந்த பின்னரும் கூடப் பாவேந்தர்
இந்திய தேசிய விடுதலைப் போரில் நாட்டம் மிக்கவராக இருந்தவரென்பதைத்தானே? மேலும் புதுவையில்
பாரதியார், அரவிந்தருட்படப் பல பாரத விடுதலைப்
போராட்ட வீரர்களுக்கு உதவுயதற்காகச் சிறை சென்றவர் பாரதிதாசனென்பதையும் இங்கு நினைவு கூர்தல்
பொருத்தமானதே.
பாரதியார் வாழ்ந்தது ஆங்கிலேயர்களின் ஆட்சியின்
கீழ் அமைந்திருந்ததொரு பிரதேசத்தில். ஆனால்
பாரதிதாசன் வாழ்ந்திருந்ததோ ஆங்கிலேய ஆட்சிக்
குட்படாத பிரெஞ்சு ஆட்சியின் கீழ் அமைந்திருந்ததொரு
பிரதேசத்தில். இவையெல்லாம் பாரதிதாசன் பாரதியாரைப்
போல் அதிகமான எண்ணிக்கையில் தேசிய விடுதலைப்
பாடல்களைப் பாடாமலிருந்ததற்குக் காரணாமாக
விருக்கலாம்.
பேராசிரியர் அ.ச.ஞா.போன்றவர்களின்
கருத்துகள் இவ்விதம்தானிருந்தன. அதற்காக
பாரதிதாசனின் விடுதலை உணர்வுகளை,
அவனது பங்களிப்பினைக் குறைத்து
மதிப்பிடுவதற்கில்லை.

உண்மையில் பாரதியின் தாசனாகக் கவிஞர்
இருந்ததைத்தான் அவரது கவிதைகளும்,
அக்கவிதைகள் பாடு பொருளும் கூறிநிற்கின்றன.
தான் வாழ்ந்த உடனடிச் சமூகத்தில் நிலவிய
கொடுமைகளைக் கண்டு மனம் வெதும்பி,
ஆக்ரோசத்துடன் குரல் கொடுத்த கவிஞனான
பாரதிதாசன், தமிழ்ப் பற்று மிக்க கவிஞனாக,
திராவிடக் கவிஞனாக, மார்க்சியக் கண்ணோட்டம்
மிக்கதொரு கவிஞனாக, பகுத்தறிவுக்கவிஞனாக,
சுயமரியாதை பற்றிப் பாடுமொரு கவிஞனாக,
பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுக்குமொரு
கவிஞனாகவெல்லாம் தன்னைத் தன்
கவிதைகளின் மூலம் வெளிப்படுத்தினார்.
பாவேந்தர் தன் குருவாகிய பாரதியாரைப்
போலவே, தன் நாட்டைப் பற்றியும், தன்
நாட்டு விடுதலைப் பற்றியும் தன்னையொரு
இந்தியக் கவிஞனாகவும் இனங்காட்டியவர்தான்.
பிரபஞ்சத்தின் மத்தியில் மனிதரை வைத்துத்
தெளிவுடன், அன்புடன் கருத்துகளை முன் வைத்த
கவிஞர்தான்.
மகாகவி பாரதியின் கவிதைகளில் காணப்படும்
முரண்பாடுகளெவ்விதம் அவனின் அறிவுத்தாக
மெடுத்தலையும் மனத்தினை வெளிப்படுத்தி
நிற்கின்றனவோ அவ்விதமே அவனது தாசனாகிய
பாவேந்தர் புதுவை சுப்புரத்தினத்தின் கவிதைளும்
வெளிப்படுத்தி நிற்பதிலென்ன ஆச்சரியம்!
<0>

No comments: